Search This Blog

Tuesday, February 8, 2011

9. இளையான்குடி மாறநாயனார்


             இளையான்குடி என்னும் ஊரிலே மாறனார் என்னும் பெயருடைய பெரியாரொருவர் இருந்தார். அவர் உழவுத்தொழில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார். சிவனடியார் யாவரெனினும் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறிவரவேற்று அழைத்து வருவார். கரக நீர் கொண்டு அவர்கள் பாதங்கள் விளக்கி அத்தீர்த்ததைத் தன் தலையில் தெளிப்பதுடன் உள்ளும் பருகுவார். மெல்லிய துணியால் பாதங்களை ஒற்றி ஆசனத்தில் அமரச் செய்து பூசனை செய்யவார். பின்பு கைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுசுவையை உடையனவாய் உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது எனும் நால்வகை உணவுகளை அவரவர் விருப்பப்படி அமுது செய்விப்பார். நாள்தோறும் செய்த இம்மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால் அவரது செல்வ்ம் நாளுக்கு நாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்தத் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடிமாறறது செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கவும், தம்மனஞ்சுருங்குதலின்றித் தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மையே விற்றுக் கொடுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும் அடியார்க்கு அமுதளித்தலாகிய பணியை விடாது செய்து வந்தார்.

            இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறனாரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். மாறன் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து திருமேனியை ஆடைகொண்டு துவட்டி இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்குத் திருவமுது செய்வித்தல் வேண்டும் என்னும் பெருவிருப்புடன் ‘சிவனடியார் மிகவும் பசித்துள்ளார் என்ன செய்வது?”. முன்னமே நமக்கு இங்கு உணவில்லை. ஆயினும் இறையடியார்க்கு அமுதளித்தல் வேண்டுமே? இதற்கு யாது செய்வோம்? என வினாவினாள். அதுகேட்ட மனைவியார், ‘நம் வீட்டினில் ஒன்றும் இல்லை; அயலாரும் இனித் தருவாரில்லை. பகற்பொழுதும் போயிற்று. தேடிப்போதற்குரிய இடமும் வேறில்லை. தீவினையேன் என் செய்வேன்? என்று சொல்லி “இன்று பகற் பொழுதிலே வறுமை நீங்க வயலில் விதைத்த செந்நெல் முளையை வாரிக் கொண்டுவந்தால் இயன்ற அளவில் அமுது சமைக்கலாம். இதுவன்றி வேறுவழியறியேன்” என்றார்.



            அதுகேட்டு மகிழ்ந்த மாறனார், அந்தகாரமான நள்ளிருளிலே இறை கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வயலை அடைந்து காலினால் தடவிச் சென்று மழை நீரில் மிதந்த நெல்முளைகளைத் தம்கைகளால் கூடையில் நிறைத்து விரைவாக வீடு திரும்பினார். வீட்டுவாயிலிலே கணவரை எதிர்நோக்கி நின்ற மனைவியார், நெல்முளையை வாங்கிச் சேறுபோக நீராற்கழுவிச் ‘சோறுசமைத்தற்கு விறகு இல்லையே’ என வருத்தமுற்றார். மாறனார் தம் வீட்டுக் கூரையில் சிதைந்து விழும் நிலையிலிருந்த வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவற்றைக் கொண்டு அடுப்பு மூட்டி நெல்முளையை ஈரம்போக வறுத்துக்குற்றி அரிசியாக்கி உலையிலிட்டுச் சோறு சமைத்து, “இனி கறிக்கு யாது செய்வோம்’ எனக் கவலையுற்றார். அப்பொழுது மாறனார் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்று குழிநிரம்பாத கீரைப் பயிரினைக் கைகளால் தடவிப்பிடுங்கிக் கொண்டு வந்தார். மனைவியார் அவற்றை வாங்கி ஆய்ந்து தம் கைத்திறத்தால் வெவ்வேறு கறியமுதாகச் செய்து முடித்து ‘இனிச் சிவனடியாராத் திருவமுது செய்ய அழைப்போம்’ என்றார். மாறனார் உணர்வினால் உணர முடியாதா சிவனடியாரைத் துயில் எழுப்பி “அடியேன் உய்ய என் இல்லம் எழுந்தருளிய பெரியோய்! அமுது செய்தருள்க.’ என வேண்டி நின்றார். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான் சோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு மாறனாரும் மனைவியும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, ‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக’ என்று அருள் செய்து மறைந்தருளினார்.

No comments:

Post a Comment

Translate