Search This Blog

Saturday, January 29, 2011

6. இசை ஞானியார் நாயனார்


            சிவனடியார்கள் அறுபத்து மூவரில் சுந்தர நாயனார் தலை சிறந்தவராவார். அவரது பிறப்பே அலாதியானது.

           சிவனடியார்களில் ஒருவரான ஆலாசுந்தரம் என்பவருக்குச் சிவபெருமான் கொடுத்த சாபத்தால் இசைஞானியார் புனிதவதியின் கர்ப்பத்தில் கருவாக ஜனித்தார். இசை ஞானியார் சடையனார் என்ற நாயனாரின் துணைவியாராவர்.

           இசை ஞானியார் மிகச்சிறந்த சிவபக்தையாக விளங்கியவர். சிவனடியார்களை மிகவும் மதித்து போற்றி நடப்பவர்.

           சிவபெருமான் மீது இவர் கொண்ட பற்று காரணமாகவே சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றெடுக்கும் புனிதப் பணியினை இவருக்கு அளித்தார்.

           சுந்தரமூர்த்தி நாயனாரின் புகழ்ப்போலவே அவரைப் பெற்றெடுத்த இசை ஞானியாரின் புகழும் ஞாலம் உள்ளவும் நிலைத்து நிற்கிறது.

5. ஆனாய நாயனார்


              ஆனாய நாயனார் மங்கலமெனும் ஊரில் ஆயர்குலத்தில் பிறந்த சிவபக்தர் ஆவார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம்.

             கண்ணனைப் போலவே புல்லாங்குழல் ஊதி பசுக்கூட்டங்களை இவர் சந்தோஷப்படுத்துவார். ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல நாயனார் மட்டும் தனி வழியில் நடந்து சென்றார்.

             செல்லும் வழியில் ஒரு கொன்றை மரம் பூச்சொரிந்து நிற்பது கண்டு அம்மரத்தடியில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார் அவர்.

             தேனினும் இனிய அதிமதுரமான இசை அந்தப் புல்லாங்குழலில் இருந்து வெளிவந்தது. அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.

Wednesday, January 26, 2011

4. அரிவாட்டாய நாயனார்


                  சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

                  இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன.

3. அமர்நீதி நாயனார்


               வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

               அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.

Saturday, January 22, 2011

2. அப்பூதியடி நாயனார்


சிவஸ்தலங்கள் அனைத்தையும் வணங்கும் எண்ணத்துடன் திங்களூரில் அருகில் திருநாவுக்கரசர் செல்லும்போது வழியில் உள்ள தண்ணீர்ப் பந்தலுக்குத் தன்னுடைய பெயர் இட்டிருப்பது கண்டு வியந்து அருகில் இருந்தவரிடம், "இப்பெயர் சூட்டியது யார்?" என்று கேட்டார்.


"இந்தத் தண்ணீர்ப் பந்தல் மட்டுமல்ல. இவ்வூரிலுள்ள அறச்சாலை, நந்தவனம் எல்லாவற்றுக்கும் தங்கள் பெயரைச் சூட்டி தங்கள் மீது பைத்தியம் பூண்ட சிவ பக்தர் அப்பூதியடிகள் ஆவார்" என்றார்.


தன்மீது அப்பூதியடிகள் வைத்திருந்த அளப்பெரிய அன்பைக் கண்டு சிலிர்த்துப் போய் அவருடைய இல்லத்திற்குச் சென்று உரையாடினார். திருநாவுக்கரசர் அவரை வாரித்தூக்கி ஆனந்தக் கூத்தாடினார்.

திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்த அப்பூதியடிகள் வாழை இலை அறுத்து வரும்படி தன் புதல்வனை தோட்டத்துக்கு அனுப்பினார். வாழைத் தோட்டத்தில் இருந்த நாகம் அவரது புதல்வனை தீண்ட, விஷம் தலைக்கேறி, அவன் கீழே விழுந்து இறந்து போனான்.

Friday, January 21, 2011

1. அதிபத்த நாயனார்



அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர். மீனவச் சமூகத்தை சேர்ந்தவர். எனவே தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்லுவார். நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.

மீன்களே கிடைத்திடாத காலங்களிலும், மிக அரிதாக கிடைக்கும் மீனையையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டினியாக கிடப்பார். தலையே போயினும் தலை மீனை இறைவனுக்கு அளிக்கும் செயலை விடவே இல்லை.

ஒரு முறை மிகுந்த பஞ்சம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என எவருக்கும் மீன் கிடைக்கவில்லை. எல்லோரும் வருந்தினர். அந்தச் சூழ்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் அதிபத்தர். கொண்ட கொள்கையை தவறவிடவில்லை. தினமும் ஒரு மீன் கிடைக்கும், அதை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.

