என் கதாநாயகன்
எத்தனையோ தலைவனுண்டு
ஏட்டினிலே அறிந்ததுண்டு
எண்ணத்திலே உதிக்காத
ஏகராசி பலவுமுண்டு
என்னைப் பெற்ற ஐயாவோ
எப்பொழுதும் உமைச் சொல்வதுண்டு
இவர்களைப் புறந்தள்ளி
இனியனே உனை உரைப்பதுண்டு
உன்னைப்போல் தலைவனுண்டோ
உள்ளத்தில் நிறைந்ததுண்டோ
உழைப்பே உன் மூச்சு
ஊக்கமே உன் அருமருந்து
ஏட்டுக்கல்வி எட்டவில்லை
ஏற்றம் தர மறந்ததில்லை
பகட்டைத் துறந்ததுண்டு
பாமரனைப் போற்றியதுண்டு
மணத்தைத் துறந்ததுண்டு
மதிய உணவைத் திறந்ததுண்டு
தொலை நோக்குப் பார்வையுண்டு
தொழிற்கல்வி அமைத்ததுண்டு
படிக்காத மேதை இவர்
பாரதமே போற்றும் கதர்
அன்னையின் அரசன் இவர்
அணைகள் பல திறந்தவர்
தலைவர்களைத் தந்தவர்
தரணியெல்லாம் நிறைந்தவர்
நல்லாட்சி நடத்தியவர்
நாடு போற்ற வாழ்ந்தவர்
நெஞ்சில் நல் ஈரமுண்டு
நேர்கொண்ட பார்வையுண்டு
மண்ணிலே மலர்ந்ததுண்டு
மத இனங்களை வெறுத்ததுண்டு
எட்டுத்திக்கும் பெருமையுண்டு
ஏகலைவனாய் வாழ்ந்ததுண்டு
எழுத எழுத எழுத்துமுண்டு
எண்ணிலடங்கா கருத்துமுண்டு
காகிதத்தில் அதைத் தீட்ட
கரமும் இணைவதுண்டு
கர்ம வீரர் கலந்தனிலே
கரையேறும் எனது தொண்டு
வாழ்நாள் முழுவதுமே
வழி நடப்பேன் இவர் வழியே
இரவு பகல் பாராமல்
இயன்ற தொண்டு நானும் செய்வேன்
காமராசர் எனும் நாமம்
என் கலங்கரை விளக்காகும்
v
ப.சித்ரகலா.
No comments:
Post a Comment