Search This Blog

Wednesday, January 5, 2011

கலைஞரின் குறளோவியம்

          வீதியில் பசு ஒன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக் குட்டி தாயைச் சுற்றி சுற்றி ஓடியும், தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்த கன்று தொலைவில் போய்விடக் கூடாது என்பதிலே தாய்ப் பசு கண்ணும் கருத்துமாய் இருந்தது, கன்றுக்குட்டி மான் போல துள்ளி வீதிக்கு நடுவே ஓடும், பசுவோ அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போல பயமுறுத்தும், தாயின் கோபத்தைப் புரிந்து கொண்ட இளங்கன்று உடனே அதன் அருகே துள்ளி வரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.


அந்த வீதியில் ஒரு கரும்பன்றி மலம் தின்ற வாயுடன் உறுமிக்கொண்டே கன்றுக் குட்டியிடம் வந்து உரசிடத் தொடங்கியது, கன்று தனக்கு ஒரு இணை கிடைத்து விட்டதாக எண்ணி அந்தப் பன்றியுடன் வீதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. பசுவுக்கு பொல்லாச்சினம் பொங்கி விட்டது. கன்றுக் குட்டியை ஆத்திரத்துடன் நோக்கி அதனைத் தன்னருகே வருமாறு கத்திக் காட்டியது. கன்று பன்றியிடமிருந்து விடுபட்டு வர முயற்சித்த போதிலும் அதைப் பன்றி விடாமல் துரத்தித் தன் மீது படிந்துள்ள சகதியைக் கன்றின் உடலில் ஒட்ட வைத்தது. தாய்ப் பசுவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. கொம்புகளை நீட்டியவாறு பன்றியின் மீது பாய்ந்தது. பசுவின் வேகத்தைக் கண்ட பன்றி பயங்கரமாக ஒலி எழுப்பிக் கொண்டு அந்த வீதியிலே நெடுந்தொலைவு ஓடி, இறுதியாக அங்கிருந்த சின்னஞ்சிறு கழிவு நீர்க் குட்டைக்குள்ளே குதித்தது. அந்த குட்டைக்குள் ஏற்கனவே பத்துப் பதினைந்து பன்றிகள் புழுக்கள் நெளியும் அக்குட்டையில் ஊறிக்கொண்டிருந்தன !!!. தமது இனத்தைச் சேர்ந்த மற்றொரு பன்றி வந்ததும் எல்லாமே அதனைச் சூழ்ந்து கொண்டு கட்டிப் புரண்டு களிப்புக் கொண்டாடின.

இந்தக் காட்சி அனைத்தையும் கண்ட வள்ளுவர், சிற்றினம் சிற்றினத்தைத்தான் சேரும் என்பதற்காக அவர் தொடுத்த குறள் இதோ.....

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

அதிகாரம்- 46                  சிற்றினம் சேராமை                     பாடல்- 451

"சிற்றினத்திற்கு அஞ்சி அதனை ஒதுக்குவது உயர்ந்தோரின் இயல்பு! அந்தச் சிற்றினத்தை சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்ளுதல் இழிந்தோரின் இயல்பு."
[சிற்றினம் - கீழோர் சேர்க்கை; இழிந்தோர் - தாழ்ந்தோர்]
 

No comments:

Post a Comment

Translate