Search This Blog

Saturday, August 2, 2014

அறம் - முதுமொழிக் காஞ்சி

அறஇலக்கியங்களுள் முதுமொழிக்காஞ்சி
முன்னுரை :
அற இலக்கியங்களைப் பற்றி    அலசுவதற்கு முன்  அறம் என்றால் என்ன ?என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
அறம் -நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்மொழியலாம். அறுஎன்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே அறம்என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே  அறம் என்று கூறுவர் சான்றோர்.
அறத்தின் அடிப்படை :
மனிதக்கூறுகளின் அடிப்படையில் அமைந்த பெருஞ்செல்வங்களுள் ஒன்றே அறம். இவ்வறமானது செயலால், சொல்லால், எண்ணத்தால் உருவாகிறதா என்று பார்ப்போமேயானால் செயலுக்கு அடிப்படை எண்ணம், எண்ணத்தின் அடிப்படை சொல்லும், செயலும் ஆகும். அறமானது எப்பொழுது புனிதத்தன்மையை அடையும் என்று பார்த்தால் ஒருவனிடம் பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் முதலியன அறவே இன்றி இருப்பவனிடமே அறம் என்ற குணம் நிலைத்து நிற்கும்.
அற இலக்கியம்:
தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானது சங்க காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்கள். சங்ககாலம் எவ்வாறு காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலமாக விளங்கியதோ அவ்வாறே இதனையடுத்து வந்த சங்கம் மருவிய காலம்அறம்என்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாகத் திகழ்கிறது. இவை நீதி நூல் இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.  சிக்கல்கள் எழாமல் சமுதாயம் சீராகச் செயல்படுவதற்குச் சில பொதுவான அறங்களை முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள். அந்த அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அறஇலக்கியத் தோற்றம் :
                தமிழ் இனத்தின் பொற்காலம் சங்க காலம் என்பது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியோடு முடிவுற்றது. உலகம் போற்ற வாழ்ந்த மூவேந்தரும் தம் உரிமையை இழந்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டை நாட்டைப் பல்லவரும் பிடித்துக் கொண்டனர். பின்னர் இடைப்பட்ட சோழநாடும் இவர்கட்கு அடிமைப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருள் சூழ்ந்தது. தமிழர் மொழியும், கலையும், பிற பண்பாட்டுக் கூறுகளும் பெரும் மாற்றத்துக்கு ஆட்பட்டன. பாலியும், பிராகிருதமும், வடமொழியும் செல்வாக்குப் பெற்றன. சமணமும் பௌத்தமும் பெருமை பெற்றன. வைதிகர்களுக்கும், சமண பௌத்தர்கட்கும் இடையே பூசல்கள் நிகழ்ந்தன. இத்தகைய காலத்தில் உருவான 18 நூல்களையே இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்கின்றனர். இவற்றுள் பெரும்பான்மையானவை நீதிநூல்கள். எனவே இக்காலப்பகுதியை நீதிநூல் காலம் என்பது பொருந்தும். இதே காலத்தில்தான் (கி.பி. 470) மதுரையில் வச்சிரநந்தி என்ற சமணப் பெரியவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தினை நிறுவினார். இச்சங்கத்தில் பல நீதிநூல்கள் உருவாயின.
அற இலக்கிய நூல்களும் பிரிவுகளும் :
பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக்கொண்டவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டது. மேற்கணக்கு நூல்கள் மூன்றடி முதல் ஆயிரம் அடிவரை எழுதப்படும் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய வகைகளில் எழுதப்பட்டவை. மாறாக கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
தமிழகம் முதன் முதல் அயலவர்க்கு அடிமைப்பட்ட இருண்ட காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இக்காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் அமைந்தது. இத்தொகுதியில் உள்ளவற்றை 1) நீதி உரைப்பன 2) காதலைப்பாடுவன 3) போரைச் சிறப்பிப்பது என மூன்று பிரிவில் அடக்கலாம்.

