‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது‘ (Time waits for no man) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானது‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியாமையாதது. எந்தக்காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை வீணாக்கக்கூடாது; அது பொன்போன்றது; காலத்தின் அருமை தெரிந்து பயன்படுத்த வேண்டும், அதனையும் உரிய பருவம் அறிந்து பயன்படுத்த வேண்டும். இவை போன்ற உண்மைகளைக் காலம் நமக்குக் கற்பிக்கின்றது.
எனவே, ஒவ்வொன்றையும் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று உண்டு. அவற்றை மனத்திற்கொண்டு செயல்பட்டால் நன்மை விளையும். இது இயற்கையின் தன்மை. நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும்; வரலாற்று நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் இவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
விவசாயியும் காலமும்
நிலத்தைப் பயிரிடும் விவசாயிகள் (Agriculturalist), பருவகாலத்தை அடிப்படையாகக் கொண்டே பயிரிடுகின்றனர். உழுது, விதைவிதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்வது வரையிலும் பருவகாலங்களே அடிப்படையாக அமைந்துள்ளன. காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யும் விவசாயி, தான் நினைத்த பலனைப் பெறுகிறான்.
எறும்புகள் கூட, மழைக்காலத்தை மனத்திற்கொண்டு, வேனிற்காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. இவ்வாறு பலநிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இயற்கையின் இந்த உண்மையினை,
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்
(குறள்: 484)
(ஞாலம் = உலகம், கருதினும் = கருதினாலும், செயின் = செய்தால்)
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்கிறார் வள்ளுவர்.