காடர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். இவ்வாறு பல்லாண்டு காலம் கோயில் திருப்பணிகள் புரிந்தும் ஈசனை போற்றி இசைபாடியும் சிவலோகம் சேர்ந்தார்.