நீதிநூல்களே மிகுதியாகையால், இக் காலத்தை நீதி நூல்களின் காலம் எனலாம்.
பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நீதி நூல்கள்
1.     திருக்குறள்
2.     நாலடியார்
3.     பழமொழி
4.     நாண்மணிக்கடிகை
5.     திரிகடுகம்
6.     சிறுபஞ்சமூலம்
7.     ஏலாதி
8.     ஆசாரக்கோவை
9.     இன்னா நாற்பது
10.  இனியவை நாற்பது
11.  முதுமொழிக்காஞ்சி


அக நூல்கள் (காதலைப் பாடுவன)
12.  திணை மாலை நூற்றைம்பது
13.  ஐந்திணை ஐம்பது
14.  ஐந்திணை எழுபது
15.  திணைமொழி ஐம்பது
16.  கைந்நிலை
17.  கார் நாற்பது

புற நூல் (போரைச் சிறப்பிப்பது)
18.  களவழி நாற்பது

அற நூல்களின் பயன் :
இந்நூல்களைப் படிப்பதனால் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். அவர்களுடைய சமுதாய அமைப்பை அறியலாம். அவர்களுடைய அரசியல் முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். தமிழர்களின் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் அறிவதற்கு இந்தப் பதினொரு நூல்களும் துணை செய்கின்றன.


அற இலக்கியங்களுள் முதுமொழிக்காஞ்சி  :
முதுமொழி முதுசொல், காஞ்சிநிலையாமை. முதுமொழிக்காஞ்சிநிலையாமையைப் பற்றிய பழமொழி. முதுமொழிக்காஞ்சி, காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. (காஞ்சித்திணை, பொதுவாக நிலையாமையைக் கூறும் ).உலகியல் உண்மைகளைத் தெளிவாகப் பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி. அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று. மேலும்காஞ்சிஎன்பது மகளிர் அணியும் ஒருவகை அணிகலக் கோவையைக் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணிபோல முதுமொழிக்காஞ்சி என்று கருதுவாரும் உண்டு. அவ்வாறு பொருள் கொண்டால் முதுமொழிக்காஞ்சி என்பது அறிவுரைக்கோவை என்று பொருள்படும்.
ஆசிரியர் :
இந்நூல் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் கூடலூர். இவர் வேளாண் மரபினர். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் அல்லர். சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்.
நூலின்  சிறப்பு :
                இந்நூல் பத்து பத்துகளும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. எல்லா அதிகாரத்திலும் முதல் செய்யுள் மட்டும்ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்என்றே தொடங்குகிறது. எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற்குறிப்பைக் கொண்டு


1.     சிறந்த பத்து,
2.     அறிவு பத்து,
3.     பழியாப் பத்து,
4.     துவ்வாப் பத்து,
5.     அல்ல பத்து,
6.     இல்லைப் பத்து,
7.     பொய்ப் பத்து,
8.     எளிய பத்து,
9.     நல்கூர்ந்த பத்து,
10.  தண்டாப் பத்து


