Search This Blog

Sunday, August 17, 2014

குழந்தைப்பாடல்கள்

கடவுள் ஒருவனே
கடவுள் ஒருவனே – அவன்
கருத்தினில் நிலைப்பவன்
எங்கும் இருப்பவன் – அவன்
எண்ணியாங்கு முடிப்பவன்
நமக்கு அவன் தலைவனே
நாம் அவனைத் தொழ …..மறவோமே!!!!

பாலர் ஆத்திச்சூடி
அன்பைப் போற்று
ஆற்றலைப் பெருக்கு
இன்முகம் நாடு
ஈன்றோரை வணங்கு
உதவியை மேற்கொள்
ஊக்கத்தை விரும்பு
எண்ணியதை முடி
ஏற்றம் பெறு
ஐயை போல் வாழ்
ஒழுக்கத்தைக் கடைபிடி
ஓதலை ஓம்பு
ஔவை வழி நட

அ ஃதேவென கட

குழந்தைப் பாடல்கள்

பள்ளி
பாலர் நாம் பாடிடுவோம்
பள்ளியின் புகழைப் போற்றிடுவோம்
இறைவன் எழுந்தது கோயில் என்றால்
பள்ளியும் அதனுள் இணையன்றோ
படித்திடுவோம் பகர்ந்திடுவோம்
பாலகர் நாம் புகழ் பெறுவோம்
புண்ணிய பூமியாம் நம் பள்ளியை
புகழின் உச்சிக்கே அழைத்துச் செல்வோம்
எட்டுத் திக்கும் பறை சாற்றுவோம்
எங்கள் பள்ளியே உயர்ந்ததென்று
உழைப்பின் மூலம் நிலை நாட்டுவோம்

உரிய இடத்தைத் தக்க வைப்போம்

Saturday, August 2, 2014

அன்பின் வகைகள்

அன்பின் மூன்று வகைகள்:
                         அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.

                         அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8) என்று அன்பின் அதிமுக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும், அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)
                என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளை அறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்
உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1. மிருக அன்பு :
                 மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது
                         இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது.
                         உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன் துடப்பத்தில் இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .
2. மனித அன்பு:-
                மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்
மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.
                ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை" என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி உதை கிடைத்து விடும் என்ற பயம்தான்.
                ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!

அறம் - முதுமொழிக் காஞ்சி

அறஇலக்கியங்களுள் முதுமொழிக்காஞ்சி
முன்னுரை :
அற இலக்கியங்களைப் பற்றி    அலசுவதற்கு முன்  அறம் என்றால் என்ன ?என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
அறம் -நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்மொழியலாம். அறுஎன்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே அறம்என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே  அறம் என்று கூறுவர் சான்றோர்.
அறத்தின் அடிப்படை :
மனிதக்கூறுகளின் அடிப்படையில் அமைந்த பெருஞ்செல்வங்களுள் ஒன்றே அறம். இவ்வறமானது செயலால், சொல்லால், எண்ணத்தால் உருவாகிறதா என்று பார்ப்போமேயானால் செயலுக்கு அடிப்படை எண்ணம், எண்ணத்தின் அடிப்படை சொல்லும், செயலும் ஆகும். அறமானது எப்பொழுது புனிதத்தன்மையை அடையும் என்று பார்த்தால் ஒருவனிடம் பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் முதலியன அறவே இன்றி இருப்பவனிடமே அறம் என்ற குணம் நிலைத்து நிற்கும்.
அற இலக்கியம்:
தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானது சங்க காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்கள். சங்ககாலம் எவ்வாறு காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலமாக விளங்கியதோ அவ்வாறே இதனையடுத்து வந்த சங்கம் மருவிய காலம்அறம்என்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாகத் திகழ்கிறது. இவை நீதி நூல் இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  சிக்கல்கள் எழாமல் சமுதாயம் சீராகச் செயல்படுவதற்குச் சில பொதுவான அறங்களை முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள். அந்த அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அறஇலக்கியத் தோற்றம் :
                தமிழ் இனத்தின் பொற்காலம் சங்க காலம் என்பது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியோடு முடிவுற்றது. உலகம் போற்ற வாழ்ந்த மூவேந்தரும் தம் உரிமையை இழந்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டை நாட்டைப் பல்லவரும் பிடித்துக் கொண்டனர். பின்னர் இடைப்பட்ட சோழநாடும் இவர்கட்கு அடிமைப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருள் சூழ்ந்தது. தமிழர் மொழியும், கலையும், பிற பண்பாட்டுக் கூறுகளும் பெரும் மாற்றத்துக்கு ஆட்பட்டன. பாலியும், பிராகிருதமும், வடமொழியும் செல்வாக்குப் பெற்றன. சமணமும் பௌத்தமும் பெருமை பெற்றன. வைதிகர்களுக்கும், சமண பௌத்தர்கட்கும் இடையே பூசல்கள் நிகழ்ந்தன. இத்தகைய காலத்தில் உருவான 18 நூல்களையே இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்கின்றனர். இவற்றுள் பெரும்பான்மையானவை நீதிநூல்கள். எனவே இக்காலப்பகுதியை நீதிநூல் காலம் என்பது பொருந்தும். இதே காலத்தில்தான் (கி.பி. 470) மதுரையில் வச்சிரநந்தி என்ற சமணப் பெரியவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தினை நிறுவினார். இச்சங்கத்தில் பல நீதிநூல்கள் உருவாயின.
அற இலக்கிய நூல்களும் பிரிவுகளும் :
பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக்கொண்டவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டது. மேற்கணக்கு நூல்கள் மூன்றடி முதல் ஆயிரம் அடிவரை எழுதப்படும் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய வகைகளில் எழுதப்பட்டவை. மாறாக கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
தமிழகம் முதன் முதல் அயலவர்க்கு அடிமைப்பட்ட இருண்ட காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இக்காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் அமைந்தது. இத்தொகுதியில் உள்ளவற்றை 1) நீதி உரைப்பன 2) காதலைப்பாடுவன 3) போரைச் சிறப்பிப்பது என மூன்று பிரிவில் அடக்கலாம்.

Tuesday, April 8, 2014

அழகு - அருணா

விண்ணுக்கு விண்மீன் அழகு
வண்ண என் கண்ணுக்கு -
- அவளின் வடிவம் அழகு!
பாசத்திற்குப் பரந்தாமன் அழகு
நேசத்திற்கு என்னவளின்
பார்வையழகு!
பரிவுக்குப் பேகன் அழகு
கரிய என் கனிவுக்கு
அவளின் கனிவாய் அழகு!
திமிருக்குத் தில்லை வள்ளியம்மை அழகு
நிமிர்ந்த நன்னடத்தைக்கு
குமரியவளே அழகு!
சினத்திற்கு சீவகன் அழகு
இனத்திற்கு என்
இனியவள் அழகு!
கடவுள் நெறிக்கு காரைக்காலம்மையார் அழகு
கடந்துபோகும் நாட்களுக்கு
அவளது கடமை அழகு!
நட்புக்கு கர்ணன் அழகு
மட்கா என் காதலுக்கு
அவளது வைரநெஞ்சம் அழகு!
பெற்றோருக்குச் சிரவணன் அழகு
உற்றோரான எங்களுக்கு
அவளின் உறுதுணை அழகு!

Translate