Search This Blog

Wednesday, December 28, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -1



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; அமளி - படுக்கை.

No comments:

Post a Comment

Translate