Search This Blog

Tuesday, October 2, 2018

Monday, October 1, 2018

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். இலங்கை. கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா இடம்: வீரசிங்கம் மண்டஉலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். இலங்கை.
கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா
இடம்: வீரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம்.


சுற்றுலாவின் நோக்கம்:
உலகளாவிய, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி அறிதல், செயல்படுத்துதல்.
நிகழ்வுகள்:
உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் சார்பில் யாழ்ப்பாணத்தில் நடந்த கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு, ஆய்வரங்கத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். இவ்விழா, 27.01.18 அன்று, வீரசிங்கம் மண்டபத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று, நம் பண்பாட்டைப் பறை சாற்றும் பண்பாட்டு ஊர்தி பவனி புறப்பட்டது.அதன்பின், தலைமை விருந்தினராக, திரு.சி.வி. விக்னேஷ்வரன், மாண்புமிகு முதலமைச்சர், வடமாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கவர்னர் ரெஜினால்டு குரே அழைக்கப்பட்டிருந்தார்.
 இவர்கள் தலைமையில், பண்பாட்டுக்கொடி, மங்கல விளக்கு ஏற்றி இவ்விழா தொடங்கப்பெற்றது. இதன்பின், முதல்வர், கவர்னர் இவர்களின் உரைகள் தொடங்கியது. அதன்பின், சர்வமதப் பெரியோர்களின் ஆசியுரைக்குப்பின்,ஆய்வரங்கம்,கருத்தரங்கம்,கவியரங்கம்,பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போன்றன நடைப்பெற்றன. இதில், நான் ஆய்வரங்கத் தலைப்பில், ‘அடிப்படைக் கற்றல் கற்பித்தல் ஓர் பார்வை’ என்ற தலைப்பில் பேசினேன்.

இதில்,மொழிக்கூறுகளை எவ்வாறு கற்பிக்கலாம், கற்றல்,கற்பித்தலுக்கான உத்திகள் முதலிய கூறுகளைக் கொண்டு கல்வியினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று,  சின்மயா வித்யாலயா, விருகம்பாக்கம்,சென்னை 92. பள்ளியின் சார்பாகப் பேசினேன்.
அதன்பின் மறுநாள், 28.01.18 அன்று பாரதிவிழா நடைப்பெற்றது. இதில், பார்வையாளராகப் பங்கேற்று செய்திச் சிந்தனையைப் பெற்றேன்

மூன்றாவது நாள், 29.01.2018 அன்று முல்லைத் தீவு மாவட்டம்,வடக்கு மாகாணம் வவுனியா,போராளிகளின் மறுவாழ்வு மையம் புதுக்குடியிருப்புக்குச் சென்றோம். அங்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உலகப் பண்பாட்டு மையம் சார்பாக, நிதி உதவிகள் வழங்கப்பட்டது.. நம் பள்ளி சார்பாக சிறு நன்கொடை உதவியும் செய்தேன்

நான்காவது நாள், யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு (COLOMBO) சென்றோம். அங்கு, முனைவர் சதிஷ்குமார், M.A,M.PHIL,D.LIT,(USA)JP அகில தமிழ்க் கல்வி பொறுப்பாளர்,உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், அவர்கள், நாங்கள் பள்ளியின் சார்பாக வந்திருப்பதை அறிந்து, எங்களுக்கு அவரின் விருந்தினரின் மாளிகையில் அடைக்கலம் தந்து, ஒரு சில நற்செயல்களைச் செய்தார்

எ.கா. 30.01.18 அன்று, நாங்கள் இங்கு இருக்கும் பள்ளிகளில் கற்பித்தல் உத்திகள் கட்டமைப்புகளைப் பார்வையிட வேண்டும் என்று கேட்டதன் பேரில் The Royal College, Colombo என்ற
        கொழும்பின் அரசுப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்


 அங்கிருக்கும் ஆசிரியருடன் உரையாடினோம். மாணவர்களைச் சந்தித்தோம்.. அதில், குறிப்பிடத்தக்கது, அவர்களின் பாட அமைப்பு முறை, கற்பித்தல் உத்திகள், கட்டமைப்பு வசதிகள், வெளியரங்கு பயிலகம், மாணவர்கள் தன்னிச்சையாகக் கற்கும் சூழல், புதுமை, கற்பனை வளம், இயற்கைக்கு முக்கியத்துவம், நெகிழி இல்லா பயன்பாடு இப்படிப் பல செய்திகள் என்னை ஈர்த்தது. பின்பு, அங்கிருந்து, புத்தமடத்திற்குச் சென்று, அங்குள்ள, முக்கிய வரலாற்றுத் தலங்களைப் பார்வையிட்டபின் அங்கிருந்து,புறப்பட்டு சென்னை வந்தோம்.
இப்பண்பாட்டுச் சுற்றுலாமூலம்  கிடைத்த பயன்:
Ø  ஒரு நாட்டின் நாகரிகம்,பண்பாட்டை அறிய முடிந்தது.
Ø  தமிழை வளர்க்க, செழுமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய அடுத்த கட்ட செயல்கள் என்னவென திட்டமிட வழிகோலியது.
Ø  ஒரு  நாட்டின் வளர்ச்சி, கல்வியை நோக்கியே அமைந்துள்ளது என்பதையும் பெற முடிந்தது.

பாரத ரத்னா காமராஜ் கல்வி அறக்கட்டளை, திருவாரூர். 116 – வது பிறந்த நாள் விழா.


