Search This Blog

Sunday, October 9, 2011

தமிழ் வளர்த்த சான்றோர்கள்


19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி  ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். ஆய்வும் தொகுப்புமே இவர்களது  மூச்சு. இந்த தமிழ் வளர்த்த சான்றோர்களில் சிலரைப் பற்றி ஒரு சில வரிகள் இங்கே….
உ.வே.சாமிநாத அய்யர்
சென்னை மாநிலக் கல்லூரி எதிரே இன்னும் சிலையாக, ஓங்கி நின்று கொண்டிருக்கிறார் உ.வே.சாமிநாத அய்யர். அவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும். “ஏடு காத்த ஏந்தல்” என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திசிபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் பயின்ற உ.வே.சாமிநாத அய்யரின் முக்கியப் பணி சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாபாடல், பெருங்கதை முதலிய பழைய இலக்கியங்களை சுவடிகளில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார். குறுந்தொகைக்கு உரை அகப்படாததால் அவரே உரையும் எழுதினார். நன்னூல் மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை என இலக்கண நூல்களையும் பதிப்பு செய்தார். அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் மட்டும் சுமார் 24 மாட்டு வண்டிகள் அளவுக்கு தேறிற்று.
பரிதிமாற் கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்ததென்னவோ 32 ஆண்டுகள்தான். அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை. தமிழ்மொழியை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான். 1870ல் பிறந்த இவர் எம்.ஏ. தேர்வில் மாநில அளவில் முதலாவதாக தேறியவர். தனித்தமிழ் இயக்கத்துக்கு முன்பே தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். இவரது “தமிழ் மொழி வரலாறு” மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.
தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டுவெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர். இந்திய அறிஞர்கள் பங்கு பெற்ற அரங்குகளிலும், வெளிநாட்டு அறிஞர்கள் அரங்குகளிலும் தமிழ் பண்பாட்டுத் தூதுவராக பணியாற்றியவர். சமூகவியல், சைவ சித்தாந்தம், உளவியல், மொழியியல், வரலாறு, கல்வெட்டு, மூல பாட ஆய்வு என இவரது அக்கறைகளும் பங்களிப்பும் விரிந்தது. இலக்கியத் துறையில் இருப்பாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால் திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தொ.பொ.மீ. சிலப்பதிகாரத்திற்கு இவரைப் போன்று வேறு எவரும் திறனாய்வு எழுதியதில்லை.
மறைமலை அடிகள்
தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக “யாக்கை” என்ற தமழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே ‘தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம்.
வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர். 1876 ஜூலை 15இல் திருக்கழுக்குன்றத்தில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்தார். தமிழ்ப் புலவர் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழும், சோம சுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் பயின்றார். கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய மறைமலை அடிகள் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் நன்கு கற்றவராக இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுக்குப் பங்காற்றினார்.
தேவநேயப் பாவாணர்
தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்த தமிழறிஞர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநரும் கூட. உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியராக ஆரம்ப கால வாழ்க்கையைத் தொடங்கிய பாவாணர், தமிழக அரசின் தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக உயர்ந்தவர். மன்னார்குடி பின்லே பள்ளியில் பணி ஆற்றிய போது படித்த இசைக் கல்வி அனுபவத்தின் பயனாக “இசைத் தமிழ் கலம்பகம்” என்ற இசைத் தமிழ் நூலை எழுதினார். தமிழர் வரலாறு, தமிழர் திருமணம், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என அவர் தமிழினம் குறித்து எழுதிய நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை தனித் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் தீவிரமாக  வலியுறுத்திய பாவாணர், நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழை வேராகக் கொண்டவை என்பதை வடமொழி வரலாறு என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.
கா. அப்பாத்துரையார்
அந்த தந்தைக்கு மகன் நாற்பது மொழிகள் கற்க வேண்டுமென ஆசை. ஆனால் மகன் கற்றது 18 மொழிகள்தாம்.  தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெரும்புலமை பெற்றார். அவர்தாம் பல்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். குமரிக்கண்டம் பற்றி முதலில் ஆய்வு செய்தவர் இவரே. அப்பாத்துரையார் இந்தி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும், இந்தி எதிர்ப்பை எதிர்கொண்டு துணைவியாருடன் சிறை புகுந்தவர். “இந்தியாவின் மொழிச் சிக்கல்” என்ற ஆங்கில நூல் எழுதியமைக்காக மத்திய அரசுப் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா அமெரிக்காவின் யேல் பல்கலைக்குச் சென்றபோது அவருக்கு 16 பக்கங்களில் குறிப்புகளை வழங்கியவர் அப்பாத்துரையே.
சிதம்பர நாத செட்டியார்
கும்பகோணத்தில் 1907ல் பிறந்தவரான பேராசிரியர் அ.சிதம்பர நாத செட்டியார், மாபெரும் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆங்கிலம் – தமிழ் – அகராதியை உருவாக்கி தமிழுக்கு பெரும் சேவை செய்யும் பணியை இவரிடம்தான் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஒப்படைத்தார். உலக அரங்கில் தமிழ் இலக்கியங்களின் உயர்வை உணர்த்தும் “An introduction to tamil poetry”  என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். உலகின் பல்வேறு இடங்களில் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் உரையாற்றி பெருமை சேர்த்தவர்.
