மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.
திருவெம்பாவை நோன்பு
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.
இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.
No comments:
Post a Comment