Search This Blog

Thursday, March 8, 2018

இணையம் - கட்டுரை
நாளும் செய்வோம்  நல்ல தொண்டு!
      மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாதது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் அன்றாடம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றிக் கெண்டேயிருக்கின்றன.தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்என்ற பாரதியின் கனவை இன்று இணையம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
     கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கல்லிலிருந்து ஓலைக்குத்தாவி, அங்கிருந்து காகிதங்களுக்குத் தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். கணினி  வருகையால் கற்றது கையளவு கல்லாதது உலகளவுஎன்னும் முதுமொழி மறைந்து கற்றது கடுகளவு கல்லாதது கையளவுஎன்னும் புதுமொழியாக உருவெடுத்துள்ளது. உள்ளங்கையில் உலகம்இது இணைய வரவினால் ஏற்பட்ட புது மொழி. இன்றைய ஊடகங்களில் உலக அளவில் ஒரே நொடியில் தொடர்பு கொள்ளவும், தகவல்களை அனுப்பவும்,; பெறவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரே சாதனம் இணையம் மட்டுமே. இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப்பை மட்டுமா இணைக்கிறது? தமிழையும் வானளாவி இணைத்துவிடுகிறது என்று கூறினால் அது மிகையாகாது...
           வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
            விரல்கள் பத்தும் மூலதனம்எனும்
     தாராபாரதியின் தாரக மந்திரத்தைக் கொண்டுப் பார்க்கும்போது அறிஞர், வல்லுநர், ஆர்வலர் போன்றோரின் உழைப்பினால் உதிர்ந்த பூக்களாய்ச், சிப்பிக்குள் முத்தாய்க் கிடைக்கும் மூலதனமே நம் கணினித் தமிழாகும்.
.   தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கின்றது. தகவல் தொடர்பில் உலகம் இன்று ஒரு குடும்பம் போல சுருங்கிவிட்டது. அதாவது, ‘உலகமே ஒரு கிராமத்திற்குள்’ . இதற்கு இணையத்தின் வரவு மிக முக்கிய பங்காற்றியதென்பதை யாரும் மறுக்கமுடியாது. செய்திப் பரிமாற்றம், கல்வி, வணிகம், தொலைத்தொடர்பு, வியாபாரம், நூலகம், அருங்காட்சியகம் போன்ற பல்வேறு சேவைகளுக்கும், பொழுது போக்குக்கும் இணையம் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. உலகிலுள்ள மொழிகளில் சிறப்பு மிக்க தமிழ் மொழி இணையத்தில் மிக முக்கியமான பங்கைப் பெற்றுக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லை..
   உலகிலுள்ளவர்களை, சகோதர, சகோதரியாய் ஒன்றிணைக்கும் மிகச் சிறந்த தகவல் தொடர்பு ஊடகம் இணையம். இதனை ஒரு பன் மொழி ஊடகம் என்றும் கூறலாம். இணையத்தின் வரவால் தமிழும் தமிழ் இலக்கியங்களும் அழியாத வரம் பெறறுவிட்டன.   இணையத்தின் வரவுக்கு முன்பு இலக்கியங்களைப் பாதுகாப்பதில் சிக்கல்கள் காணப்பட்டன. பல இலக்கியங்கள் இயற்கை அழிவுகளின் போது அழிந்தும் சிதைந்தும் போயின. பலவற்றை கறையானும் அரித்து நாசமாக்கின. இந்நிலை அச்சு இயந்திரத்தின் பின்பு ஓரளவு தடுக்கப்பட்டன. ஆனால், இன்று கணினிமயப்படுத்தி அவற்றை இணையத்தின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கின்ற தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது. இணையத் தளங்களிலும் இணைய வானொலிகளிலும் தமிழ் வெற்றியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

      இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள -தமிழ்ச் செய்திகளை வாசிக்க பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழ் நூல்களை மின் நூல்களாக மாற்றி அவற்றை வாசிக்கவும், தேவையானபோது பெறவும் முடியும். தமிழ்ப் பாடல்களை இசையோடு கேட்டு மகிழமுடியும். இன்று ஒரே சமயத்தில் இலட்சக்கணக்கானவர்கள் பல்வேறு வலைத் தளங்களில் தமிழோடு தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். தமிழ்மொழி இந்நிலையினை அடைந்தமை நவீன தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட ஒரு சாதகத்தன்மை எனலாம்.
      மதுரைத் திட்டம் என்னும் இணையத்தளம் பழந்தமிழ் இலக்கியங்களை மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இத்தளத்திலும் பல நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தேடுதல் வசதியும் உள்ளது. சென்னை லைப்ரரி என்ற தளத்தில் சிறுகதைகள், நாவல்களைப் படிக்க முடியும். பழைய இலக்கியங்களையும் இத்தளத்தினூடாகப் படிக்க முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தர முயற்சி செய்வதும் சுட்டிக்காட்டத்தக்கது.
     பல இணைய இதழ்களும் தமிழை வளர்த்து வருகின்றன.,.. தமிழ் இணையப்பரப்பில் தற்போது வலைப் பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்று வருகின்றது. இதனூடாகவும் இணையத்தில் தமிழ் மிகச்சிறந்த இடத்தைப்பெற வாய்ப்பு உள்ளது என்று கூறுவதைவிட விஞ்சி நிற்கிறது என்றே கூறலாம்.

       தமிழில் மின்னஞ்சல் அனுப்பவும் ஆங்கிலத்தில் உள்ள விடயங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வாசிக்கவும் இணையத்தில் வசதிகள் உள்ளன. அதே வேளை தமிழில் உள்ள விடயங்களை பிற மொழிக்கு மொழி மாற்றம் செய்யவும் முடியும்.
மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தளம் உதவி வருகின்றது. கணினியில் ஆங்கிலம் வகித்த இடத்தைத் தமிழும் வகிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி தமிழின் தனித்துவத்தைப் பாதுகாப்பது சாலச் சிறந்ததாகும்.
     யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
           இனிதாவ தெங்கும் காணோம்’.
     என்பதனை இணைய வாயிலாக தமிழர்களின் இணைப்பைக் காண முடிகிறது. மேலும்,
           சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
           தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

     பட்டிதொட்டிகளிலெல்லாம் தமிழின் மனம் கணினி வழி உலகமெங்கும் வீசப்படவேண்டும்.
           பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
           தமிழில் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்,
      
     ஒரு சமுதாயம் இன்றையப் பணிகளை இன்றையக் கருவி கொண்டுச் செய்ய வேண்டும். இன்றையப் பணியை நேற்றையக் கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலிவடையும்என்னும் கருத்திற்கேற்ப இணையத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குவதும் அதனைப் பண்படுத்துவதும் தமிழ் உணர்வுமிக்க ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் கூட.. துணிந்து செய்வோம்! முனைந்து செய்வோம்! தமிழிருக்கும் வரை தமிழனும் இருப்பான். சாகா வரம் பெறுவான். தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு!!!
                                                           ஆக்கம்
                                         சித்ரகலா கலைச்செல்வன்

தமிழா தமிழ் பேசு!


செல்வி. ஜோயல்

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் (21.02.18)

