Search This Blog

Wednesday, July 20, 2011

மாவீரன் செண்பகராமன்





                  “எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

                  பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ் வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம் தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.

                  இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜேய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜேய் ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜேய் ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

                  வீரபாண்டியகட்டபொம்மன் ஆரம்பித்த விடுதலைப்போர், இந்தியா முழுவதும் வீறிட்டெழுந்து பயங்கர ஜுவாலையாகப் பரவிய காலம் அது. வெள்ளையரை நாட்டை விட்டு வெளியேற்றி, பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இந்திய உபகண்ட மெங்கும் ஒரே கொந்தளிப்பு. அதை அடக்க பிரிட்டிஷ் ஆட்சியினர், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஆறாகப் பாய விட்டது போலாகி விட்டது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர்.

                  பாடங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு குட்டித் தலைவன். வயது பதினைந்துதான். ஆனால் ஆற்றலோ, அணைகடந்ததாக அமைந்தது. நாஞ்சில் பெற்றெடுத்த இந்தச் சிறுவன் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவனாகி விட்டான். எழுச்சி மிக்க அவனது பேச்சுக்கள், இளைஞர்களின் இதயங்களில் ஆழப் பாய்ந்தன. விளையாட்டுப் போல் அவன் ஆரம்பித்த தேசியப்படை, பலமிக்க ஒரு நிறுவனமாக உருவாகியது. அரசாங்கம் வாளாவிருந்து விடுமா? சிறுவனது வாயையும், கரங்களையும் கட்டிப் போட முயன்றது. இதனால் சிந்தை கலங்கவில்லை இந்தச் சின்னஞ் சிறு வீரன் செண்பகராமன். அதற்குப் பதிலாக, அவனது சுதந்திரத் தாகம் எரிமலையாகியது.

Friday, July 15, 2011

12. திருமங்கையாழ்வார்

பிறந்த காலம்
8ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திருவல்லிநாடு
பிறந்த மாதம்
கார்த்திகை
திருநட்சத்திரம்
கார்த்திகை
அம்சம்
சாரங்கம்
 
                சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.
                சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.
                அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.
                எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின் மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்…பர மற்றும் உடையவர் என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.
திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:
பெரிய திருமொழி                 1084
குறுந்தாண்டகம்                  20
நெடுந்தாண்டகம்                30
திருவெழுக்கூற்றிருக்கை       1
சிறிய திருமடல்                   40
பெரிய திருமடல்                  78.
நாற்கவி:
1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது
இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு ‘நாலு கவி பெருமாள்’ என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.


11. திருப்பாணாழ்வார்

பிறந்த காலம்
8ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திருவல்லிநாடு
பிறந்த மாதம்
கார்த்திகை
திருநட்சத்திரம்
கார்த்திகை
அம்சம்
சாரங்கம்
வேறு பெயர்கள்
பாணர் ,முனி -வாஹனர் ,யோகி – வாஹனர் , கவீஸ்வரர்

                திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் திருவரங்கத்தின் உள்ளே செல்வதற்கு இவருக்கு அனுமதி கிடையாது. அதனால் இவர் காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார். ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர், பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.

பாடல்கள்
                இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

பிறந்த காலம்
8ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திருமண்டங்குடி
பிறந்த மாதம்
மார்கழி
திருநட்சத்திரம்
கேட்டை
வேறு பெயர்கள்
விப்ரனாராயனர் , திருமண்டங்குடியார் ,பாக்தங்கிரிறேனு , பல்லயுனர்த்திய பிரான்

                எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.
                சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.
                ஸ்ரீமந் நாராயணணின் பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டு தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.

9. ஆண்டாள்

பிறந்த காலம்
9ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த மாதம்
ஆடி
திருநட்சத்திரம்
பூரம்
வேறு பெயர்கள்
சூடிகொடுத்த நாசெயார் , கோடை ,கோடை பிராட்டி

               ஆண்டாள் தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்
                ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த கோயிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
                இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
                கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
ஆண்டாள் பாடல்கள்
                ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
                இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
                இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.
                ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.

8. பெரியாழ்வார்

பிறந்த காலம் 9ம் நூற்றாண்டு
பிறந்த இடம்ஸ்ரீவில்லிபுத்தூர்



வேறு பெயர்கள்: விஷ்ணு சித்தர் , பட்ட நாடன் , பட்டார் பிரான் , ஸ்ரீ வில்லிபுத்தூரார்.


              ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி.9ம் நூற்றாண்டில், குரோதன வருடம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் இவர் விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்டார்.
              கண்ணபிரானின் கதைகளைப் பெற்றோர் மூலம் கேட்டறிந்த விஷ்ணு சித்தர் அவன் பக்தியில் திளைத்தார். வட பத்ரசாயி என்ற ரங்க மன்னாருக்காக நந்தவனம் அமைத்து, துளசி மாலைகளை அன்றாடம் கோயிலுக்குச் சமர்ப்பித்தார். எம்பெருமானின் கட்டளைப்படி, பாண்டிய நாடு சென்று பரமனைச் சரணடைவது ஒன்றே முக்திக்கு வழிகாட்டும் என்ற தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். மன்னர் மகிழ்ந்து “பட்டர் பிரான்” என்ற பெயரை விஷ்ணு சித்தருக்களித்தார்.

