Search This Blog

Friday, November 12, 2010

தமிழ் ஆசிரியர்

தமிழ் எனது தாய் மொழி - ஆனால்
             எனக்குத் தமிழ்
சொல்லிக் கொடுக்கும்
             தமிழ்த் தாய் எனது தமிழ் ஆசிரியரே.
 அவர் பொறுமையின் உச்சம்,
             அவர் பெருமை சொல்ல
எல்லையே இல்லை............................
- ஆகாஷ் (எ) அகிலன்

----------------------------------------------------------------------------------------------------------------

பொறுமைக்கு சான்று

                            நபிகள் நாயகம் மிக சாதாரணமான எளிய மனிதராகத்

திகழ்வார்.அவர் பெரிய மேதை என்றாலும்- பெருமகனார் என்றாலும்

கூட எளிய வாழ்க்கையில் பற்றும் பாசமும் கொண்டவர் என்ற

காரணத்தால் ஒரு குறிப்பிட்ட தெருவிலே ஒரு நாள் நடந்து

செல்லும்போது அவர் மீது வெறுப்புற்ற ஒரு மங்கை

மாடியிலேயிருந்து அவர் தலையிலே குப்பையைக் கொட்டுவது

வழக்கம்.ஒவ்வொரு நாளும் நாயகம் அங்கு வரும்போது

கூடையிலேயிருந்து குப்பை விழும்.அதை உதறிவிட்டு

நபிகள் நாயகம் தன்னுடைய பாதையிலே நடந்து

செல்வார்.


                              ஒரு நாள் அப்படி வரும்போது குறிப்பிட்ட அந்த

வீட்டுமாடியிலேயிருந்து குப்பை கொட்டப்படவில்லை.

நபிகள் நாயகத்திற்கு ஒரே ஆச்சரியம். திகைத்து நின்றார்.

அங்கே உள்ளவர்களைப் பார்த்து "தினந்தோறும் ஒரு அம்மையார்

என் மீது குப்பை கொட்டுவார்களே! அவர்கள் எங்கே ?" என்று

கேட்டார். "அவருக்கு உடல் நலமில்லை . அதனால்தான் அந்தக்

 காரியத்தை அவர் இன்றைக்கு செய்யவில்லை" என்றனர்.

உடனடியாக மாடிப்படியிலே ஏறிச்சென்று அந்த அம்மையாரிடம்

உடல்நலம் விசாரித்து அவருடைய உடல் நலிவு தீர மருந்து

 கொடுத்தார் .


இக்கதையின் நீதி:


                        நபிகள் நாயகம் போல் பொறுமை, அன்பு, அறவழி
 நிலை கொண்டு நாமும் விளங்குவோமாக!


-----------------------------------------------------------------------------------------------------------------------------------



முதல்வர்

கல்விக்கலைமகளின் உறைவிடமாய் விளங்கும்

கலைமகளின் பள்ளியிலே

பசுமை கொண்ட நெஞ்சினாய்

பூத்துக்குலுங்கும் புன்முறுவலாய்

முழுமதி ஒளியாய்

ஒய்யார நடையுடன் நகை தழுவ

தரமறிந்து பழகும் பிராட்டியாக

பிள்ளைகளின் செல்லச் செல்வியாக

பவனி வந்தும் , பணியாற்றியும் , பயிற்றுவித்தும்

வியர்வைக்கே விலை என்ன ?

எனக் கேட்கும் அளவிற்கு............

விடியலாய் , விண்ணரசியாய்

வியத்தகு அரும் பெரும் பணிகளைச் செய்து

செயலரை வியப்பில் ஆழ்த்திய அலைமகளே

உமது பணி துணைதான் என்றிராமல்

"எனது கடன் பணி செய்து கிடப்பதே"

என்ற கொள்கையை உம் வாழ்வில் மேற்கொண்டவரே............

அதனால்,

உமக்கு உமையவளின் துணை கிடைத்ததா???

இல்லை...

முதல்வனின் துணைதான் கிடைத்ததோ??????????

நீர் முதல்வராக!!!

என்னே பெரும் வியப்பு!!!!!!!!!!!!!!