தினம் நிகழும் செயலைக் கண்ட சிவபெருமான், அன்று மீனுக்கு பதிலாக வைரம் போன்ற விலையுயர்ந்த நவரத்தின மணிகள் பதித்த தங்க மீனை அதிபத்தருக்கு கிடைக்கச் செய்தார். அந்த மீனைக் கொண்டு உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் அதிபத்தர் உணவிடமுடியும். ஆனால் அதிபத்தர் தனக்கு கிடைத்த முதல் மீன் என்றே எண்ணினார். சிறிதும் தயங்காது அந்த பொன் மீனை கடலில் விட்டார்.

அடுத்தகனம் ஈசன் வானில் தோன்றி “பக்தா, கொண்ட கொள்கையில் எந்நாளும் நின்று என்னை மகிழ்வித்தாய். இனி என்னோடு இருக்கும் சிவனடியார்களோடு வந்து இணைவாயாக “, என்று சொல்லி மறைந்து போனார்.



அறுபத்து மூன்று நாயன்மார்கள்

நாயன்மார்கள்
இந்து மதத்தில் சைவ சமயத்தால் சிவ வழிபாட்டின் மூலம் புகழடைந்தவர்கள்தான் நாயன்மார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.


நாயன்மார்களில் பெண்கள்
அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.


இவர்களின் வரலாற்றை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.........

1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்


Wednesday, January 19, 2011

**எனது எமரால்டு அணியின் மகத்தான வெற்றி**

அந்தி சாயும் அழகிய மாலை வேளையில்
ஆசிரியர் கூட்டம் ஓர் கூடாரத்தில் குழும
அன்ன நடை கொண்ட அழகிய நடையுடன்
நகை ததும்ப தலைமையாசிரியர் வந்தமர்ந்து
வணக்கம் கூறி உரையினைத் தொடங்க
கடல் மடை திறந்த வெள்ளம் போல்
கணக்கில்லா உத்திகளை கூறும் அச்சமயத்திலும்
அணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி
திறமை கொண்ட திருமகள்களை
அணித் தலைவியாக முன்மொழிய,
முன்மொழிந்த திருமகளுள் ஒருவள்
எனது பெயரை மனமுவந்து உரைக்க
அடியேன் செய்வதறியாது திகைப்புடன் நின்று !
திரும்பிப் பார்க்கும் தருணம் கூட பொருட்படுத்தாது !!
கைத்தட்டலுடன் ஆசனத்தில் அமர வைத்தனர் அடியனை....
ஐயகோ!!

Tuesday, January 18, 2011

தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்

முன்னுரை:

  "வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க ஒரு சமுதாயம் தமது பண்பாட்டுக் கோலங்களை நிலைநிறுத்துவதற்குத் தொழிலுடன் இணைந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்தி வருவதை நாம் காண்கிறோம்."பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தமது சமூக வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துகள், மதநடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும்' என்பர் ஆய்வாளர்கள். இத்தகைய பண்பாட்டுடன் ஒட்டிய ஒரு திருநாளாகப் தைப்பொங்கல் நாள் முக்கியத்துவம் பெறுகின்றது
பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.

Friday, January 14, 2011

மார்கழி 30 பாடல் + விளக்கம்

இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று என்புறுவரெம்பாவாய்


விளக்கம்:
" திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் தந்தருளிய கண்ணபிரானை, கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை, பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைவனை, ஆபரணங்களை அணிந்த ஆயர்பாடி மகளிரை பறை என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்ட கண்ணனின் வரலாற்றை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த புதிய தாமரை மலர்களாலான மாலையை உடுத்திய அந்தணருமான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளால் அருளிச் செய்த தமிழ் பாமாலை முப்பது பாடல்களையும் தவறாமல் ஆர்வத்துடன் உள்ளத்தூய்மையுடன் பாடுபவர்கள், மாலையணிந்த நான்கு திருத்தோள்களையும், சிவந்த கண்களையும், அழகிய முகத்தையும் எல்லா செல்வங்களையும் உடைய திருமகளை நாதனாய் பெற்ற ஸ்ரீமன் நாராயணின் திருவருள் பெற்று, எப்பொழுதும், எவ்வித குறையுமின்றி பேரின்பத்துடன் வாழ்வார்கள்."

இத்துடன் திருப்பாவை முற்றிற்று.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

மார்கழி - 29 பாடல் + விளக்கம்

உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மெய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.



விளக்கம்;

"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உன் தாமரை மலரைப் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றி நாங்கள் விரும்பியவைகளைக் கொடுத்து அருள் செய்யவேண்டும். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மேலும் மேலும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்தருள வேண்டும்."

Wednesday, January 12, 2011

சாரணர் இயக்கம்








சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும்.