7. குலசேகர ஆழ்வார்

பிறந்த காலம்
9ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திர்வஞ்சிக்கோலம்
பிறந்த மாதம்
மாசி
திருநட்சத்திரம்
புனர்பூசம்
வேறு பெயர்கள்
கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

பிறப்பு
                இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீடர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உளது. அதை குலசேகரர்தான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் கௌஸ்துப அம்சம் பொருந்தியவர்.
அரசமரபும் துறவும்
                கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் சேவித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.
குலசேகரப்படி
                திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேணுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
       நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
       படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
                இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.
பெருமாள்திருமொழி
                திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம், முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
                பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. 

குடியரசு தினம்


                                                   By
                                                      Abi

Thursday, July 14, 2011

6. மதுரகவி ஆழ்வார்



பிறந்த காலம்
9ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திருகொல்லூர்
பிறந்த மாதம்
சித்திரை
திருநட்சத்திரம்
அவிட்டம்
வேறு பெயர்கள்
இங்கவியார் , அழ்வாருக்கு அடியான்

               
                மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் பிறந்தார். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
பெயர்க்காரணம்
                சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது.
இளமைக்காலம்
                இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலகவிஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.
கண்ணி நுண் சிறுத்தாம்பு
                நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்:
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;     
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே.


5. நம்மாழ்வார்


பிறந்த காலம்
9 ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
ஆழ்வார் திருநகரி
பிறந்த மாதம்
வைகாசி
திருநட்சத்திரம்
விசாக
வேறு பெயர்கள்
சடகோபன்,சடாரி, பராங்குசன் ,மாறன்,வகுளா பரணன்,குருகையர் கோனே
அம்சம்
விஷ்வக்சேன

வரலாறு
                நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திரு மகனாராக வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் ஒரு சடம் போல் இருந்தார். இக்குழந்தை உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.
                பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். அயோத்தியில் தங்கி இருந்த மதுரகவி என்பவர் தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தெற்கு திசை நோக்கி பயணித்தார். மாறனிடமிருந்து அந்த ஒளி வந்தது என்று அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். அவரிடமிருது நிறைய அர்த்தங்களைப் பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.
நூல்கள்
                நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய 4 நூல்களை இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

4. திருமழிசையாழ்வார்


பிறந்த காலம்
7ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
திருமழிசை
பிறந்த மாதம்
தை
திருநட்சத்திரம்
மகம்
வேறு பெயர்கள்
பக்தி சாரர் , பார்கவர் , மகிசாராபுரிஸ்வரர் ,மழிசை பிரான்
அம்சம்
சுதர்சனம்
பிறப்பின் அற்புதம்
                                பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்றுப்பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப்பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப்பிரம்புத்தூற்றின் கீழ் போட்டுச்சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண் டம் எல்ல உருப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் குழந்தையைக் கண்டெடுத்து தம் மனைவி பங்கயச்செல்வியிடம் கொடுத்தனன். அவர்களுக்கு வேறு மகப்பேறு இல்லை. இக்குழந்தையை வளர்க்கத் தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. என்பது அவர் பிறப்பைப் பற்றி கிடைக்கும் குறிப்புகள். அவரே திருச்சந்த விருத்தத்தில் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறார்.
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்
என்கிறார்.
 பிரபந்தங்கள்
                நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக விஷ்ணுவை உயர்வாகச்சொல்லியவை. இவருக்குமுன் தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.
பரமயோகி
                இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்ன என்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம் முதலிய ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். முக்கண்ணனான சிவபெருமான் இவரைச் சோதித்து இவருடைய பக்தியை மெச்சி இவருக்கு 'பக்திசாரர்' என்ற சிறப்புப்பெயரை அருளிச் செய்தார்.


3. பேயாழ்வார்


       
பிறந்த காலம்
7ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
மயிலாப்பூர்
பிறந்த மாதம்
ஐப்பசி
அம்சம்
நந்தகம்
 
        பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

அம்சம்
                சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார்
நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

நாடகம்
                இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான். நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.

2. பூதத்தாழ்வார்


பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.
பிறந்த காலம்
7ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
மாமல்லபுரம்
பிறந்த மாதம்
ஐப்பசி
திருநட்சத்திரம்
அவிட்டம்
வேறு பெயர்கள்
           -
அம்சம்
கௌமோதகி

                மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது.

அம்சம்
                திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

1. பொய்கையாழ்வார்


பிறந்த காலம்
7ம் நூற்றாண்டு
பிறந்த இடம்
மயிலாப்பூர்
பிறந்த மாதம்
ஐப்பசி
திருநட்சத்திரம்
சதயம்
வேறு பெயர்கள்
கிரவ -முனி , மஹாதேவயார் , தமிழ் -தலைவன்
அம்சம்
பாஞ்சஜன்யம்


        பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விட்டுணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.
         
       பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும் பூதத்தாழ்வார் கடல்மல்லையிலும் பேயாழ்வார் மயிலையிலும் அவதரித்தவர்கள்.

அம்சம்
                சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பொய்கையாழ்வார் 
பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.
முதலாழ்வார்கள்
                இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.


நாடகம்
                இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான். நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.


மூன்று திருவந்தாதிகள்

                 அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

ஆழ்வார்கள்

 திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம்.

        ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர்.

        கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
        பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:

·         பொய்கையாழ்வார்
·         பூதத்தாழ்வார்
·         பேயாழ்வார்
·         திருமழிசையாழ்வார்
·         நம்மாழ்வார்
·         மதுரகவி ஆழ்வார்
·         குலசேகர ஆழ்வார்
·         பெரியாழ்வார்
·         ஆண்டாள்
·         தொண்டரடிப்பொடியாழ்வார்
·         திருப்பாணாழ்வார்
·         திருமங்கையாழ்வார்

        இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு.

Translate