முன்னுரை:

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.
திருவள்ளுவர் வரலாறு:
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
திருவள்ளுவர் காலம்:
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.