Search This Blog

Wednesday, January 5, 2011

கலைஞரின் குறளோவியம்

          வீதியில் பசு ஒன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக் குட்டி தாயைச் சுற்றி சுற்றி ஓடியும், தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்த கன்று தொலைவில் போய்விடக் கூடாது என்பதிலே தாய்ப் பசு கண்ணும் கருத்துமாய் இருந்தது, கன்றுக்குட்டி மான் போல துள்ளி வீதிக்கு நடுவே ஓடும், பசுவோ அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போல பயமுறுத்தும், தாயின் கோபத்தைப் புரிந்து கொண்ட இளங்கன்று உடனே அதன் அருகே துள்ளி வரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.

Tuesday, January 4, 2011

மார்கழி 20- பாடல்+பொருள்

கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும், அவர்களுக்கு துன்பம் நெருங்குவதற்கு முன்னரே அவர்களைக்காக்கும் கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச்செய்பவனே! பகைவரை அடக்கும் வலிமையுடையவனே! பகைவருக்கு துன்பங்களைக்கொடுப்பவனே! உறக்கம் நீங்கி எழுந்துவாராய்! செப்பைப்போன்ற மென்மையான மார்பகங்களையும், சிறு இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து, உங்கள் மணாவாளனான கண்ணனையும் எங்களுக்களித்து நாங்கள் நீராடச்செய்வாயாக!"

Monday, January 3, 2011

மார்கழி 19- பாடல்+பொருள்

நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும் ஒத்துவராது."

Sunday, January 2, 2011

மார்கழி 18- பாடல்+பொருள்


நந்தகோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன்மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"மதம் கொண்ட யானையைப்போல வலிமையுடையவரும், படைவரைக்கண்டு பின்வாங்காத தோள்வலிமையுடையவருமான நந்தகோபருடைய மருமகளே! மணம் வீசும் கூந்தலுள்ள நப்பின்னை பிராட்டியே! நீயாகிலும் வந்து கதவைத்திற! கோழிகள் கூவுவதைக்கேள்! கொடிகள் படர்ந்த பந்தல் மேலமர்ந்து, குயில்கள் கூவுவதைக்கேள்! மென்மையான விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனுடைய திருநாமங்களைப் பாட வந்துள்ளோம். எனவே உன் சிவந்த தாமரைப் பூக்கள் போன்ற மெதுவான கையினால், கைவளையல்கள் ஒலிக்க, உள்ளக் களிப்புடன் வந்து கதவைத் திறவாய்!"

மார்கழி 17- பாடல்+பொருள்


கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்தகோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பிரான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.



விளக்கம்:
வாயில் காப்போன் கதவைத்திறந்து, பெண்மணிகைகளை உள்ளே விட, முதற்கட்டில் சென்று, பள்ளீகொண்டிருக்கும் கண்ணன், யசோதை, பலதேவர் மூவரையும் எழுப்புகின்றனர்.
"பல விதமான ஆடைகளையும், குளிர்ந்த பானங்களையும், பல்வகை உணவுப்பண்டங்களையும் வாரி வழங்கும் எங்கள் பெருமான் நந்தகோபரே, தாங்கள் எழுந்திருக்கவேண்டும். வஞ்சிக் கொடியையொத்த பெண்களுக்கெல்லாம் தலைவியானவளும், நந்த குலத்திற்கு தீபம் போன்றவளும், ஸ்ரீ கிருஷ்ணரை எங்களுக்களித்த யசோதை பிராட்டியே, எழுந்தருளாய்! வானளாவி ஓங்கி வளர்ந்து அனைத்துலகங்களையும் அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே! பொன்னால் இழைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடிகளையுடைய செல்வா! பலதேவா! உன் தம்பியான கண்ணனும் நீயும் இனியும் உறங்காது எழுந்தருளவேண்டும்."

Translate