Search This Blog

Wednesday, August 31, 2016

பிறந்த நாள் வாழ்த்து மடல் - 2016


பிறந்த நாள் வாழ்த்து மடல் - 2016
என் கண்ணன் பிறந்த நாள்.
காவியம் படைத்த நாள்
கண்ணீருக்கு விடையளித்த நாள்
காவலனாய்க் கருதிய நாள்
      என் மனதில் ஆயிரமாயிரம் நினைவலைகள் கரை புரண்டோடியது, என் அழகிய மகனுக்குக் கவிதை தீட்ட வேண்டுமென்று.இதனை உரைக்கவும் செய்தேன் என் பதியிடம்.பேசா மடந்தையாய் இருக்கும் என் பதியோ வாய் திறந்து மொழிந்த மொழிகள்…. கவிதைக்குக் கவிதையா?
      எத்தனை நிதர்சனமான உண்மை.அதையே என் முதல் அடியாக எடுத்தேன்.என் முதல்வனுக்கு முத்தானத் தமிழால் தமிழிசை இசைக்கப் புறப்பட்டேன்.இதற்குப் புறப்படவும் வேண்டுமா? என்ற அங்கலாய்ப்பின் ஆழ்மனம்.ஆங்காங்கே, ஆய்ந்தறிந்த அருந்தமிழ் மொழியை அள்ளி அரசனுக்குச் சூட்டு என்றது.
விடியலாய் வந்தது.
விழி எழச் செய்தது.
தங்க மகன் அன்புக்கு
தார்மீகப் பொறுப்பேற்றது.
சிங்க நடைக் குருளைக்கு
சீரிளமைப் பாட முற்பட்டது.
வார்த்தை ஜாலம் அவனை வசை பாடும் என்பதால்,வண்ணத்தமிழ் கொண்டு வகைப்படுத்திப் பூஜித்தேன்.அகிலத்தை ஆள வேண்டுமென்று விரும்பியே அகிலன் என்று பெயர் வைத்தனர் எம் பெற்றோர்.அதற்கு இணங்க அன்னை – தந்தையே அகிலமாக நினைத்து வாழும் அவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்.
பண்பைப் போற்று.
பாரதத்தைப் பற்று
என்று  நான் கூறுவதெல்லாம் என் பாலகனின் பார்வையில், வீண் பேச்சு ..நல்ல பண்பு கொண்ட பாரதத்திலும்,கலாச்சாரம் கொண்ட குடும்பத்திலும் இருக்கும்போது தேவையற்ற பேச்சு என்பதே என் செல்வனின் வாதம்.இதனை நானும் அறிவேன்.
அச்சு, நீ!
அகிலத்தை ஆள வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
ஆன்றோர்களின் வழி நடப்பதே எனது ஆசை இன்று.
அப்துல்கலாமாக வாழ வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
அகிலனாகவே வாழ் என்பதே எனது ஆசை இன்று.
கர்மவீரராக கடமையாற்ற வேண்டுமென்பது எனது ஆசை அன்று.
கண்கலங்காமல் பிறரையும் வாழ வை என்பதே எனது ஆசை இன்று.
       சமுதாயம் என்ற சிற்பியானவன், உன்னைச் சிலை வடிக்க என்றோ தொடங்கி விட்டான்.அச்சிற்பியின் பார்வையில் அழகிய சிலையாக,அறிவு தரும் கலையாக உருவெடு.சிற்பி வடிக்கும் எல்லா சிலைக்கும் மதிப்பில்லை என்பதை நான் அறிவேன்.மதிப்பைத் தேட வீண் முயற்சிகளும் தேவையில்லை என்பதே என் வாதம்.சிற்பி அழகிய சிலையை உருவாக்க சிலையாக உருவெடுக்கும் நீயும் விட்டுக்கொடுக்கக் கூடிய பண்பையும்,சகிப்புத்தன்மையையும்கொண்ட அழகிய சகோதரனாக மாறு.
சகோதரப் பாசமே சகலத்தையும் கட்டிப்போடும் மிகச் சிறந்த செங்கோல்.  
மொத்தத்தில், நீ நீயாக இரு!!!நினைத்ததை முடிக்க நீடுழி வாழ்க!!!என்றும் என்றென்றும் என் ஆசி உன் வசம்…வாழ்க பல்லாண்டு!!!!!!

      

No comments:

Post a Comment

Translate