வியப்பில் ஆழ்த்திய அம்மையே!

உமது பணி மேலோங்கி நிற்க

நிற்போம் நாங்களும் உமக்குத்

துணையாக...........................
----------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழ்த் துறை 

Tuesday, November 2, 2010

மாணவர்கள் பாடம் கேட்கும் முறை

  • தகுந்த காலத்திற்குள் வகுப்பிற்குள் செல்லுதல்.
  • ஆசிரியரை வணங்குதல்.
  • ஆசிரியரின் குணத்திற்கு ஏற்ப பழகுதல்.
  • நீர்வேட்கை கொண்டவனின் விருப்பம் போல் கற்பதில் விருப்பமுடைதல்.
  • ஓவியத்தில் எழுதிய பாவை போல் மனம், மொழி, மெய்களை அடக்குதல்.
  • காதுகளை கல்வியை பருகும் வாயாகவும், மனத்தை உணவை கொள்ளும் இடமாகிய வயிறாகவும் கொள்ளுதல்.
  • ஆசிரியரிடம் கருத்துக்களை பலமுறை கேட்டறிதல், கேட்ட கருத்துக்களை மறந்து விடாமல் உள்ளத்தில் பதிய வைத்தல். 
  • ஆசிரியர் 'போ' என்று சொல்லிய பின் செல்லுதல்.
[பொருள்:- தகுந்த-சரியான நேரத்தில்,  நீர்வேட்கை- தண்ணீர் தாகம்,  பாவை- சிலை; பதுமை ]

இவையே சிறந்த மாணவனின் பாடம் கேட்கும் முறை.

Monday, November 1, 2010

...........கலைஞர் சொன்ன கதை........

                                   சீற வேண்டாமா??????

                                ஒரு முனிவரிடத்தில் நல்ல பாம்பு ஒன்று சென்று முறையிட்டுக் கொண்டதாம். "என்னைக் கண்டால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்குப் பெயர் 'நல்ல பாம்பு' என்று இருக்கிறது. ஆனாலும் என்னைக் கண்டு மக்கள் நடுங்குகிறார்கள். ஏன்?" என்று கேட்டதாம். முனிவர் சொன்னார், " நீ எல்லோரையும் கடித்து விடுகிறாய், நீ கடிக்கிற காரணத்தால் தான் 'நல்ல பாம்பு' என்று பெயர் இருந்தும் உன்னைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆகவே இனி நீ யாரையும் கடிக்காதே" என்று முனிவர் எடுத்துச் சொன்னார். பாம்பு போய் விட்டது. 


                                சில மாதங்கள் கழித்து அந்த பாம்பு முனிவரைக் காண வந்தது. பாம்பின் உடல் எல்லாம் காயங்கள். "ஏன் இவ்வளவு காயப்பட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். பாம்பு சொன்னது "உங்கள் சொற்படி நான் யாரையும் கடிக்காமல் இருந்தேன். அதனால் என்னைப் பார்த்தவர்களெல்லாம் அடி அடி என்று அடித்தார்கள். அதனால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை" என்று கண்ணீர் வடித்தது. 


                                முனிவர் சொன்னாராம்: "உன்னைக் கடிக்கக் கூடாது என்றுதான் சொன்னேனே தவிர, ஒரு சீறு சீறி காட்டக்கூடாது என்றா சொன்னேன். கடிக்க வேண்டாம், அதற்காக உன்னை அடிக்க வந்தவர்களைப் பார்த்து ஒரு சீறு சீறி இருந்தால் உன்னை அடிக்காமல் இருந்திருப்பார்கள் அல்லவா, நீ கடிப்பதை மறந்து விடு. ஆனால் சீறுவதை மறந்து விடாதே" என்று முனிவர் சொன்னாராம்.


இக்கதையின் நீதி:-
               நல்லவனாக இருக்கலாம். ஆனால் கோழைகளாக இருந்து விடக் கூடாது. சாதுவாக இருக்கலாம்; பரம சாதுக்களாக இருந்துவிடக் கூடாது. தீமைகளைக் கண்டு பொங்குகிற இதயம் நிச்சயமாகத் தேவை. 

Translate