என் உயிரில் கலந்த கருவே
கன்னியாகுமரியின் திருவே
குமரிக் கண்டத்தின் பிறப்பே
கூடலில் கலந்த உறவே
தொன்மையான தெளிவே
தோற்றம் பல கொண்ட தேவே
சங்கம் வளர்த்த மதுரையே
சாமானியனையும் வசப்படுத்திய வாழ்வியலே
இரண்டடியில் உலகாள்பவளே
இன்பத்துப் பாலையும் தந்தருளிய தாட்சாயினியே
இலக்கண இலக்கிய வரையரை கொண்டவளே
இயல் இசை நாடகத்தை தன் வசமாக்கியவளே
நாடே போற்றும் நல்லவளே
நாமகளின் மூத்தவளே
உடல் பொருள் ஆவி என்றானவளே
ஊடலையும் கூடலையும் ஒருங்கிணைத்தவளே
பெரிய புராணத்தைத் தந்தருளிய பேரின்பமே
பேச்சாற்றலை வளர்க்கும் மொழியாற்றல் கொண்டவளே
சங்கப் பாட்டாய் சங்கமித்தவளே
சமரசக் கருத்துகளை முன்மொழிந்தவளே
குறுந்தொகையாய் குறுகித் தரித்தவளே
கூல வாணிகத்தின் அடைமொழியே
தலைவனுக்குத் தோழியாய் நின்றவளே
தலைவியை தூது சென்று ஆற்றுப்படுத்தியவளே
ஐம்பெருங்காப்பியமாய் ஆராதனை செய்பவளே
ஐங்கரனின் அன்னையாய் மிளிர்ந்தவளே
அகத்தியனின் அருள் வாக்கில் நின்றவளே
அதிவீரராம பாண்டியனாய் களை எடுக்க வந்தவளே
ஆற்றுப்படை நூலில் அழகாய் அலர்ந்தவளே
ஆயகலைகள் அனைத்தையும் அழகியலில் அருளியவளே
பரணியாய்ப் பார் புகழப் பிறந்தவளே
பாணனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்தியவளே
நாலடியாய் நறுந்தேனைத் தெளித்தவளே
 நால்வகைப் பாக்களை நாவினில்  நவின்றவளே
ஐங்குறுநூற்றின் ஐராவதம் நீயே
ஐம்புலன்களை அடக்கி ஆள வைக்கும் அசரீரியும் நீயே
பண்பாட்டின் நாயகியே
பாட்டியலைத் தந்தவளே
மூவேந்தர்களின் திறம் போற்றியவளே
முக்கூடல் பள்ளாய் மின்னியவளே
எட்டுத்தொகையைக் கொண்டவளே
ஏலாதி மாமருந்தாய் மலர்ந்தவளே
\பத்துப்பாட்டாய் பல கதையாய் நின்றாய்
பாஞ்சாலியாய் உன்னை உருவகப் படுத்திவிட்டாய்
கம்பனையும் கபிலனையும் கவிஞனாக்கினாய்
கார் நாற்பதாய் கார்மேகமாய் காட்சி தந்தாய்
அகம் புறமென நீ ஆண்டாலும்
அகத்தே கருத்தே புறத்தே உள்ளோரை
புதுமொழிகள் கொண்டு புத்துயிர் பெறச்செய்தாய்
சாதி மத இனங்களைக் கடந்தவளும் நீ
சாத்திரங்கள் பல கொண்ட நற்சான்றிதழும் நீ
கலியாய் துள்ளினாய்; காவடியாய் சிந்து பாடினாய்
ஆண்டாண்டுகள் சென்றாலும் ஆயிரத்தில் ஒருவள் நீ
ஆதிசேஷனின் தலைவியும் நீ
மறுமலர்ச்சியாய் மலர்ந்தவளும் நீ
மாற்றம் ஒன்றே மாறாதவளும் நீ
செம்மொழியாய் இருப்பவளும் நீ
செம்மார்ந்து செழித்தோங்கச் செய்பவளும் நீ
உன்னை எண்ணி எழுத்துகள் உருண்டோடுகிறது
ஏக்கப் பெருமூச்சோடு என் மனம் மறுக்கிறது
நிறுத்தத் தடை செய்கிறது;
 நித்தமும் உன் மணம் பரப்பும் என்கிறது
இன்றோடு முடியவில்லை என் எழுத்துரு
எண்ணமாய் என்னுருவில் வண்ணமித்துள்ளாய்
வகை வகையாய் வசமாக்குகிறேன்..
வானளாவிய உம் புகழை...\
வாழும் காலம் வரை அல்ல.....
நீ வாழும் காலம் வரை...
வாழிய செந்தமிழ்!! வாழிய நற்றமிழ் !!! வாழிய வாழியவே!!!!

சித்ரகலா கலைச்செல்வன்


Translate