பாரத ரத்னா காமராஜ் கல்வி அறக்கட்டளை, திருவாரூர்.
116 – வது பிறந்த நாள் விழா.
நாள்: 29.07.18
நேரம்: காலை 11 மணி முதல்....
இடம்: AKM திருமண மண்டபம், தெற்கு வீதி, திருவாரூர்.
விழாவின் நோக்கம்:
Ø  ஒவ்வொரு துறையிலும் உள்ள சாதனையாளர்களைக் கௌரவித்தல்.
Ø  கல்வியின்பால் ஈடுபாடு கொள்ளும் பொருட்டு மாவட்ட வாரியாக, பத்து & பன்னிரண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்த பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசளித்து ஊக்குவித்தல்.
Ø  கல்விச் சேவையில் ஈடுபடும் பெருமக்களைப் பாராட்டி ஊக்குவித்தல்.
Ø  நலிந்த கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல்.
Ø  காமராசரின் திட்டங்களை விள்க்குதல்.
விழா நிகழ்வு:
v  காமராசரின் படம் திறந்து வைத்து, மங்கல விளக்கு ஏற்றி அவரைப் பற்றி சான்றோர்களும் ஆன்றோர்களும் உரை நிகழ்த்தினர்.
v  காமராசரின் சாதனைப் பட்டியல் அடங்கிய மலர் வெளியிடப்பட்டது.
v  கல்விச் சேவையைப் பாராட்டி, சாதனையாளர்களுக்கு கேடயம், சால்வை வழங்கப்பட்டது.
v  காமராசரைப் பற்றியும் அறக்கட்டளை நடத்தும் நிகழ்வு பற்றியும் என்னால், உரை நிகழ்த்தப்பட்டது.
v  மதிப்பெண் அடிப்படையில் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
v  இறுதியாக்,  நாட்டுப்பண்ணுடன் விழா மாலை 02 மணி அளவில் முடிவடைந்தது.
விழாவின் பயன்பாடு:
v  காமராசரைப் பற்றிய பல்வேறு சுவையான நிகழ்வுகளை நுகர முடிந்தது.
v  தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டுமென்ற உத்வேகத்தைத் தந்தது.
v  மாணவர்களுக்கு, கல்விச்சேவை எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியது.

v  கல்வியில் மாணவர்களை எப்படியெல்லாம் பங்குபெறச் செய்யலாம் என்ற எண்ணம் திண்ணமானது.

கற்றல் கற்பித்தலில் கதை, கட்டுரை, நாடகம் ஒரு பார்வை.
கற்றல் கற்பித்தலில் கதை, கட்டுரை, நாடகம் ஒரு பார்வை.
நன்று கருது!
நாளெல்லாம் வினை செய்!!
நினைப்பது முடியும்!!! - -மகாகவி பாரதி
முன்னுரை:
இன்றைய கல்வி உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரினும், அடிப்படைக் கற்றலான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் இன்றேல், எவ்வித முன்னேற்பாடான மாற்றமும் நிகழாது என்பதே உண்மை. அவ்வாறு இருப்பின், இந்த நால்வகைத் திறன்களை எந்தெந்த உத்திகளோடு கொண்டு குழந்தைகளிடம் சேர்த்தால், குழந்தைகளின் கல்வி மேம்படும், அதற்கு ஆசிரியர்களாகிய நாம் என்னென்ன உத்திகளைக் கையாளப் போகிறோம், குழந்தைகளின் இலக்கிய வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்னென்ன? என்பது பற்றியும் அதற்குப் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் ஒரு சிலவற்றைப்பற்றிப் பார்ப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
கல்வி:
கல்வி என்பதில், ‘கல்’ என்பதற்குக் கற்றல் என்பது பொருள். ‘வி’ என்பது சிறப்புக் கருதி வந்தது. கல்வியின் நோக்கம், அறிவை வளர்ப்பது; ஆற்றலைப் பெருக்குவது; மனித வளத்திற்கு மாண்பு சேர்ப்பது; சமுதாயத்தை இணைப்பது; சமத்துவத்தை மலர வைப்பது; சகோதரத்துவத்தை வளர வைப்பது. கல்வியே மனிதனை மனிதனாக மாற்றும்; விலங்கு நிலையிலிருக்கும் மனிதனை, மனித நிலைக்கு மீட்டுக் கொணரும். ஏட்டுக் கல்வியும், செவிவழிக் கல்வியும் சிந்தனையை வளர்க்கும்; சிறந்த சொற்களை வரவழைக்கும்; நற்செயல்களை உருவாக்கும்.
“நன்றே செய்; ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்; இன்றும் இன்னே செய்”
என்ற கபிலர் அகவல் கருத்திற்கிணங்க ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலும் நம்மிடமிருந்தே தொடங்கினால், கண்டிப்பாக உலகளாவிய தமிழ்க் குழந்தைகளாக  இருந்தாலும் சரி, உலகளாவிய தமிழை செம்மைப்படுத்தலாம் என்பதே என் திண்ணம்.
கற்றல் & கற்பித்தல்:
கற்பித்தலால், கற்பவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றமே கற்றல். கற்றல் என்பது ஒருவன் தன் வாழ்வில் அறிவு, பழக்கவழக்கங்கள், மனப்பான்மைகள், செய்திறன்கள் ஆகியவற்றை படித்தறிவதன் மூலமாகவோ, சுய அனுபவங்கள் வாயிலாகவோ அல்லது பிறரால் கற்பிக்கப்படுவதாலோ பெறுவதாகும்.
கற்பித்தல்:
ஆசிரியர் தனது மாணவர்கள் கல்வியைக் கற்றுக்கொள்வதற்காக செய்யும் அனைத்து செயல்பாடுகளுமே கற்பித்தல் எனப்படும். கற்பித்தல் என்பது, குழந்தைகளிடம் விரும்பத்தக்க அறிவு, செய்திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை ஒருவர் கற்றறிய குறிப்பிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்படும் தொழிற்சார் செயல்பாடாகும். கற்பித்தல் என்பது, தூண்டுதல், வழிகாட்டுதல், நெறிபடுத்துதல், ஊக்குவித்தல் ஆகிய செயல்களாகும் என பர்ட்டன் என்ற மொழியியலறிஞர் கூறுகிறார். மேலும், கற்பித்தல், மருத்துவத்தைப் போன்றது. அதாவது, ஒரு நல்லாசிரியர், ஒரு நல்ல மருத்துவரைப்போல, படைப்பாற்றலையும், தூண்டலையும் , பயன்படுத்துதலும் இன்றியமையாதது என்கிறார் சில்வர்மேன் என்ற அறிஞர். இனி, மழலையர்களுக்கான, கதை, கட்டுரை, நாடகங்களை வகுக்கும் வியூகங்கள் பற்றி சற்று அலசுவோம்.
கதை:
காது – காதை - கதை – என்று வந்துள்ளது என்பர் கல்வியாளர்கள். குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகம் தரவல்லது கதை கேட்பதாகும். கதை கேடபது போன்றே, கேட்ட கதைகளைச் சொல்வதிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. எனவே, கதைகளை மொழிப்பாட ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்.

