Search This Blog

Saturday, January 29, 2011

5. ஆனாய நாயனார்


              ஆனாய நாயனார் மங்கலமெனும் ஊரில் ஆயர்குலத்தில் பிறந்த சிவபக்தர் ஆவார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம்.

             கண்ணனைப் போலவே புல்லாங்குழல் ஊதி பசுக்கூட்டங்களை இவர் சந்தோஷப்படுத்துவார். ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல நாயனார் மட்டும் தனி வழியில் நடந்து சென்றார்.

             செல்லும் வழியில் ஒரு கொன்றை மரம் பூச்சொரிந்து நிற்பது கண்டு அம்மரத்தடியில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார் அவர்.

             தேனினும் இனிய அதிமதுரமான இசை அந்தப் புல்லாங்குழலில் இருந்து வெளிவந்தது. அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.

             மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் - தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.

             ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய", முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.

No comments:

Post a Comment

Translate