Search This Blog

Friday, March 3, 2017

வழியனுப்பு விழா மடல்(2016-2017)
என் வாழ்வில் வசந்தமாய் வந்த வசந்தங்களுக்கு வழியனுப்பு விழா மடல்(2016-2017)


வழிகாட்டியாய் வந்தேன் …
வசமாக்கி விட்டீர்.
வாழ்க்கையின் தத்துவத்தைத் 
தவறாமல் தந்தீர்.
கற்பாறையாய் இருந்த என் மனதை…
கனிய வைத்தது இந்தக் கருவறை!
காவியம் படைக்க வேண்டுமென்று நினைக்கையில்….
ஓவியமாய் ஒளிர் விட்டீர்!!!
ஒவ்வொன்றாய் நினைக்கையில் …
ஓராயிரம் நினைவலைகள்….
கண்முன்னே கசிந்துருகையில்…
காரணமில்லாமல் உம்மை நோக்கினேன்.
கள்ளம் கபடமில்லா காதலர்களை – இன்று
என் கரங்கள் நழுவ விடுகிறதென்று….
நழுவலின் காரணத்தைக்
கண்டறிந்தபோதுதான் தெரிந்தது - அன்று
 நான் விதைத்த வித்து விளைந்து எழுந்து
விண்ணை வெற்றி கொள்ள இன்று புறப்பட்டது என்று…. அதுமட்டுமின்றி
விருட்சம் கொள்ளத்தானே விரைகிறார்கள்
விசாலமான மனதோடு என்று எண்ணியது. ….மீண்டும்
விதைத்த வித்து என்னுடையதாக இருந்தாலும்
விருப்பம் என்ற விரி இதழ்கள் அவர்களுடையது என்பதை
உணர்ந்தேன் … உறவாய் .. உணர்வால் கலந்தேன்..
என் வசந்தங்களே!!!
       நான் உம்மை விட்டு விலகிச் செல்லவுமில்லை....
       நீங்கள் என்னை விட்டு விலகிச் செல்லவுமில்லை....
       வெற்றி பெறவே என் விழிநீர் வழியாய் அனுப்புகிறது.
 நான் அனுப்பும் இவ்வழி அனுப்பு விழாவானது…
 என் வழியைப் பின்பற்ற வேண்டுமென்றோ? அல்லது
 என் வலியை உணர வேண்டுமென்பதோ அன்று….
 அதனையும் தாண்டி,
        என் விழியே நீர்தான்!!!!
        உனக்குள் நான்தான்!!!!!
 என்பதை உணர்த்தவே வழி அனுப்புகிறேன்.
நான் உன்னுள் இருப்பதால்….
உன் விழிக்கு விந்தைகளும், வியத்தகு சாதனைகளும்
ஆற்றத் தெரியுமே தவிர, புரியாத புதிராக அன்று….
புத்திமான் பலமானைப் பெற்ற என் மனமும்
உங்கள் வசமே சென்று கொண்டிருக்குமே அன்றி
அதைவிட வேறு வசம் ஒன்றுமில்லை..
இதுதான் அருள் கடவுள் எனக்களித்த அருட்கொடை..
அதைவிட, வகுப்பில் இந்த ஆண்டு,
என் குரலுக்குச் செவி சாய்த்த மாணவர்களும் உண்டு…
செவிடர்களாய்ச் செம்மையாய் 
வகுப்பை முடித்தவர்களும் உண்டு
உறவு பலப்பட்டதும் உண்டு..
உண்டு இல்லை என்று 
ஒரு கை பார்த்ததும் உண்டு…
அம்மா என்று அழைத்ததும் உண்டு…
அங்கலாய்ப்பு செய்து 
என் அரியணையில் அமர்ந்ததும் உண்டு..
அழகிய செஞ்சொற்களால் பேசியதும் உண்டு…
அதே அழகிய செஞ்சொற்களால்
 என்னை வசை பாடியதும் உண்டு.
ஆறுதல் கூறிய அழகிய தோழிகளும் 
இவ்வகுப்பில் இருந்ததுண்டு..
ஆற்றுப்படுத்த முடியாத 
வானரப்படைகளும் இங்கு இருந்ததை
என் இதயம் அறிந்ததுண்டு…- இருப்பினும்
கணையாழி கொடுத்து 
கலங்காது இருக்கச் செய்த
கடவுள் போன்று ......
எனக்குக் கருத்துச் சொன்னதுமுண்டு..
என்ன இருப்பினும்,
 அவர்கள் மனதை விட்டு நான் பிரிந்ததுமில்லை..