கதை சொல்வதால் விளையும் நன்மைகள்:
Р கதைகள் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அறிவையும் நல்லொழுக்கத்தையும் வளர்க்க வல்லவை.
Р எண்ணம், கற்பனை, நினைவாற்றல் உற்று நோக்கும் பண்பு வளரும்
Р குழந்தைகளின் பண்பு வளர்ச்சிக்கு அடிகோலும். அழகுணர்ச்சியை வளர்த்துத் தனி விருப்பங்களுக்கு நிறைவு தரும் வகையிலும் அமையும்.
Р அடிப்படைத்திறன்களான, கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறன்களில் பயிற்சி அளிக்க கதைகள் உதவுகின்றன.
Р கேட்டல் திறனை வளர்க்க, கதையின் மையக்கருத்தைக் கேட்டல், கதை நிகழ்ச்சி பற்றிக் கேட்டல், கதை உறுப்பினரின் பண்பு பற்றிக் கேட்டும் கேட்டல் திறனை வளர்க்கலாம்.
Р பேசுதல் திறனை வளர்க்க, கதைகளைக் கூறச்செய்தல், வாய்மொழிப் பயிற்சிக்கும், முறையாகப் பேசுதலுக்கும் நன்கு உதவும் வகையில் கதையில் வரும் வருணனைகள், நிகழ்ச்சிகள், சொற்றொடர்களைக் கையாளுவதின் வாயிலாக அதிக பயிற்சி கிடைக்கும்.
Р கதைகளை ஆர்வமுடன் படிப்பதால், ஒருமுகப்படுத்தும் திறன் வளர்கிறது. சொற்களஞ்சியப்பெருக்கம், விரைவாகப் படிக்கும் பழக்கம், கருத்துகளை அறிந்து கொள்ளும் பழக்கம் உண்டாகிறது.
Р எழுதுதல் திறன் மூலம், திருத்தமான சொற்களைக் கையாளும் திறன், நிகழ்ச்சிகளை முழுமையாக எழுதுதல், கருத்துகளுக்கேற்ப பத்தி பிரித்து எழுதும் பயிற்சி முதலிய கிடைக்கும். மேலும், வினா, வியப்பு, மேற்கோள், நிறுத்தற்குறிகள் பயன்படுத்துவதில் நல்ல பயிற்சி கிடைக்கும்.
கதை கூறும்போது ஆசிரியர் கவனிக்க வேண்டியவை:
v   நல்ல உணர்ச்சியுடனும் உற்சாகம் ஏற்படுமாறு ஆர்வத்துடன் சொல்ல வேண்டும்
v  எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி, முகபாவம், குரல் முதலியவற்றை மாற்றிக் கதைகள் கூற வேண்டும்.
v  அளவுக்கு மீறிய உடல் அசைவுகள், குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கும். எனவே, மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
v  குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கதைகள் அமைதல் வேண்டும்.
v  கதையைப் போலச் செய்தலின்றி, சொந்த நடையில் கூற வேண்டும்.
v  கதையில் உள்ள நீதி, படங்களைப் பயன்படுத்தி, விளக்கிக் கூற வேண்டும்.
குழந்தைகள் கதை சொல்லும் முறை:
         ஆசிரியர் கூறிய கதையை குழந்தைகள் திரும்பத் தம் சொந்த நடையில் கூறச் செய்ய வேண்டும். இதனை, ஒரு மாணாக்கர் வகுப்பு முழுவதும் சொல்லலாம் அல்லது சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து தங்கள் குழுவில் கூறச் செய்யலாம். கதையின் தொடக்கத்தை மட்டும் கூறி, மீதியைக் குழந்தைகள் கூறுமாறும், சொல்லையோ சொற்றொடரையோ கூறி மீதியைக் கூறுமாறும் கூறச் செய்து ஊக்குவிக்கலாம்.
கதைகள் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.
எ.கா.
முதல் வகுப்புக்கு உரியவை:
