Search This Blog

Friday, September 16, 2011

அவ்வையார் யார்? அற்புதத் தகவல்கள்.....






ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள  சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.


ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"ஒள' என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. "அவ்வை' என்று எழுதுவதே சரி.  பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :

1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை
1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.


"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'


என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள்.


3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

இந்தச் செய்யுள் தோன்றக் காரணமாக அமைந்த ஒரு சம்பவம் வருமாறு:
சோழ நாட்டு மன்னரின் அரச சபையிலே, புலவர்கள் எல்லோரும் சோழ மன்னரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வையாரின் முறை வந்தது அவர் "வரப்புயர" என்று மட்டும் கூறி விட்டு அமர்ந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தங்களது அறியாமையை மற்றவரின் முன் காட்டிக் கொள்ளவும் தயக்கம். ஆகவே எல்லோரும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மன்னன் கேட்டார் " அவ்வையே! அனைவரும் என்னையே புகழ்ந்து பாடினார்கள் தாங்கள் மட்டும் வரப்புயர என்று சம்பந்தமில்லாமல் வாழ்த்தினீர்கள். இதன் அர்த்தம் என்ன என்று கூற வேண்டும்.

அதற்குத் தான் அவ்வை மேற்கண்ட செய்யுளைப் பாடினார்.
வரப்பு எவ்வளவு உயரமாகக் கட்டுகிறார்களோ, அவ்வளவு உயரத்திற்கேற்றவாறு நெற்கதிர்கள் உயர்ந்து வளரும். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்தால் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தில் உயரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாட்டைத் தான் செங்கோல் ஆட்சி நடக்கும் நாடு என்று கூறுவார்கள். ஆட்சி நன்றாக நடந்தால், அந்நாட்டு மன்னனும் நன்றாக வாழ்வான் என்பது தான் இப்பாடலுக்கான பொருள்.

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்துக் கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடுவாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன.

ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்



2 comments:

  1. ennakku ippoludhuthan avvai patriya unmai therindhatu
    nandri

    kaliyamurthy

    ReplyDelete
  2. வன்சொல் இன்சொல்லை வெல்லாவாம்
    வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
    நெட்டிருப்புப் பாறைக்கு நெக்குவிடாப் பாறை
    பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்

    - ஔவையார்

    ReplyDelete

Translate