நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"நான்கு புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளுமை, மிருதுத் தன்மை, நறுமணம், வெண்மை ஆகிய ஐந்து குணங்களையுடய, தந்தத்தினால் ஆன மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் தலைசாய்த்து உறங்கும் கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு! (பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி) மை தீட்டிய அகலமான கண்களையுடையவளே,நீ உன் கணவனான கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. ஒரு நொடியும் அவனது பிரிவைத் தாங்காத நப்பின்னை பிராட்டியே! இது உன் இயற்கைக்கும் குணத்திற்கும் ஒத்துவராது."
No comments:
Post a Comment