        குழந்தைகளின் வாழ்க்கை நுகர்வுகளை ஒட்டியனவாக அமைதல் வேண்டும். முக்கியமாக, குழந்தைகளைப் பற்றிய கதைகளாயிருந்தால் நன்று. எ.கா. துள்ளித் துள்ளி, அம்மா அம்மா என்பன போன்ற அடுக்குத் தொடர்களும், பள பள, சொர் சொர் என்பன போன்ற இரட்டைக் கிளவிகளும் கதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறுமாயின் குழந்தைகள் மிகவும் விரும்பிக் கேட்பர். பறவைகள், விலங்குகள், இயற்கைப் பொருள்களை மாற்றுவது, நல்லவர்களுக்கு நலம் தருவது, தீயவர்களுக்குத் தண்டனை, மாயக்கதைகள் முதலியவற்றை மிகவும் விரும்புவர்.
இரண்டாம் வகுப்புக்கு உரியவை:
          முதல் வகுப்பில் கூறப்பட்டதை விரித்துக் கூறலாம். நகைச்சுவைக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பூனை வளர்த்தது, கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கியது, பீர்பால் கதைகள் முதலியவற்றைக் கூறலாம்.
மூன்றாம் வகுப்பு முதல் உயர்வகுப்புகளுக்கு உரியவை:
          இவ்வகுப்புகளுக்கு கீழ்க்காணும் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
எ.கா.
Ø  பிராணிகள்,மரம்,செடி,கொடிகள் பேசும் வகையில் அமைந்த கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மோகினி,மாயா விநோதக் கதைகள், அலாவுதீனும் அற்புத விளக்கும்.
Ø  நாடோடிக்கதைகள் – தேசிங்குராஜன்,  புராணக்கதைகள் – பாரதம் – இராமாயணம்.
Ø  வரலாற்றுக்கதைகள் – கட்டபொம்மன் – மருதுபாண்டியர் கதைகள்.
Ø  வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் – காந்தி, நேரு, அப்துல்கலாம், கென்னடி போன்றோரின் வரலாறுகள்,  விஞ்ஞானம் தொடர்பான கதைகள் – இரயில் கண்டுபிடிப்பு, ஆகாய விமானம், கணினி, இணையம் தொடர்பானவை,
Ø  விநோதக்கதைகள் – விக்கிரமாதித்தியன் கதைகள்.
இவ்வாறு, மேலே குறிப்பிட்டவை தவிர, வேறு பல்விதமான கதைகளையும் ஆசிரியர் தேர்ந்தெடுத்து வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் நன்று.
கதைகள் பலவகைகள் இருப்பினும், இயற்கைக் கதைகள் மற்றும் நகைச்சுவைக் கதைகளை ஆசிரியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். இயற்கைக் கதைகள் என்பன, மனித வாழ்க்கையைத் தவிர, உயிர்ப்பிராணிகளின் வாழ்க்கை வரலாறுகள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பேசுவதுபோல் இக்கதைகள் அமைந்திருக்கும். ஈசாப்புக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் ஆகியவற்றையும் இதனுள் அடக்கலாம். எ.கா. புறாவும் வேடனும், சிங்கமும் சுண்டெலியும் போன்ற கதைகளைக் குழந்தைகள் படிக்கும்போதும் கேட்கும்போதும் போதும் அக்கதைகள் பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை நிலையை உணர, அறிய, நீதியை நல்க ஓர் உயர்ந்த பண்பாட்டை இக்கதைகள் வளர்க்கின்றன.  சாதாரண மனிதன் பலவகையான வாழ்க்கைகளைத் துய்க்க வாய்ப்புகள் இல்லை. பட்டறிவில்லாத வாழ்க்கையில் பட்டறிவு எய்துவது கடினம். அப்பட்டறிவை, நன்கு எழுதப்பெற்ற இக்கதைகளின் மூலம் பெறலாம்.