சாரணர் இயக்க தந்தையின் வரலாறு:
                   வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், 'எதற்கும் தயாராக இரு! " எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் தேதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது

சாரணர் இயக்கத்தின் பிறப்பு:
                   புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார்.

மார்கழி 28- பொருள்+பாடல்


சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களை கோபிக்காது, எங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக!



கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பொருள்:
                "பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவும் படைத்த நாங்கள், ஆயர்குலத்தினில் பிறந்த உன்னை எங்கள் குலத்தவனாக பெற்றடைய பெரும் புண்ணியத்தை செய்துள்ளோம். யாதொரு குறைவும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக்கொண்ட கண்ணனே! உன்னுடன் எங்களுக்கு ஏற்ப்பட்ட உறவை, யாராலும் அழிக்க முடியாதது. அற்ப அறிவைப் பெற்ற சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மதவன் போன்ற) சிறிய பெயர்களினால் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களைத் தந்து அருள வேண்டும்."

Tuesday, January 11, 2011

மார்கழி 27- பாடல்+பொருள்

நோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன?

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:
              "பகைவர்களை வெல்லும் கோவிந்தா! உன் புகழைப் பாடி பறையைப் பெற்று, பின் நாங்கள் இன்னும் உன்னிடத்து பெறவிரும்பும் பரிசுகள் யாவையெனில், அனைவரும் புகழத்தக்க முன் கையில் அணியும் வளைகளும், தோளுக்கு இடும் ஆபரணங்களும், தோடும், காதணிகளும், காலில் அணியும் ஆபரணங்களும், புதிய ஆடைகளும் ஆவன. இவைகளப் பெற்று புத்தாடைகளையணிந்து பால் சோறு மூடும்படி நெய் பரிமாறி, அவற்றை முழங்கையிலிருந்து வழியும்படி உண்டு, உன்னுடன் நாங்கள் கூடி, இன்புற்றிருந்து, குளிர வேண்டும். இவ்வாறாக எமது நோன்பு முடிவடைதல் வேண்டும்."

Monday, January 10, 2011

எனக்குப் பிடித்த சில பாரதியின் பாடல்கள்

1.பாரதியாரின் நாட்டுப் பற்று

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)


2.பாரதியாரின் தமிழ் மொழிப் பற்று

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

நினைவில் நிற்கும் பாரதியாரின் ஞானப் பாடல்கள்


1. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2

2. ஜய பேரிகை
பல்லவி
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!

மார்கழி 26- பாடல்+பொருள்

மார்கழி நீராட தேவையான பொருள்களை அளிப்பாயாக!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல் வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பொருள்:
"பக்தர்களை உன்மீது மயக்கங்கொள்ளச்செய்தவனே! நீல மணி போன்ற நிறத்தையுடையவனும், யாதவ குலவிளக்கு போன்றவனும், ஆலின் இலையில் துயில்பவனுமான கண்ணனே! நாங்கள் மேற்கொள்ளயிருக்கும் நோன்புக்கு தேவையான பால் போன்ற நிறமுடைய, உன் இடக்கையில் உள்ள பஞ்சசன்னியத்தை ஒத்த சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்ககளையும், பல்லாண்டு பாடுபவர்களையும், தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு அருள் புரிந்து அளிப்பாயாக!"

மார்கழி 25- பாடல்+பொருள்

உன்னைப் பிரிந்து யான்படும் துயர் நீக்குவாய்!

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: 
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்

Saturday, January 8, 2011

மார்கழி 24- பாடல்+பொருள்

உனக்கே மங்களம் உண்டாகுக!

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்று அங்குத்தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இறங்கு ஏலோர் எம்பாவாய்!

விளக்கம்:
"இந்திரனை மஹாபலி துன்புற்றிய காலத்தில், இவ்வுலகங்களை இரண்டடியால் அளந்தவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். சீதையைத் தேடிப் போய் தென் இலங்கையை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமைக்கு மகிமையுண்டாகுக. வண்டி உருவில் வந்த சகடாசிரனை உதைத்து வெற்றி கொண்டவனே, உன் புகழ் ஓங்கட்டும். கன்று வடிவாக வ்ந்த அரக்கனை, எரிகருவியாகக் கொண்டு விளாமர வடிவாக வந்த அரக்கனையும் கொன்றவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோவலர்களைக் காத்தவனே! உனக்கு மங்களம். பகைவரை அழிக்கும் உன் வேலுக்கு மங்களம். எப்பொழுதும் உன் வீர செயல்களைக் கூறி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு கருணை புரிவாயாக!"

