Search This Blog

Tuesday, February 8, 2011

13. ஏனாதி நாத நாயனார்

              ஏனாதி நாத நாயனார் சோழநாட்டிலே எயினூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர். தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் கடமையாற்றி வந்தார். அதன் மூலம் வரும் பொருள் வளங்களால் சிவனடியார்களை உபசரிக்கும் பேரன்பினராய் விளங்கினார்.
ஏனாதிநாதர் வாட்படை பயிற்றும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு வாழும் காலத்தில் போர்பயிற்சி பெறவிரும்பிய பலரும் அவரையே சார்ந்து பயின்றனர். இதனால் அவரது தாய்முறையிலான அதிசூரன் என்பானுக்கு அத்தொழில் வருவாய் குறைந்தது. அதனால் ஏனாதிநாதர் மீது பொறாமையுற்ற அதிசூரன் வீரர் கூட்டத்தோடு சென்று ‘வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது’ என அவரை போருக்கு அறைகூவியழைத்தான்; ஏனாதியார் போர்க்கோலம் பூண்டு சிங்க ஏறுபோல் புறப்பட்டார். அவரிடம் வாள் வித்தை பயிலும் காளையரும் வாள்வீரரான அவரது சுற்றத்தலைவரும் அவரின் இரு பக்கமும் சூழ்ந்து சென்றனர். ‘நாம் இருவரும் சேனைகளை அணிவகுத்துப் போர் செய்வோம். போரில் வென்றார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கைக்கொள்ள வேண்டும்’. என்று அங்கு அதிசூரன் கூறினான். ஏனாதிநாதரும் அதற்கு இசைந்தார். இருவரிடையேயும் நடந்த வாட் போரில் அதிசூரன் தோற்றோடினான்.

             தோற்றோடிய அதிசூரன் மானமழிந்ததற்கு நொந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி ஆலோசித்தான். இறுதியில் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான்.
நாம் இருவருக்குந் துணைவருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டும் நாளை விடியற்கலாத்தே வேறோர் இடத்திற் போர் செய்வோம், வாரும்” என்று ஒருவனைக் கொண்டு ஏனாதிநாதருக்குச் சொல்லியனுப்பினான். அதுகேட்ட ஏனாதிநாதர், சுற்றத்தார் யாரும் அறியாதபடி அவன் குறித்த போர்களத்திற் சென்று அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். தீங்கு குறித்து அழைத்த தீயோனாகிய அதிசூரன், ‘திருநீறு தாங்கிய நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதிநாதர்’ என அறிந்து முன் எப்பொழுதுமே திருநீறிடாத அவன், நெற்றி நிறைய வெண்ணீறு பூசி நெஞ்சத்து வஞ்சனையாகிய கறுப்பினை உட்கொண்டு வாளும் கேடகமும் தாங்கி தான் குறித்த இடத்திற்குப் போனான். அங்கு நின்ற ஏனாதி நாதரைக் கண்டு அவரை அணுகும் வரை தனது நெற்றியை கேடயத்தால் மறைத்துக் கொண்டு அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதர் சமயந் தெரிந்து அவனை எதிர்த்துப் பொருத முற்பட்ட வேளையில், அதிசூரன் தன் முகத்தை மறைத்த கேடகத்தை சிறிது விலக்கினான். அப்பொழுது அவனது நெற்றியிலே திருநீற்றினைக் கண்ணுற்றார் ஏனாதிநாதர். கண்டபொழுதே ‘கெட்டேன் இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். அதனால் இவர்தம் உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்’ என்று தம் கையிலுள்ள வாளையும், கேடகத்தையும் நீக்கக் கருதினார். ஆயினும் ஆயுதம் இல்லாதவரைக் கொன்றார் என்ற பழி இவரை அடையாதிருத்தல் வேண்டும் என்று எண்ணி, வாளையும், பலகையையும் கையிற்பற்றியபடியே போர் செய்வார் போல் வாளுடன் எதிர் நின்றார். அந்நிலையில் முன்னே நின்ற தீவினையாளனாகிய அதிசூரன் தனது எண்ணத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தொன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

No comments:

Post a Comment

Translate