Search This Blog

Friday, December 31, 2010

Cute Rhymes

புத்தாண்டின் பிறப்பு

                    தமிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது.

                    முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம்.
                  
                    16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இருந்ததை ‘ஜூலியன் ஆண்டு’ என்கிறார்கள்.

                    அப்போது போப் ஆண்டவராக இருந்த கிரோகோரி ஏப்ரல் 1-யை மாற்றி ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார். அதுதான் அவரது பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் ‘கிரோகிரியன் காலண்டர்’ ஆனது.

                    அதுவரை ஏப்ரல் 1-யை புத்தாண்டாகக் கொண்டாடி வந்த மக்கள், ஜனவரி 1-யை புத்தாண்டாகக் கொண்டாட தடுமாறினர். நிறைய குழப்பங்கள் நேர்ந்தன. பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பின்னர். புத்தாண்டை ஒவ்வொரு நாடாக அங்கீகரித்தன.

                    ஸ்காட்லாந்து 1660-லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் 1700-லும், இங்கிலாந்து 1752-லும், பிரான்ஸ் 1852-லும் ஜனவரி 1-யை புத்தாண்டு தினமாக அங்கீகரித்தன. ஆனால் மக்கள் லேசுபட்டவர்களா என்ன? அரசாங்கம் சொல்லியும் கேட்காமல், ஏப்ரல் 1-யையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். பார்த்தன அரசாங்கங்கள். மக்களை திசை திருப்ப (ஜனவரி 1 பக்கம்), ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாக அறிவித்தன எனக் கூறப்படுகிறது.

                    அதுமுதல் மக்கள் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும், ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

                    இதுதாங்க புத்தாண்டு பிறந்த கதை. இது ஏதோ ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வரவேண்டிய செய்தி என்று நினைத்து விடாதீர்கள்.

குறை ஒன்றும் இல்லை கண்ணா!!!!!!!!!

மார்கழி 16- பொருள்+பாடல்

பாவயர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பனே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.


விளக்கம்:
சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.


"அனைவருக்கும் தலைவனான ஸ்ரீ நந்தகோபனுடைய கோயிலைக்காப்பானே! கொடிகளுடன் விளங்கும் தோரண வாயிலைக் காப்பானே! தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு நேற்றே, அனைவரையும் மயக்கும் நீல மணிபோன்ற நிறத்தையுடைய கண்ணபிரான், பறையை (மத்தளம்) தருகிறேனென்று வாக்களித்துள்ளான். எனவே, அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்கு தூய்மையுடன் வந்துள்ளோம். எனவே மறுக்காமல், வாசல் படியோடு சேர்ந்துள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு!"

Thursday, December 30, 2010

மார்கழி 15 - பாடல்+பொருள்


எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய்.

விளக்கம்: 
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.

[எழுப்புபவர்] "இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

[எழுந்திருப்பவர்] "என் தோழிகளே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னை எழுப்பாதீர்கள்". புறப்பட்டு வருகின்றேன்"

[எழுப்புபவர்] "பேச்சு வன்மையுள்ள உன் உறுதிமொழியையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் நன்கு அறிவோமே"

[எழுந்திருப்பவர்] "நீங்கள்தான் பேச்சுத்திறமையுடையவர்கள். அல்லது, நீங்கள் கூறும்படி நானே வல்லவளாக இருக்கட்டும்"

[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"

[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"

[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா."

Translate