என் மனதை விட்டு அவர்கள் பிரிந்ததுமில்லை..
அதுதானே உறவு! அதுதானே நட்பு!!
நாம் இன்று ஒருவரை ஒருவர் பார்த்து
கண்ணீர் விடும் காட்சியை இரசிப்பதற்குப் பதில்….
பஞ்சு போண்ற உங்களின் பரமபத பாதையில்
சறுக்கலின்றி சரியானப் பாதையைத் தேர்ந்தெடுத்து
வெற்றி கொள்க!!!
சாலை இளந்திரையன் கூறியதுபோல்,
எத்தகைய இன்னல்கள் வந்தாலும்
 இன்முகத்தோடுஎதிர்கொள்!!!!
எந்த வேலையினும் துணிந்து செய்க!!
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. .. என்பதை கவனத்தில் கொள்க!!
நாம் அனைவருமே ஒரு சூழ்நிலைக் கைதிகள்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் நம்பிக்கையைக்
காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியே…
நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம்..
அவ்வாறின்றி,
         நீ நீயாக இரு!
         பிறருக்கு நிழலாய் இரு!!
         நிர்பந்தம் செய்யாதே!!!
         நிற்கதியாய் செல்லாதே!!
         நித்திரையில் நாட்களைக் கடத்தாதே!!!
         நடுநிசி பாராது நற்காரியங்களைச் செய்ய முற்படு!!!
முந்தானையில் தூளி கட்டியும்,
முத்தத்திலே தாலாட்டிய 
உன் தாய்க்குப் பாரமாக இராதே!
பண்போடு வாழவும் 
பார்போற்ற உன்னை ஆளாக்க நினைக்கும்
தந்தையையும்  மறவாதே!!!
கடவுள் என்பவன் கடந்து நிற்பவன்.
கருவறையில் உன்னைச் சுமந்தவர்களோ
கரிசணையிலே வாழ்பவர்கள்!! – இதில்
எது கடவுள் என்பதை உணர்ந்து செயல்படு!!
இக்கரிசணைக் கடவுளுக்கு,
 முளைப்பாறி வைத்தும், முழு பத்தியம் இருந்தும்
 வணங்க வேண்டும் என்பதில்லை…
முத்தான உன்  நம்பிக்கை வரிகளையும்
செயல்களையும் அவர்களுக்குச் சொந்தமாக்கு!!!.  
அதுவே நீ முழு நிலவாய் ஒளிர் விட வழி வகுக்கும்…
உன்னை உணர்!!! உலகத்தை உணரலாம்!!
எனக்கு, ஆலயம், கடவுள், எல்லாமே நீங்கள்தான்!!!
ஆதலால், உம்மிடமே என் பிரார்த்தனை…
என் கண்ணுக்குக் கடவுளாகக் காட்சி தரும்
என் மாணவக் கண்மணிகளே…….
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்…
நம்பிக்கை முத்துகளை அள்ளித் தாருங்கள்!!!
 தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு ……….
தங்கங்களுக்கு விடை தருகிறேன்….. .

  

10 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Aasiriyai arumaiyana kavithaiyai
  aanathu neenga engalukku

  ReplyDelete
 4. Aasiriyai arumaiyana kavithaiyai
  aanathu neenga engalukku

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சித்ரா. குழந்தைகளின் உளம் கவர்ந்த ஆசிரியைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....

  ReplyDelete
 6. வாழ்த்துகள் சித்ரா. குழந்தைகளின் உளம் கவர்ந்த ஆசிரியைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....

  ReplyDelete

Translate