மார்கழி 23- பாடல்+பொருள்

எங்கள் குறைகளை கேட்டு, அருள் புரிவாயாக


மாரிமலை முழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீறரியசிங்க்ச்ம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
போத்ருமா போலே நீ, பூவைப் பூ வண்ணா!உன்
கோயில் நின்ற் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மழைக் காலத்தில், பெண் சிங்கத்துடன் உறங்கிகொண்டிருக்கும் ஆண் சிங்கம், தூக்கம் தெளிந்து எழுந்துவந்து, தீக்கதிர்கள் பறக்கும் தன் கண்களை விழித்து, பிடரி மயிர் நாற் பக்கமும் படரும்படி எழுந்து உடம்பை அசைத்து, கம்பீரமாக பேரொலி எழுப்பி குகையிலிருந்து புறப்படுவது போல, நீயும் உன் கோவிலிலிருந்து கிளம்பி, இம்மண்டபத்திற்க்கு எழுந்தருளி, வேலைப்பாடுகள் மிகுந்த அரியணையில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியங்களை கேட்டறிந்து அருள் செய்வாயாக!"

மகாகவி பாரதியார்


வரலாறு:

        சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

        தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.


Thursday, January 6, 2011

மார்கழி 22- பாடல்+பொருள்

கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல்வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.

விளக்கம்:
                           "பரந்த பூமியை ஆண்ட மன்னர்கள், தமக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என்னும் கர்வம் அடக்கப்பட்டு, இங்கு வந்து உன் அரியாசனத்தின் கீழ் சங்கமிருப்பது போல நாங்களும் இங்கு வந்தடைந்தோம். எனவே, கிண்கிணி சதங்கைப்போலே, பாதி மலர்ந்த செந்தாமலரைப் போன்று உன் சிவந்த கண்கள் எங்கள் மேல் விழிக்கலாகாதோ? சந்திர, சூர்யர்களைப்போன்ற அவ்விழிகள் எங்கள் மேல் விழுமாகில் எங்களின் அனைத்து பாபங்களும் கழிந்து விடும்."

Wednesday, January 5, 2011

மார்கழி 21- பாடல்+பொருள்

 
 உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, இடைவிடாது வள்ளலைப் போன்று பால் சுரக்கும் பசுக்களை அதிக அளவில் படைத்த நந்த கோபனின் மகனே! நீ எழுந்திருப்பாயாக! பக்தர்களை காத்து அருள்பவனே! அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரம் செய்த ஒளி உருவானவனே! படுக்கையிலிருந்து எழுந்திரு! உன் வலிமையினைக் கண்டு தங்கள் வலிமையை இழந்து, உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் விழும் பகைவர்களைப்போல உன்னை புகழ்ந்து கொண்டு, துதித்து, உன் திருமாளிகைக்கு வந்துள்ளோம்!"

கலைஞரின் குறளோவியம்

          வீதியில் பசு ஒன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக் குட்டி தாயைச் சுற்றி சுற்றி ஓடியும், தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்த கன்று தொலைவில் போய்விடக் கூடாது என்பதிலே தாய்ப் பசு கண்ணும் கருத்துமாய் இருந்தது, கன்றுக்குட்டி மான் போல துள்ளி வீதிக்கு நடுவே ஓடும், பசுவோ அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போல பயமுறுத்தும், தாயின் கோபத்தைப் புரிந்து கொண்ட இளங்கன்று உடனே அதன் அருகே துள்ளி வரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.

Tuesday, January 4, 2011

மார்கழி 20- பாடல்+பொருள்

கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும், அவர்களுக்கு துன்பம் நெருங்குவதற்கு முன்னரே அவர்களைக்காக்கும் கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச்செய்பவனே! பகைவரை அடக்கும் வலிமையுடையவனே! பகைவருக்கு துன்பங்களைக்கொடுப்பவனே! உறக்கம் நீங்கி எழுந்துவாராய்! செப்பைப்போன்ற மென்மையான மார்பகங்களையும், சிறு இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து, உங்கள் மணாவாளனான கண்ணனையும் எங்களுக்களித்து நாங்கள் நீராடச்செய்வாயாக!"

Monday, January 3, 2011

மார்கழி 19- பாடல்+பொருள்

நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும் ஒத்துவராது."

Sunday, January 2, 2011

மார்கழி 18- பாடல்+பொருள்


நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும், படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்! கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள் போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!"

மார்கழி 17- பாடல்+பொருள்


கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பிரான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.



விளக்கம்:
வாயில் காப்போன் கதவைத்திறந்து, பெண்மணிகைகளை உள்ளே விட, முதற்கட்டில் சென்று, பள்ளீகொண்டிருக்கும் கண்ணன், யசோதை, பலதேவர் மூவரையும் எழுப்புகின்றனர்.
"பல விதமான ஆடைகளையும், குளிர்ந்த பானங்களையும், பல்வகை உணவுப்பண்டங்களையும் வாரி வழங்கும் எங்கள் பெருமான் நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடியையொத்த பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! வானளாவி ஓங்கி வளர்ந்து அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே! பொன்னால் இழைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வா! பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்."

Translate