பிறந்த
நாள் வாழ்த்து மடல்.- 31-08-2015
வாழ்வின் முதல் வசந்தம் – அது
வருடத்திற்கொருமுறை தரும் சந்தம்.
வாழ்கவென வாழ்த்து கூறும் பந்தம்
வழிமொழிய நான் நுழைந்த
சொந்தம்.
எப்படிப் பிறந்தோம் என்பது வாழ்க்கையல்ல…
எக்காலத்திற்கும் எப்படி வாழ்வோமென்பதே வாழ்க்கை.
ஏய்த்துப் பிழைப்பது உனது சுதந்திரமல்ல.
ஏணிப் படியாக்கி பிறரை அழகு பார்ப்பதே உன் தந்திரம்
நம்பிக்கைக் கொண்டு நல்லுலகைக் கட
நாணயமானவர்களோடு கைகோத்து நட
நாளை நமதாகுமென்ற நல்லினத்துடன் எழு
நாற்றிசையும் ஓங்குமே உனது பழு
கடினமென்று காதில் விழுவதை அப்புறப்படுத்து.
காட்டாறு வெள்ளம்போல் அதனைச் சுத்தப்படுத்து.
காளை இவன் கலையின் மகனென பெருமைப்படுத்து.
கலாவின் கனவு நாயகன் காதலனென முன்னிறுத்து.
சலசலப்புக்கு அஞ்சாத சாமான்யனாக இரு.
சரித்திரத்தில் சரம் தொடுக்க சஞ்சரித்த கரு.
சாதித்தவர்களின் சரித்திரத்தை அலசிப் பயில்.
சர்வ கடாட்சம் கிடைக்குமே கந்தனின் மயில்.
ஆராய்ந்து பார்த்து அன்பு கொள்ளாதே.
ஆழ்மனதில் நிறைந்த பண்பை தள்ளாதே.
அன்பு நிறைந்த அன்பர்களைக் கொள்.
அதிகம் வைக்காதே உன் அகத்தில் கொள்.
இன்னல் தருபவர்களை இழிவாகப் பேசாதே.
இன்னமும் இருக்கிறது இனிய வாழ்வு மறவாதே.
இரக்கமில்லாதவர்களென எதிரியை ஏசாதே.
இறங்கி ஒருநாள் வருவார்களென கனியாதே.
புத்திமதி கூறுமளவிற்கு நீ புல்லருவியல்ல.
புகழுடம்பை பொய்க்கிரையாக்கும் பேதையுமல்ல.
புத்திரனாய் புகழ் மணக்கப் பிறந்தவனே.
புன்னகை கொண்டு ஆள்வாயே இத்தினமே.
தளிர் நடையிட்ட தாளங்களைக் கண்ட கண்கள்
தளதளக்கும் தவப்புதல்வனைக் காண்கிறது என் பண்கள்.
தரணியில் தார்மீகப் பொறுப்பேற்க ஏங்குகிறது மனம்.
தாயாய் நின்று தாலாட்டுகிறது இக்கணம்.
வாழ்க என்றென்றும் நீ வாழ்கவென்று.
வருந்தியோரை வருந்தாமல் காக்கவென்று.
வணங்குகிறேன் வடிவேலனை இத்திருநாளென்று
வணங்கா முடியாய் வாழ்க பல்லாண்டுயென்று..