நகைச்சுவைக் கதையில், வேடிக்கை கதைகளைச் சேர்க்கலாம். எ.கா. வேதாளம் விக்கிரமாதித்தியன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், அலாவுதீனும் அற்புத விளக்கும் கதைகள், தெனாலி இராமன் – முல்லா கதைகள் முற்றிலும் வித்தியாசமானவை. படிக்கப் படிக்கச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கதைகள் அமைவதால் குழந்தைகள் இக்கதைகளை  நிச்சயம் விரும்பிக் கேட்பர். விரும்பிப் படிப்பர். சிரிப்பு மனித இனத்திற்கு மட்டுமே கிடைத்த அற்புதப் பண்பு. சிந்தனையும், விகாரமுமற்ற சிரிப்பு உடலுக்கு நல்லது. இக்கதைகள் குழந்தைகளுக்கு சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கையின் தராதரங்களை உணர்த்துவதற்குத் துணையாக நிற்கின்றன. நகைச்சுவைக் கதைகளில் வரும் முக்கிய நோக்கம் வேடிக்கையே. அவற்றிலுள்ள நீதிப் பண்பு இரண்டாம் படியே என்பதை உணந்து ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். நகைச்சுவை இன்றேல் வாழ்க்கை இனிக்காது என்று நம் தேசத்தந்தையே ஓரிடத்தில் கூறியிருக்கிறார். நகை முகம் கொண்டு வாழும் வாழ்வே நாகரீக வாழ்வு. ஆதலால், குழந்தைகளின் வாழ்க்கையில் நகைத்து நிற்கின்ற நிலையே அடிப்படையாக அமையுமாறு அவர்களைப் பழக்குதல் வேண்டும். இதற்கு நகைச்சுவைக் கதைகள் அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்.
கட்டுரை:
சொற்களைக் கொண்டு வாக்கியங்களால் கட்டி உரைப்பது கட்டுரையாகும். ஒரு பொருள் பற்றிய கருத்துகளை ஒழுங்குபடுத்திப் பொருட்செறிவோடு, விளக்கமான நடையில் எடுத்துரைப்பதே கட்டுரையாகும்.
கட்டுரையில், ‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி உரைத்தல் முதலான சிறப்புகள் இருக்க வேண்டும்.
கட்டுரை எழுதுவதன் நோக்கம்:
v  கட்டுரை எழுதுவதன் மூலம் மொழித்திறன்களை வளர்க்க, செய்திகளைத் திரட்ட,பகுக்க,தொகுக்க மாணவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.
v  மொழிப்பயிற்சி திறன், சொற்றொடர் அமைப்புகள், பத்தி அமைப்புகள், மேற்கோள்களை உரிய இடத்தில் பயன்படுத்தும் முறையை அறிகின்றனர்.
v  படைப்பாற்றல் திறன், சிந்தனைத் திறன் சொல்லாட்சித் திறன் செய்திகளை வகைப்படுத்த உதவுகிறது.
v  நல்ல மொழி நடை, மரபுத்தொடர், பழமொழி, பொன்மொழி, வருணனை, இயற்கைப் புனைவு போன்ற திறன்களையும், கருத்துகளைச் சுருக்கி எழுத வேண்டிய இடத்தில் சுருக்கியும், விரித்தும் எழுத பயிற்சி ஏற்படுகிறது..
கட்டுரைப் பாடம் கற்பிக்கும் முறை:
Р கட்டுரை எழுதப் பயிற்சி அளிக்கும்போது தொடக்கத்தில் தலைப்பு, அத்தலைப்புத்   தொடர்பான நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து வர பயிற்சி அளிக்க வேண்டும்..
Р மரபுத்தொடர்கள், வருணனைத்தொடர்கள், சொல்லாட்சிகள், மேற்கோள்கள் இவற்றை கட்டுரையோடு எழுதப் பயிற்சி அளிக்கலாம் ..
Р கட்டுரை எழுதுவதில் படிப்படியாக பயிற்சித் தர வேண்டும்.
Р கட்டுரை எளிமையிலிருந்து அருமை என்ற நிலையை மனதில் கொண்டு கட்டுரை எழுதச் செய்தல் வேண்டும். கட்டுரையில் வாக்கியப் பயிற்சி இன்றியமையாதது.
கட்டுரை எழுதுவதற்கான வளர்ச்சி நிலைகள்:
கட்டுரை எழுத பயிற்சி அளிப்பதற்கு முன் வாய்மொழியாக, ஒரு பொருளைப்பற்றி, இலக்கணப் பிழையின்றி உரையாடுவது விவாதிப்பது இருக்க வேண்டும். வகுப்பில் ஆசிரியரும் மாணவரும் கட்டுரை எழுதுவதற்குத் தேவையான கலைச்சொற்கள், வாக்கியங்கள், தொடக்கம், விளக்கம், முடிவு முதலியவற்றை வாய்மொழி வாயிலாக விவாதித்தப் பின் எழுத முற்பட வேண்டும்.
எ.கா. முதல், இரண்டு, மூன்றாம் வகுப்பு வரை, எழுத்துகளின் வரிவடிவம், சொற்களஞ்சியப்பெருக்கம்,ர,ற,ல,ள வேறுபாடுகள், நிறுத்தற்குறிகள் முதலியவற்றை அறிந்த பின், நான்காம் வகுப்பில், மயங்கொலி வேறுபாட்டைக்கொண்டு சிறு சிறு சொற்றொடர்கள் உருவாக்கவும் நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவத்தையும் விளக்க பயிற்சி அளிக்கலாம்.
எ.கா.
“ஆற்றின் ஓரம் கரை’
ஆடையில் படிவது கரை
ஆற்றில் வருவது வெள்ளம்’
ஆசையாய்த் தின்பது வெல்லம்“.. போன்ற சொற்றொடர்களை உருவாக்கப் பயிற்சி அளிக்கலாம்
பின், தகுந்த வருணனைச் சொற்கள், ஏற்ற வினைச்சொற்கள் பயன்படுத்தி எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும்.
வீடு – பெரிய வீடு – அழகான வீடு – அகன்ற தெரு – குறுகலான தெரு  போன்ற சொற்களையும் குதித்தான், தாண்டினான், ஒடிந்தது, கிழிந்தது போன்ற சொற்களைப் பயன்படுத்தும் பயிற்சியும் அளித்தல் வேண்டும்.
வகுப்பு நான்கு முதல், தன்னைப்பற்றிய நாட்குறிப்புச் செய்திகள், அதாவது, ஒரு நாளில் சென்ற இடங்கள், சந்தித்த நண்பர், உறவினர், சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறு சிறு தொடர்களாகக் கொண்டு கட்டுரை அமைக்கலாம். மேலும், தான் அறிந்த பொருள்கள்,
