Search This Blog

Saturday, January 28, 2012

கண்ணகி
அபி மற்றும் அபர்ணா

Monday, January 9, 2012

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு!
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

                "உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்", என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக, எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம். எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக் கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்). எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும்  செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும் கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ  அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?


கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

                அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும், விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம் (இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன் மற்றெவரும்  சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு, விண்மீன்கள் காணாது போகின்றன. பெண், ஆண், அலி மற்றும்  ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று, இவை  அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள் பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட திருவடிகளைப் பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே!


வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்; பிறங்கொளி - மின்னும் ஒளி.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -17


செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

                வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே ! சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும் எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு, நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத் தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடைய நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை, நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த இந்நீரில் பாய்ந்தாடுவோம் !


கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி; சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -16


முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

                மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த் திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப் போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின் மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின் திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க ! அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக ! நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும் எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடு தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள் என்பது போலப் பொழிக !


இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்; முன்னி - முற்பட்டு.

Sunday, January 8, 2012

திருவெம்பாவை       மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்

  திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
  பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.

திருவெம்பாவை நோன்பு
    திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.
    இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.

Thursday, January 5, 2012

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -15


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


                               அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி, நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும் உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான கண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும் அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை ! வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும் வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி, கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான, மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !


ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்; பார் - உலகம்; அரையர் - அரசர்.

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

                காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட, (அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை - சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள் !


பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

Translate