Search This Blog

Saturday, October 22, 2011பதினெண் சித்தர்கள்:
1.நந்தீசர்2.அகத்தியர்3.திருமூலர்4.புண்ணாக்கீசர் 5.புலத்தியர்
6.பூனைக்கண்ணர்7.போகர்8.கருவூரார்9.கொங்கணவர்10.காலாங்கி நாதர்
11.பாம்பாட்டிச் சித்தர்12.தேரையர்13.குதம்பைச் சித்தர்14.இடைக்காடர்
15.சட்டை முனி16.அழுகண் சித்தர் 17.அகப்பேய்ச் சித்தர்18.தன்வந்திரி

நந்தீசர்:
நந்தீசர் கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார்.

அகத்தியர்:
அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன.

திருமூலர்:
இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர்.


புண்ணாக்கீசர்:
காயகல்பம் உண்டு, அதிக ஆண்டுகள் இருந்து, பல சித்துக்களைச் செய்தவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் சீடர் என்பர். இவர் கேரளத்தில் உள்ள நாங்குணாசேரி என்ற ஊரில் சமாதி பெற்றார் என்பதாகப் போகர் கூறுகிறார்.
மூப்பு, சுண்ண செய்நீர், ஞானப்பால், மெய்ஞ்ஞானம், யோகப் பாடல் போன்றன இவர் நூல்களாம். இவரது சீடர் மச்ச முனி.

புலஸ்தியர்:
அகத்தியரின் முதல் மாணாக்கராக விளங்கியவர். இவர் சிவராச யோகி என்ற பெயரும் பெற்றவர். புலம் என்றால் தவம். இவர் தவத்தினால் புகழ் பெற்றவர் ஆதலால் இப்பெயர் பெற்றார் என அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். இவரே முதலில் புராணங்களை வெளிப்படுத்தியவர் என்பர்.

பூனைக்கண்ணர்:
கண்களின் நிறம் மாறுபட்டிருந்ததால் பூனைக்கண்ணன் என்றழைக்கப்பட்டார் என்பர். இவர் எகிப்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வைத்திய யோக ஞான சாஸ்திரங்களைக் கற்று, பின்பு எகிப்து நாட்டிற்குச் சென்று அறப்பணிகளைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய செய்திகள் அதிகமாகக் கிடைக்கவில்லை.

போகர்:

இவர் காலாங்கி நாதரின் சீடராவார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து பிறகு சீனதேசத்தில் பல காலம் வாழ்ந்து, பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்து பழநியில் வசித்தவர். சீனத்திலிருந்து திரும்பும்போது இவருடன் வந்த சித்தரே புலிப்பாணி ஆவார்.
சீனத்தில் இவர் போ-யாங் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

கருவூரார்:
கொங்கு மண்டலத்தில் கருவூரில் பிறந்தவர். அதனாலேயே கருவூர்த் தேவர் என அழைக்கப்பட்டார்.
கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் கொங்கு நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் வரிசையில் இவரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்ப வைத்து நோக்கினால் இருவரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானர் என்பதை அறியலாம். கருவூர்த் தலபுராணம் இவரை அகத்தியரோடு இணைத்துக் கூறுகிறது. எனினும் பல அகத்தியர்கள் இருந்ததாக எண்ணப்படுவதால் இவரின் காலத்தை அறிவது கடினமே.

கொங்கணவர்:

மேலைக் கடற்கரை கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர்.பிறகு, நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர்.

காலாங்கி நாதர்:
வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது.

அகப்பேய்ச் சித்தர்:
மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால் அகப்பேய்ச் சித்தர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது.
அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.
வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.


பாம்பாட்டிச் சித்தர்:
தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்த சித்தர்களில் இவரும் ஒருவர். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்து வேடிக்கை காட்டுவதே இவர் தொழில். அவற்றின் விஷத்தைக் கக்க வைத்துச் சாதாரணமான தண்ணீர்ப் பாம்பு போல் ஆக்கிவிடுவார். விஷத்தை முறிக்கும் மூலிகைகளையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். விஷ வைத்திய ஆராய்ச்சியாளர் என்றே அவரைக் கூறலாம். மருத மலையில் விஷ வைத்திய ஆய்வுக் கூடமே நடத்தினார்.


தேரையர்:
அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது.

குதம்பைச் சித்தர்:
பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்குபவர் குதம்பைச் சித்தர். இவர் தம் பாடல்களில் காதில் அணியும் அணிகலன்களுள் ஒன்றான குதம்பையை முன்னிலைப் படுத்தி, ‘குதம்பாய்’ என்று பாடியதால்தான் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
யோக நெறி, பக்தி நெறி, புறப் பூசை ஆகிய அனைத்தையும் கடந்த மலோன நிலையை அடைந்த அவர், கீழ்ப்பட்ட நிலைகள் தேவையில்லை எனப் பாடுகின்றார்.

இடைக்காடர்:
நாட்டுப்புறப் பாடல்களில் திருவிழாக் காலங்களில் இன்றும் இப்பாடல்களைப் பாடி, ஆடிக்கொண்டு, ஒயிலாட்டம் முதலான கூத்துக்களை ஆடுபவர்களைக் காணலாம்.
அந்த அளவுக்குச் சித்தர் நெறியையும், சமய உணர்வையும் ஆழப்பதிக்கும் பாடல்களில் இடைக்காடர் பாடல்களையும் சேர்க்கலாம். எளிய சொற்கள், ஆழமான கருத்துகள், இனிய சந்தங்கள் இவையே இடைக்காடரின் தனிச் சிறப்புகள் எனலாம்.குறிப்பாக, இவர் பாடல்களில் கோனே, கோனாரே, தாண்டவக் கோனே என்னும் சொற்கள் அமையப் பாடுதல் இவர் இயல்பாகும்.

சட்டை முனி:
தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். 

1 comment:

 1. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காணவேண்டுமா?
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete

Translate