ஆபிரகாம் பண்டிதர்
ஆகத்து, 2, 1859-இல் பிறந்தவர். தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழு நேர மருத்துவராகப் பணியாற்றினார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தனது அண்ணன் சீனி.கோவிந்தராஜனிடம் முறையாக தமிழ்ப் பயிற்சி பெற்றார். சுயமரியாதை இயக்கச் சார்பாளராக தனது வாழ்வைத் தொடங்கியவர். திராவிடன், குடியரசு, ஊழியன் போன்ற இதழ்களில் பணிபுரிந்தார். புத்தர் ஜாதகக் கதைகளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான். 1950களின் இறுதியில் கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இதற்கு கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை தரவுகளாகப் பயன்படுத்தினார். தமிழக வரலாற்றை தெளிவாக வரைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. 19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான நூலாக 19ம் நூற்றாண்டில் “தமிழ் இலக்கியம்” என்ற நூலை எழுதினார்.
மு. வரதராசன்
மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கும் புகழ் பெற்றவர். 1912ம் ஆண்டு ஏப்ரல் 25ல் பிறந்தார். தமிழில் வித்வான் படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1939ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்திசை மொழிகளில் விரிவுரையாளர் ஆனார். இவர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” நூல் இன்னமும் தமிழ் மாணவர்களுக்கு பயனாக உள்ளது. நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள் என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார். இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த அவரது ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக் களஞ்சியமாக நோக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் மங்கி இருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
ச. வையாபுரிப் பிள்ளை
1891ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பிறந்த ச.வையாபுரிப் பிள்ளை, 20ஆம் நூற்றாண்டின் முதன்மையான தமிழ் ஆராய்ச்சியாளர்களுல் ஒருவர். சிறந்த பதிப்பு ஆசிரியராக விளங்கியவர். தொல்பொருள் மற்றும் ஒப்பிலிக்கிய சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கை ஆராய முயன்றவர். தமிழில் மிக அதிக ஆர்வம் இருந்தும் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணி செய்தார். உ.வே. இறந்ததற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்டவர். 1926ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்த தமிழ் பேரகராதியில் தலைமைப் பதிப்பாசிரியர் இவர்தான். 1936 முதல் 1946 வரை சென்னை பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராக விளங்கினார். மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சி. ஆகியோருக்கு நண்பர். வ.உ.சி.யின்  நூல் பதிப்புகளில் இவரும் பங்கு பெற்றவர்.
மயிலை சீனி. வேங்கடசாமி
சங்க கால இலக்கியம், வரலாறு, நுண்கலை, தொல்லியல் மற்றும் சமூகவியல் என ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் பங்களிப்பு அளப்பரியது. இவரது தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரது குடும்பத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களை சேகரித்து வந்தனர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார். 1974 அக்டோபர் மாதம் 10ஆம் நாள் காலமானார்.
ரா.பி.சேதுப்பிள்ளை
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எதுகை மோனையைப் பயன்படுத்தி மேடைப் பேச்சில் தமிழகத்தையே கட்டிப் போட்டவர். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இவர் பிறந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராசவல்லிபுரம். திருநெல்வேலியில் வழக்கறிஞராகவும், நகர மன்றத் தலைவராகவும் பதவி வகித்த இவர் தமிழின் மேல் ஏற்பட்ட நாட்டத்தால் பச்சையப்பன் கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ஆராய்ச்சி நூல்களில் “ஊரும் பேரும்” புத்தகம் மிகப் புகழ் பெற்றது. இலக்கிய நூல்களில் இன்கவித் திரட்டு, செஞ்சொற் கவிக்கோவை ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. “தமிழ் இன்பம்” என்ற இவரது நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. பழைய தமிழ் இலக்கியங்களுக்கும் மறுமலர்ச்சி நூல்களுக்கும் ஒருவகை தொடர்புப் பாலமாக ரா.பி. சேதுப்பிள்ளை இருந்ததாக பி.ஸ்ரீ. ஆச்சாரியா குறிப்பிடுகிறார்.

பாரதியார் பற்றிய தொகுப்பு இது

சுப்பிரமணிய பாரதி  
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது


வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரைகாசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணிகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

    * குயில் பாட்டு
    * கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன்                                                  மீது   பாடிய பாடல்களின்
                                         தொகுப்பாகும்.
   * பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.


பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.


தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பாரதியார் நினவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு  இல்லமாகவும்,சென்னை  திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.


22 comments:

 1. It is very useful thank you. Nice

  ReplyDelete
 2. மிக்க நன்றி

  ReplyDelete
 3. Very nice and it is very useful

  ReplyDelete
 4. It was awesome and very useful 😊😊😊😊👍👍👍

  ReplyDelete
 5. Not in the form of கட்டுரை

  ReplyDelete
 6. Super sir.thank you sir

  ReplyDelete
 7. Thank you this was very helpful

  ReplyDelete
 8. Super sama👍👍👍👍👍👍👍

  ReplyDelete

Translate