Search This Blog

Saturday, January 29, 2011

6. இசை ஞானியார் நாயனார்


            சிவனடியார்கள் அறுபத்து மூவரில் சுந்தர நாயனார் தலை சிறந்தவராவார். அவரது பிறப்பே அலாதியானது.

           சிவனடியார்களில் ஒருவரான ஆலாசுந்தரம் என்பவருக்குச் சிவபெருமான் கொடுத்த சாபத்தால் இசைஞானியார் புனிதவதியின் கர்ப்பத்தில் கருவாக ஜனித்தார். இசை ஞானியார் சடையனார் என்ற நாயனாரின் துணைவியாராவர்.

           இசை ஞானியார் மிகச்சிறந்த சிவபக்தையாக விளங்கியவர். சிவனடியார்களை மிகவும் மதித்து போற்றி நடப்பவர்.

           சிவபெருமான் மீது இவர் கொண்ட பற்று காரணமாகவே சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றெடுக்கும் புனிதப் பணியினை இவருக்கு அளித்தார்.

           சுந்தரமூர்த்தி நாயனாரின் புகழ்ப்போலவே அவரைப் பெற்றெடுத்த இசை ஞானியாரின் புகழும் ஞாலம் உள்ளவும் நிலைத்து நிற்கிறது.

5. ஆனாய நாயனார்


              ஆனாய நாயனார் மங்கலமெனும் ஊரில் ஆயர்குலத்தில் பிறந்த சிவபக்தர் ஆவார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம்.

             கண்ணனைப் போலவே புல்லாங்குழல் ஊதி பசுக்கூட்டங்களை இவர் சந்தோஷப்படுத்துவார். ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல நாயனார் மட்டும் தனி வழியில் நடந்து சென்றார்.

             செல்லும் வழியில் ஒரு கொன்றை மரம் பூச்சொரிந்து நிற்பது கண்டு அம்மரத்தடியில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார் அவர்.

             தேனினும் இனிய அதிமதுரமான இசை அந்தப் புல்லாங்குழலில் இருந்து வெளிவந்தது. அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.

Wednesday, January 26, 2011

4. அரிவாட்டாய நாயனார்


                  சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

                  இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன.

3. அமர்நீதி நாயனார்


               வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.

               அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.

Saturday, January 22, 2011

2. அப்பூதியடி நாயனார்


சிவஸ்தலங்கள் அனைத்தையும் வணங்கும் எண்ணத்துடன் திங்களூரில் அருகில் திருநாவுக்கரசர் செல்லும்போது வழியில் உள்ள தண்ணீர்ப் பந்தலுக்குத் தன்னுடைய பெயர் இட்டிருப்பது கண்டு வியந்து அருகில் இருந்தவரிடம், "இப்பெயர் சூட்டியது யார்?" என்று கேட்டார்.


"இந்தத் தண்ணீர்ப் பந்தல் மட்டுமல்ல. இவ்வூரிலுள்ள அறச்சாலை, நந்தவனம் எல்லாவற்றுக்கும் தங்கள் பெயரைச் சூட்டி தங்கள் மீது பைத்தியம் பூண்ட சிவ பக்தர் அப்பூதியடிகள் ஆவார்" என்றார்.


தன்மீது அப்பூதியடிகள் வைத்திருந்த அளப்பெரிய அன்பைக் கண்டு சிலிர்த்துப் போய் அவருடைய இல்லத்திற்குச் சென்று உரையாடினார். திருநாவுக்கரசர் அவரை வாரித்தூக்கி ஆனந்தக் கூத்தாடினார்.

திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்த அப்பூதியடிகள் வாழை இலை அறுத்து வரும்படி தன் புதல்வனை தோட்டத்துக்கு அனுப்பினார். வாழைத் தோட்டத்தில் இருந்த நாகம் அவரது புதல்வனை தீண்ட, விஷம் தலைக்கேறி, அவன் கீழே விழுந்து இறந்து போனான்.

Translate