Search This Blog

Friday, February 20, 2015

எனது 10ஆம் வகுப்பு சின்மயா மாணவர்களுக்காக நான் இன்று வழங்கிய பிரிவுரை மடல்

வா என்றழைப்பதற்குள் வருடங்கள்
போய்விட்டனவே !!

வண்ண மலர்களால் அலங்கரிப்பதற்குள்
வசந்தம் போய்விட்டனவே!!!

சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு முன்பே
சிறகடித்துப் பறக்கப் புறப்பட்டனவே!!

அன்பு வெளிப்படும் வேளையில்
அன்னங்கள் அகல்வது ஏனோ?

பத்தரை மாத்துத் தங்கங்கள் இன்று
பட்டாம்பூச்சியாய்த் திரிவது ஏனோ?

தங்கக் கிரீடங்கள்
தடம் பதிக்கத் துள்ளுவது ஏனோ?

நகையாடிய செவ்விதழ்கள் இன்று
நனி மகிழ மறுப்பது ஏனோ?

கவச குண்டலமாய் கம்பீரமாய்
நின்ற  உம் இரு விழிகள்
இன்று இலைமறைக்காயாய் இருப்பது ஏனோ?

சலங்கையின் சாரல்கள் போல்; உன்
சரமழையின் சரீரம் குறைந்தது ஏன்?

மனம் மணக்கும் மாலைகளே; இன்று
மனமகிழ மறுப்பது ஏனோ?

இரகரகமாய், ரம்மியமாய், இரத்தினங்களாய்
நகர்வதும் ஏனோ?

ஏன்? ஏன்? என்ற புதிருக்குப் புரியாமல்
புயலுக்குப்பின் அமைதியாய் ஆவதும் ஏனோ?

ஏனென்று நீ என்னைக் கேட்டால்; கேள்வியின்
கோலமாய் விடையளிப்பேன்
அது பிரியா விடையென்று!!

பிரிவு என்பது நிரந்தரமல்ல
அது நம்மைப் பிணைக்கும் பரிவு என்று
என்னால் உரைக்க முடியும்!!

ஆம் குழந்தாய்! உன்னுடைய
ஒவ்வொரு புதிருக்கும்,

நீ விடைகாண
விண்ணை வெற்றிகொள்ள

 உம்முடைய பரிவு; இன்று
பிரிவாகப் பிண்ணி நிழலாடுகிறது.

இந்த நிதர்சனமான உண்மையை
உமக்குள் ஏற்று; பரிவு
என்ற பிணைப்பைப் பிரிக்க
எந்த பிரிவுக்கும் முடியாது என்று கூறி… நீவிர்

விண் என்ற வெற்றியை நாட்ட;
கண்மனி என்று உன் பெற்றோர்கள் போற்ற

பலே மாணவர்கள் எனப் பள்ளி புகழ
அதுதான் மாணவர்களென
பிற ஆசிரியர்கள் போற்ற - ஆனால்
இதுதான் என் மாணவர்களென
நான் இறுமாப்புக் கொள்ள
விரைந்திடுங்கள், செயலாற்றிடுங்கள்!!

விண்ணில் விதைத்த விளக்கொளி
சுடர்விட்டுப் பிரகாசமாய் ஜொலிக்க;

சின்மயாவின் சித்திரங்களாய்
சித்ரகலாவின் புத்திரர்களாய்
வாகை சூட; 

வண்ண மயில்தோகை விரித்தாடும்
மயிலொத்த உங்களை வாழ்த்தி அனுப்புகிறேன்….
அன்பை எனக்கு அணுதினமும் தருவீர்களென்று….

முயலுங்கள், முனையுங்கள், முனைப்புடன் செயல்படுங்கள்
முடியுமென்று முக்கனியையும் நாட்டுங்கள்.

இறுதியாக……….
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்,
முயலாமை வெல்லாது.
என்பதை உனக்குள் கொண்டு

பெற்றோரையும், உற்றோரையும்,
உதவியோரையும் மனதில் நிறுத்தி;
உனக்காக, உன் வாழ்விற்காக
கடைமையை ஆற்று.

அப்பொழுது,
கல்லும் கரைந்து கனியாக
உம் கரங்களில் மாறும் !!
என வாழ்த்திப் பிரியா விடை தருகிறேன்.
-          இவண்
சித்ர கலா
(தமிழாசிரியை)



No comments:

Post a Comment

Translate