Search This Blog

Friday, June 17, 2011

52. புகழ்த்துணை நாயனார்

புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.

புகழ்த்துணையார் சோழ நாட்டிலுள்ள செருவிலிபுத்தூரிலே சிவவேதியர் குலத்தில் தோன்றினார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. அவர் பசியில் வாடினார். அப்போதும் இறைவரை விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தார். ஒருநாள் பசியால் வாடி இறைவரைத் திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கமாட்டாமையினால் கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் விழுத்திவிட்டு நடுங்கி வீழ்ந்தார். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவரது கனவில் தோன்றி ‘உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும், ஒரு காசு நாம் தருவோம்’ என்று அருளினார். புகழ்த்துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ்ப் பொற்காசு கண்டு கைக்கொண்டு களித்தனர். அவ்வாறு பஞ்சம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர்.

No comments:

Post a Comment

Translate