சூழ்நிலையில் பார்க்கும் பொருள்கள் பயன்படுத்தும் பொருள்கள், தான் பங்கு கொண்ட தோட்ட வேலை, விளையாட்டு, பள்ளி விழாக்கள், தேசிய விழாக்கள் பற்றியும் கட்டுரை எழுத ஊக்குவிக்கலாம்.
வகுப்பு ஐந்து முதல் தம் கருத்துகளை முறையாகவும் பிழையின்றி எழுதுவது, தம் அனுபவத்தைத் தக்க சொற்களில் உணர்ச்சிகளில் எழுதுவது போன்றவற்றைப் பயிற்சி அளிக்கலாம்.
எ.கா.
“கிராம வாழ்க்கை” என்னும் தலைப்பில் எழுதுவதாகக் கொள்வோம். கிராம வாழ்க்கை எவ்வாறு சிறந்தது என்னும் கருத்துகளைக் கூறுதல், தான் கிராமத்தில் வாழ்ந்தபோது என்னென்ன அனுபவங்கள் நிகழ்ந்தன என்று கூறுதல், கிராம வாழ்வை நான் விரும்புகிறேன் அல்லது வெறுக்கிறேன் என்பதை முன்னிறுத்தி எழுதப் பயிற்சி அளிக்கலாம்.
“ தீண்டாமை” என்னும் தலைப்பைப் பற்றி எழுதுவதாகக் கொள்வோம். தீண்டாமை என்பது என்ன? அது மக்களுக்கு எவ்வாறு துன்பம் தருகிறது? என்ற கருத்துகளையும் தீண்டாத இனத்தைச் சார்ந்தவராகக் கூறப்படுகிறவர்களுக்கு நேர்ந்தவற்றைக் கூறுவதாலும், தீண்டாமையைப் பின்பற்றுபவரைக் கண்டு சினம் கொள்ளுதல், வெறுத்தல், அதை நீக்கப் பாடுபடுபவர்களைப் பாராட்டுதல் போன்றவை மூலம் உணர்ச்சிகளைக் கூறவும் பயிற்சியளித்தல் வேண்டும்.
கட்டுரை எழுதுவதன் வளர்ச்சி நிலைகள்:
கட்டுரை எழுத குழந்தைகளுக்குப் படிப்படியாகப் பயிற்சி தருதல் வேண்டும்.
முதல் வகைப் பயிற்சி:
தலைப்பை மையமாகக் கொண்டு அதில் இடம்பெறும் கருத்துகளை மையமாகக் கொண்டும் முன்னுரை எழுத வேண்டும். பொருளுரையை மூன்று அல்லது நான்கு சிறு தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு தலைப்பிற்கேற்ற கருத்துகளை எழுதச் செய்ய பயிற்சி அளித்தல் வேண்டும். தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்துகளின் தொகுப்பும் முடிப்பு மற்றும் நீதியும் இடம்பெறும் வகையில் இருத்தல் வேண்டும்
இரண்டாம் நிலைப் பயிற்சி:
இந்நிலையில், மாணவர்கள் மற்றவர்கள் உதவியின்றி தாமாக எழுதும் பயிற்சியைத் தர வேண்டும். மாணவர்கள் பார்த்துக் கேட்டு அறிந்த கதை, கட்டுரைகள், படக்கட்டுரைகள் பொருள் பற்றி ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் பயிற்சியாகத் தரலாம்
மூன்றாம் நிலைப் பயிற்சி:
 நிலை ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரை, ஆசிரியரின் வழி காட்டுதலோடும், ஆசிரியரின் துணையோடும், ஆசிரியரின் வழி காட்டுதலின்றி, வருணனைக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள்,கருத்தியல் கட்டுரைகளைத் தாமாக எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும்..
மொழிப்பயிற்சி:
.மொழிப்பயிற்சியே கட்டுரை எழுதுவதற்கான சிறந்த பயிற்சியாக இருப்பதால், பழமொழிகள்,     பொன்மொழிகள், மரபுத் தொடர்களைக் கையாளும் பயிற்சியைத் தர வேண்டும். வாக்கியப் பயிற்சியில், உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை, செய்வினை,செயப்பாட்டு வினை, தன்வினை,முன்னிலை வினை, ஏவல் வினை, நேர்க்கூற்று, அயற்கூற்று என இவ்வகைத் தொடர்களைப் பழக்குவதோடு, நிரல்பட எழுதும் பயிற்சியும் தந்தால் கட்டுரைப் பயிற்சி சிறப்பாக அமையும்.
கட்டுரை வகைகள்:
  கட்டுரைகளை அவற்றில் அமைந்துள்ள செய்திகளைக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வகை                             தலைப்பு
1.        மொழியியல் கட்டுரை          தமிழின் தொன்மை
2.        அறிவியல் கட்டுரை            தற்கால அறிழியல்
3.        பொருளியல் கட்டுரை          சேமிப்பும் அதன் பயன்களும்
4.        சமூக இயல் கட்டுரை          நாட்டு ஒற்றுமையில் மாணவர்களின் பங்கு                                            
5.        வரலாற்றுக் கட்டுரை           பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
6.        நாட்டு நலப்பணி கட்டுரைகள்   நாட்டு நலப்பனி மன்றத்தின் செயல்பாடுகள்
7.        விழா நிகழ்வுகள்              தமிழர் திருநாள்
8.        கல்வியியல் நிகழ்வுகள்        சமச்சீர் கல்வி
9.        தன் வரலாற்றுக் கட்டுரை      ஆறு தன் வரலாறு கூறுதல்
10.     வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரை  பெருந்தலைவர் காமராசர் வரலாறு
11.     வருணனைக் கட்டுரை         நீலவானத்தில் நித்திலக் குவியல்
12.     தொழில் கட்டுரை      பொருளாதார் முன்னேற்றத்தில் நவீன .                      ..                                   தொழில் நுட்பம்
எ.கா.

வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை:
ஒருவரது வாழ்க்கை முழுவதையும் விவரித்துக் கூறுவது வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை.நம் நாட்டுத் தலைவர்கள், விடுதலைக்கு உழைத்தவர்கள் விளையாட்டு வீர்ர்கள், வீரச்செயல் செய்த மகளிர்  போனரவர்களைப் பர்றி வரலாற்றுக் கட்டுரைகள் எழுதலாம்
வருணனைக் கட்டுரை:
 இயற்கைக் காட்சிகள், அழகு ஒவியங்கள், கடவுள் உருவக்காட்சி, இவற்றை அழகியச் சொற்களால் கற்பனை கலந்து சிறப்புற விவரிப்பதே வருணனைக் கட்டுரை.
படக் கட்டுரை:
படங்களில் ஒன்றை  மாணவரிடம் அளித்து,  அந்தப் படங்களை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதச் செய்வது படக் கட்டுரை ஆகும். மாணவர்கள் தாங்கள் முன்னர் கண்ட புலக்காட்சி வழியேப் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது காணும் படக் காட்சியைக் கொண்டு கட்டுரை எழுதுவது படக்கட்டுரையாகும்.
கதைக் கட்டுரை:
ஆசிரியர் பல்வேறு வரலாற்றுக் கதைகளையும்  வாழ்க்கை கதைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றைக் கட்டுரையாக எழுதுமாறு ஒப்படைப்பு அளிக்கலாம். இதனால் மாணவரின் கேட்டல் திறன், படைப்பாற்றல் திறன், எழுதுதல் திறன், படைப்பாற்றல் திறன், கற்பனையாற்றல் ஆகியன வளரும்.
நாடகம்:
  நாடகம் - நடிப்பு முறை, விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது. மனதின் ஆற்றலில் முக்கியமானது கற்பனையே. கற்பனை ஊற்றுப்பெருக்கு இன்றேல் எந்தக் கலையும் வளராது. கற்பனை சக்தியினால்தான் குழந்தைகள் அரிதான செயல்களைக் கூட எளிதாக நிறைவேற்றுகின்றனர். ஊனக் கண்ணால் காண முடியாதவற்றையெல்லாம் மனக் கண்ணால் காண்கின்றனர். குழந்தைகள் பெற்றோராகவும், ஆசிரியராகவும், அரசனாகவும், ஆண்டியாகவும், கடைக்காரனாகவும், பால்காரனாகவும், வண்டியோட்டியாகவும் நடிப்பதில் பேரின்பம் அடைகின்றனர்.
ஆசிரியருக்கான கடமை:
குழந்தைகளிடம் காணப்பெறும் இந்த நடிப்புணர்ச்சியை பயனுள்ள வழியில் திருப்புவதுதான் ஆசிரியரின் கடமை. தமிழ் கற்பித்தலில், வாய்மொழிப்பயிற்சி, எழுத்து ஆகிய இரண்டிற்கும் வகுப்பில் நடிப்பதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக, குழந்தைகளிடம் ஒரு திருத்தமான நாடகத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாடகத்தை உருவாக்கல், நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகள், பேச்சுகள் தயாரித்தல், நாடகப் பாத்திரங்களைத் தீர்மானித்தல், பாத்திரங்களுக்கு வேண்டிய உடைகள் தயாரித்தல், ஒத்திகை வைத்தல் ஆகிய செயல்களால்தான் முழுப்பயனையும் எய்த முடியும். சிறு குழந்தைகளைக் கொண்டு அடிக்கடி வளர்ந்தவர்கள்(பெரியவர்கள்) முன்னால் நடிக்கச் செய்வதை விடுத்து, தம் வயது ஒத்த பார்வையாளர்கள் முன்னர் நடிக்க ஏற்பாடுகள் செய்யலாம். வளர்ந்தவர்களுக்கு முன், நடிக்கப்போகிறோம் என்ற நினைவையே குழந்தைகளிடம் எழச் செய்வது தவறு.
நாடகத் தேர்வு:
·          சிறு குழந்தைகள் நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள், மிகவும் எளிமையாக, விரிவான அரங்க அமைப்பில் நடிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். .
குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் எத்தகைய கதைகள் அவர்கள் நடிப்பதற்கு உகந்தவை என்பது தெரிய வரும். எ.கா. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சிங்கமும் காக்கையும், குரங்கும் பூனைகளும், ஈசாப் கதைகளும், பஞ்சதந்திரக்கதைகளையும் சிறு குழந்தைகளின் நடிப்பிற்குப் பயன்படுத்தலாம்
 நாடகத்தைத் தேர்வு செய்யும்போது ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியது:
v  குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கும் கதைகள், அவர்களின் பட்டறிவை ஒட்டியதாக, கதையில் வரும் நிகழ்ச்சிகள் அவர்கள் நன்கு தெரிந்ததாக, குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு இடம் கொடுப்பதாக, உச்சரிப்புப்பிழை, எழுத்துப்பிழை, சொற்றொடர் பிழை ஆகியவற்றைக் களைவதாக, பெரும்பாலும் நாடகத்தைப் புத்தகத்திலிருந்து எடுப்பதை விட ஆசிரியரே எழுதுவதாக அமைதல் நன்று.
நாடகத்தைச் செயல்படுத்தும் விதம்:
ஆசிரியர், முன் ஆயத்தம் இல்லாமலே ஒரு கதையை நடிக்கும் வாய்ப்பினை வகுப்பில் நல்க வேண்டும். ஒரு கதையை ஒருமுறை வகுப்பில் படித்துணர்ந்த பின் வகுப்பிலேயே  தேவையானப் பாத்திரங்களை நிர்ணயித்து யார் யார் என்னென்ன பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அவரவருக்குக் கொடுக்கப்பட்ட உரையாடல்களை நெட்டுருச் செய்து ஒப்புவிக்காமல் இடத்திற்கேற்றவாறு எங்ஙனம் பேச வேண்டும் என்பதையும் குழந்தைகளே தங்களால் இயன்ற வரை கற்பனையில் உறுதி செய்து கொண்டு பேச பயிற்சி அளிக்க வேண்டும்.