என்னும் பத்து அதிகாரங்களைக் கொண்டது இந்த நூல். ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்களாக 100 பாடல்கள் உள்ளன.
            நூறதாம் சிறுபஞ்ச மூல, நூறு
                சேர் முதுமொழிக் காஞ்சி
1.     சிறந்த பத்து:
                முதல் பத்து சிறந்த பத்து. சிறந்தனவாகிய பத்துப் பொருள்கள் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன. இதனால் இது சிறந்த பத்து என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன் கண் உள்ள பத்து அடிகளிலும் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்துள்ளது. அதற்குச் "சிறந்தது" என்பது பொருள். பத்து அடிகளில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறந்த பொருளைக் கூறி அதைவிடச் சிறந்த இன்னொரு பொருளைக் கூறி விளக்குவது இதன் சிறப்பு.
.கா., ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை
வன்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை
மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை
                சிறந்த பத்தில் ஒரு மனிதனானவன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அனைத்து வாழ்வியல் கூறுகளையும் எடுத்து இயம்புவது பாராட்டுதற்குறியது.
2.     அறிவு பத்து:
சிறந்த பொருள்களை எவ்வாறு அறிவது என்பதை விளங்க வைப்பதுஅறிவுப்பத்து’. ஒருவனின் மனிதநேய மாண்பை எச்சமயம் அறியலாம் என்றால் எதையும் எதிர்பாராது பயன்மரம் உள்ளூர் பழுத்ததைப் போன்று பிறருக்குச் செய்யும் கொடை மற்றும் உதவியைக் கொண்டே அறியலாம்.
,கா., ஈரம் உடைமை ஈகையின் அறிப
                ஏற்றம் உடைமை எதிர்கோலின் அறிப
                சேரார் நல்நட்பு உதவியின் அறிப
                முதலிய பத்துப் பாடல்களும் அறிவுப் பத்தின் அறிவுப் பசியினை போக்குவதாகவும் அறிந்து செயல்படுவனவாகவும் அமைந்துள்ளது.
3.     பழியாப் பத்து:
 பழியார் என்ற சொல்லால் உலகில் எதையெல்லாம் பழிக்க மாட்டார்கள் என்று பத்து அடிகளில் சொல்வதுபழியாப்பத்து’. பிறரால் பழிக்கப்படாத மானிடனாய் வாழ வேண்டின் அவனது குணாதிசயங்களும் அவ்வாறே அமைதல் வேண்டும்
.கா., யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார்
                செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
இப்பாடல், உதவி செய்யும் பண்புடைய உறவினர் உதவாது இருந்தாலும் பழித்துப் பேச மாட்டார்.
அடுத்து, சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்
                கீழானவர்களின் தீய செயல்களைச் சிறந்த பண்புடையோர் பழித்துக் கூற மாட்டார். இவ்வாறாக ஒவ்வொரு பாடலிலும் பிறரால் பழிக்கப்படாத பத்து பயின்று வருவது போற்றுதற்குரியது
4.     துவ்வாப் பத்து:
எவையெல்லாம் நீங்காது என்பதைச் சொல்லும் அதிகாரம்துவ்வாப்பத்து’. பிறருக்கு கொடுக்க மனமின்றியும், இரந்து வாழ்தலும், போலியாக பிறரிடம் நடிப்பதும், தான் மட்டும் நுகர்வோம் என்பது போன்ற இழிவுடைய செயல்களைச் செய்வதும், முதலிய பத்துப் பாடல்களிலும் கூறப்படும் உண்மைகள் நம் வாழ்வில் நீக்கப்படவேண்டிய ஒன்று என்கிறார் ஆசிரியர்.
.கா., பேண்இல் ஈகை மாற்றலின் துவ்வாது
                                                விருப்பமில்லாமல் கொடுத்தல், கொடாமையின் நீங்காது.
                                                இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
                                                பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது
5.     அல்ல பத்து:
வாழ்க்கையில் அல்ல, அல்ல என்று கூறும் முறையால் நீதிகளைச் சொல்வதுஅல்ல பத்து’. கணவன்/மனைவி, மக்கள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள், சான்றோர்கள் எவராக இருந்தாலும் வாழ்க்கைக்கு உகந்த நன்றே இல்லையெனில் அவர்கள் செய்த செய்வினை செய்யாததற்குச் சமம்.
.கா., தேராமல் கற்றது கல்வியன்று
அதாவது ஆசிரியருக்கு ஒன்றும் உதவாமல் கற்ற கல்வி சிறப்பாகாது.
                சேராக் கையன் சொல்மலை அல்லன்
                ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று
6.     இல்லை பத்து:
