Search This Blog

Sunday, October 9, 2011

மூவர் தேவாரம்


தேவாரம்
தேவாரங்கள் எனப்படுபவை சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி  நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன.  பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே  பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம் , சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.

திருமுறை
பாடியவர்
பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்
1469
இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்
1331
மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்
1346
நான்காம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
1060
ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
1015
ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
980
ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார்
1026
மொத்தம்
8227
தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன்  பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்(தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார்.
இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.
அற்புதங்கள்
¬  மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை
¬  சிவபெருமானிடத்தே பொற்றாளமும் ,முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும் ,முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.\
¬  சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கம் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார், ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது.வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம், வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
¬  அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது
¬  பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
¬  விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது
பாடல்கள்:
இவர் பாடிய பாடல்களை பார்க்க கிழே உள்ள Link-ஐ க்ளிக் செய்யவும்
முதலாம் திருமுறை
இரண்டாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்
திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். மருணீக்கியார் தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச் சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்த போது திருநாவுக்கரசர் தர்மசேனா என்றழைக்கப்பட்டார்
இவரது தமக்கையார் திலகவதியார். சிறந்த சிவபக்தராக இருந்தார். தம்பியார் சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். அக்காலத்தில் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டதாம். சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது போகவே திலகவதியாரின் ஆலோசனைப்படி சிவனிடம் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்ததாம். இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டு தூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணத்தைச் சார்ந்திருந்த பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் சம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சரியைத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசு சுவாமிகள் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் சாலோக முக்தியடைந்தார்.
அவர் பாடிய தலங்களில் முக்கியமானதலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இஙகு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்ற்ப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள்
¬  சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
¬  சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
¬  சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
¬  சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
¬  சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
¬  வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
¬  விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது
¬  காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.
பாடல்கள்:
இவர் பாடிய பாடல்களை பார்க்க கிழே உள்ள Link-ஐ க்ளிக் செய்யவும்
நான்காம் திருமுறை
ஐந்தாம் திருமுறை
ஆறாம் திருமுறை

சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அற்புதங்கள்
¬  செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
¬  சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
¬  காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
¬  முதலை விழுங்கிய பிராமணப்பெண்ணை அம்முதலையின் வாயின்று அழைத்துக் கொடுத்தது.
¬  வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
பாடல்கள்:
இவர் பாடிய பாடல்களை பார்க்க கிழே உள்ள Link-ஐ க்ளிக் செய்யவும்

 ஏழாம் திருமுறை

No comments:

Post a Comment

Translate