எ.கா. இரண்டாம் வகுப்பிலிருந்து நாடகத்தைத் தொடங்கலாம்
இக்குழந்தைகளுக்கு அதிகப் பேச்சு இல்லாத சிறிய கதைகள் தொடங்கினால் நாளடைவில் நல்ல பயனை எய்தலாம். திட்டமிட்டலோடு பயிற்சி அமையுமாயின் குழந்தைகள் ஐந்தாவது வகுப்பினை அடையும்போது இதில் நல்ல திறனை அடைவார்கள். இம்முறையில், வகுப்பில் ஒரு குழு நடிப்பில் இறங்கும்போது மீதுள்ள குழந்தைகள் அதனை நன்கு கவனித்து அதிலுள்ள குறைகளைக் களைந்து நல்ல திருத்தங்களைப் பெறலாம். இதனால், நாடகங்கள் நல்ல முறையில் அமையும். இம்முறையில் உருவாகும் நாடகங்களின் உரையாடல்கள் இயற்கையாக இருக்கும். குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாம் மேற்கொண்ட பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சொற்களையும் நடிப்பினையும் கையாளுவர்.
எ.கா.விழிப்புணர்வு நாடகங்கள், நீதி நெறி நாடகங்கள்,அரசவை நாடகங்கள்,விலங்குகள்-பறவைகள் கொண்ட நாடகங்கள், வாழ்வியல் நாடகங்கள் முதலியவற்றை அரங்கேற்றலாம்.
ஊக்கமும் ஆக்கமும்:
v  எல்லா நடிப்புகளிலும் உரையாடல்கள், எடுத்தல், படுத்தல், நலிதல்களைக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளை உடைய குரல், செம்மையான உச்சரிப்பு, தெளிவான ஒலிப்பு அமைய வேண்டும்..
v  நடிப்பு இயல்பாகவும் உயிர் உள்ளதாகவும், உணர்ச்சியும் மனவெழுச்சிகளும் உளச்சுவைகளும் மெய்ப்பாடுகளும் பொங்கி நிற்க, அனைவருமே நடிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துமாறும், பள்ளி ஆண்டு விழா, இலக்கியக்கழக விழா போன்ற நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்வதாக நாடகக் கதைகள் இருக்க வேண்டும். ..
 நாடக நிறைகள்:
Р இயல்பாகக் குழந்தைகளிடம் காணப்படும் அச்சம் கூச்சம் நடுக்கம் படபடப்பு சொல்லின் கடை எழுத்தையும் சொற்றொடரின் கலைச் சொல்லையும் விழுங்கல் ஆகிய குறைகளையும் போக்கியும் பேச்சு, உரையாடல் முதலியவை வாய்மொழிப் பயிற்சிக்கு நல்ல  வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது..
Р விளையாட்டு முறையில் கற்பதால் கற்றலில் கற்பனைக்கும்,  நினைவாற்றலுக்கும், உணர்ச்சிக்கும் பற்றை ஏற்படுத்துவதுடன் கற்ற பொருள்களும் பசுமரத்தாணி போல மனதில் நன்கு பதியும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
Р மனவெழுச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள், பட்டறிவால், வாழ்க்கையின் உண்மைகள், முறைகள், நல்லதன் நலன் தீயதன் தீமை, குழந்தைகளின் ஒழுக்கம், மாணாக்கர்களின் மனப்பான்மை, படைபாற்றல் முதலியவற்றை நன்கு விரிவடையச் செய்தும் ,வெளிப்படவும் வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பதாகவும் நாடகங்கள் அமைகின்றன.
முடிவுரை:
கோடல் மரபே கூறுங்காலை
பொழுதொரு சென்று வழிபடல் முனியான்
முன்னும் பின்னும் இரவிலும் பகலிலும்
அகலனாகி அன்போடு கெழீஇக்
குணத்தோடு பழகிக் குறிப்பின் வழிநின்று” கற்றனர் எனக் கூறுகிறது நன்னூல். முற்காலத்தில், மாணவர்கள் ஆசிரியர் இல்லம் சென்று, அவர் இல்லத்திலேயே தங்கி, அவர் பாடம் நடத்துவதைக் கேட்டு மொழி அறிவும் பிற பாட அறிவும் பெற்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப, படிப்பு, பாடப்பொருள் யாவும் மாணவரை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. இக்கல்வி முறையிலும், கற்றலிலும் மாற்றம் வேண்டும். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதைக் கல்வியின் வாயிலாகவும், கற்பித்தல் உத்தியின் வாயிலாகவும் நிரூபிக்க வேண்டும். இதற்குக் கல்வியாளர்கள் புதுமையை நோக்கி, பழையன மறவாது. குழந்தைகளே வருங்கால கணவான்கள் என்பதை உணர்த்த, உருவாக்க, புறப்பட வேண்டும்.குழந்தைச் சிற்பிகளை உருவாக்க சரித்திரம் படைப்போம். சாதனைத் தீபம்.ஏற்றுவோம்!!
“எங்கள் தமிழ் உயர்வென்று;
நாம் சொல்லிச் சொல்லி                                                         ஆக்கம்
தலைமுறைகள் பல கழித்தோம்                                     சித்ரகலா கலைச்செல்வன்.
குறைகளைந்தோமில்லை” ...               சின்மயா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி,சென்னை-92
எண்ணிய முடித்தல் வேண்டும்’ நல்லவே எண்ணல் வேண்டும்.

Translate