இல்லை என்பதைக் கூறும் பத்து முதுமொழிகளை உடையதுஇல்லைப்பத்து’. உலகில் பிறந்த மக்கள் அனைவருக்கும் இங்கு கூறப்போகும் மக்கள் பேற்றைக் காட்டிலும் சிறந்தது எதுவும் இருக்க முடியாது. .கா., மக்கட்பேற்றுக்காக இணையும் இன்பம், மெய்யுணர்வு பெறும் இன்பம், ஆசையை விட்டொழியும் இன்பம், புகழை மிஞ்சிய பொருள் இல்லை என்ற இன்பம், யாசிக்காமல் இருக்கும் இன்பம் பேரின்பம் என்கிறார் ஆசிரியர். மேலும் இந்த பத்தில் இதையெல்லாம் எவன் ஒருவன் பற்றவில்லையோ அவன் இருத்தலை விட இறத்தலே மேல் என்றும் இதை விட இழிவு வேறொன்றும் இல்லை என்றும் விளம்புகிறார்.
.கா., இசையின் பெரியது ஓர் எச்சமில்லை
                வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை
                இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை
7.     பொய்ப்பத்து:
                ‘பொய்ம்மைகூறும் பத்து முதுமொழிகளை உடையதுபொய்ப்பத்து’. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோரின் உயிர் களவாமை வேண்டும் என்ற வள்ளலாரின் மொழிக்கிணங்க எதையும் திட்டமிட்டு, அறுதியிட்டு செய்யாதவன் அற நெறியை அறியாது மனத்தால் பொய்யொழுகி பொய்யுரை பிதற்றுபவன் என்றும் நற்பேறு அடையான்.
.கா., கள் உண்போன் சோர்வு இன்மை பொய்
                காலமறியாதோன் கையுறல் பொய்
                வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்
8.     எளிய பத்து:
கிடைத்ததற்கு அரியது என்று கூறும் பத்து எளிய பத்து, அதாவது மாந்தர்கள் தாங்கள் செய்யும் செயலுக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும், அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை எடுத்து விளம்புவதே இந்த எளிய பத்து,
,கா., துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
                இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது
                பாரம் வெய்யோர்க்குப் பார்த்தோன் எளிது
9.     நல்கூர்ந்த பத்து:
வாழ்க்கைக்கு உகந்த நல்லெண்ணம், சொல், செயல் இம்மூன்றையும் ஒருசேர எவனொருவன் பின்பற்றி நடக்கிறானோ அவ்விடமே நல்லது நடக்கும், நல்லதை நாடிச் செல்லலாம். நல்லது நம்மைத் தேடி வருமேயன்றி அணுவளவும் அசையாது என்பதை எடுத்துக்காட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
.கா., உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று
                அகம் வறியோன் நன்னல் நனி கூர்ந்தன்று
அதாவது, மனத்தில் நலம் இல்லாதவனை விரும்பிச் சேர்தல் பயனற்றது
                                                மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று
10.  தண்டாப்பத்து :
 தவிராமை பற்றிக் கூறும் பத்துதண்டாப்பத்து’. உயர்குலத்தில் பிறந்து சான்றோன் எனப் பெயர்பெற்ற ஒருவன் தன் நிலையிலிருந்து எச்சூழ்நிலையிலும் திரியான் என்பதற்கு இப்பத்து பாட்டும் சான்று.
                .கா., கற்றல் வேன்டுவோன் வழிபாடு தண்டான்
                                வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
                                துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
முடிவுரை:
                அற நூல்களுள் முதுமொழிக்காஞ்சியானது சிறந்தனவற்றைக் கூறி அவற்றை விடச் சிறந்த பொருள்களை எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும். சிறந்தனவற்றை எப்படி அறிவது என்பதை, இந்நூல் எடுத்துரைக்கிறது. எளிமையானவை எவை, பொய்யானவை எவை, பயன் இல்லாதன யாவை என்பதையும் இந்நூல் பட்டியலிடுகிறது. யாருக்கு எது எளிது என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது.
எதிர்மறையால் கூறும் வாழ்வியல் உண்மைகளை, அல்ல பத்து, இல்லைப் பத்து என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறது.
வாழ்க்கையில் இன்ப துன்பங்களை, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையை மனிதன் அடைய வேண்டும் என்ற உண்மைகளையும் உணர வைக்கிறது. அளவில் சிறிய நூலாக அமைந்து, ஆன்றோர் அனுபவ மொழிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூலாக முதுமொழிக்காஞ்சி விளங்குகிறது. கற்றோர் மட்டுமன்றி கல்லாதாரும் ஏற்றுப் பயன்பெறும் வகையில் இனிய எளிய நடையில் தெளிவுற அமைத்திருப்பது வியப்பிற்குரியது.


No comments:

Post a Comment

Translate