Search This Blog

Saturday, February 11, 2012

கண்ணன் என் சேவகன்


கண்ணன் என் சேவகன்


        பாரதியார், கண்ணன் மீது நீங்காத பற்றுக் கொண்டமையால், கண்ணனைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, சேவகனாக வைத்துப் பாடியுள்ளார். அதனுள் கண்ணனை சேவகனாகப் பாவித்துப் பாடிய பாடலொன்றைக் காணலாம்.
சேவகன் பொய்யுரைத்தல்:
        கூலியை மிகுதியாக்க் கேட்பதும், முன்பு கொடுத்ததை மறப்பதும், வேலையுள்ள போது வராமல் வீட்டில் தங்கி விடுதலும், ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை என்று கேட்கையில் தொடர்பற்ற செய்திகளை தொடர்பாக்குதல் போன்று
        “பானையில் தேள் இருந்து பல்லால் கடித்தது என்பார்
        . . . . .
        பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள் என்பார்”

என்ற பொய்யொன்றை மறைக்க வேறொரு பொய்யைச் சொல்வார். தனக்கு வேண்டியவர்களிடம் தனிமையில் பேசிவிடுவர். வீட்டுச் செய்திகளை எல்லாம் வீதிக்கு கொண்டு செல்வர். எள் இல்லை என்றாலும் எங்கும் முரசறைந்து சொல்வர்.
        “தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவர்
        உள்வீட்டுச் செய்தி  எலாம் ஊர் அம்பலத்து உரைப்பர்
        எள் வீட்டில் இல்லை என்றால் எங்கும் முரசு அறைவார்”

என்று பாரதியார் சேவகனின் பொய்யுரைகளை எடுத்துரைக்கின்றனர். சேவகரால் அடைந்த துன்பம்:
        “சேவகரால் பட்ட சிரம்ம் மிக உண்டு கண்டீர்
        சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
        இங்கிதனால் யானும் இடர்மிகுத்து வாடுகையில்”

                பாரதியார், சேவகர்களால் படும் துன்பம் கொஞ்சமன்று எனினும் சேவகர் இல்லாவிடிலோ எச்செயலையும் செய்ய முடியாது என்று சேவகரால் தான் பட்ட துன்பத்தை நயம்பட கூறுகின்றார்.
கண்ணன் சேவகனாக பாரதியாரை அடைதல்:
        சேவகரால் பல துன்பங்களுக்கு ஆளான பாரதியார் வருத்தமுடன் இருக்கையில் எங்கிருந்தோ வந்த கண்ணன் பாரதியாரிடம் சேவகனாக சேர வந்து நின்றான்.தான் ஒரு இடைசாதி என்றும், மாடுகன்றுகளை மேய்த்தும், மக்களையும் காத்திடுவேன் என்றும் கூறினான். மேலும் வீட்டைத் தூய்மையாகப் பெருக்கித் துணிமணிகளைக் காப்பேன், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அழகிய பாடல்களைச் சொல்லித் தருவதோடு, அக்குழந்தைகள் அழாதபடி ஆட்டங்கள் காட்டி மகிழ்விப்பேன். இவை மட்டுமல்லாமல்
        “காட்டுவழி ஆனாலும் கள்ளர் பயம் ஆனாலும்
        இரவில் பகலிலே எந்நேர மானாலும்
        சிரமத்தை பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
        சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பம் உறாமல் காப்பேன்”

காட்டுப் பாதையானாலும், கள்வர் பயமென்றாலும், இரவு பகல் எந்நேரமானாலும் சிரமம் பார்க்காமல் பணிபுரிவேன். நான் கற்றுக்கொண்ட வித்தைகள்ஏதுமில்லை. இருப்பினும்,
        “. . . . . கோலடி, குத்துப்போர், மற்போர்
        . . . . . . அறிவேன்; சற்றும் நயவஞ்சனை புரியேன்”

குத்துப்போர், மற்போர் அறிவேன், நயவஞ்சனை செயேன் என்று தான் செய்யும் பணிகளையும் தனக்குத் தெரிந்த கலைகளையும் கூறியதாகப் புலப்படுத்துகின்றார்.
கண்ணனின் தோற்றம்:
        தன்னிடம் உள்ள ஆற்றல்களை எல்லாம் சேவகன் கூற, அதைக் கேட்ட நிலையில் பெயர் என்ன? என்று வினவிடக் கண்ணன் என்பார் ஊரினர் என்றன்.
        உடலை வருத்தி வேலை செய்வதால் திடமான உறுதி வாய்ந்த உடலையும் உள்ளத்தில் கள்ளம் கபடம் ஏதுமில்லை என்பதை உணர்த்தும் தெளிவான பார்வையைக் கொண்டவனாகவும், தேவையை உணர்ந்து அனைத்தையும் செய்வதாகப் பேசி நின்றான், ஆகவே தன்னுடையப் பண்களைச் செய்வதற்கு சிறந்த சேவகன் இவன் என்று எண்ணிய பாரதியார்,
        “மிக்கவுரை பலசொல்லி விருது பல சாற்றுகிறய்
        கூலி என்ன கேட்கின்றாய்? கூறு? “

என கேட்டார். அதற்கு பதிலளித்த கண்ணன் எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டி மற்றும் பிள்ளைகள் யாருமில்லை, நான் ஒரு தனி ஆள், எனக்கு நரை முடி எதுவும் தோன்றவில்லையே தவிர வயதளவில் முதியவன், என்னை தாங்கள் ஆதரிக்க வேண்டும், உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே எனக்குப் பெரிது. நீங்கள் கணக்கிட்டு அளிக்கும் காசு பெரியதாக தெரியவில்லை என்றான்.
        கூலி கேட்காமல் இருக்கும் சேவகனை,
        “பண்டைக் காலத்துப் பயிதியத்தில் ஒன்று”
எனக் கூறுகிறர். கண்ணனைச் சிறந்த சேவகன் என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டார்.

கண்ணனால் பாரதியார் அடைந்த நன்மைகள்:
        கண்ணன் சேவகனாக சேர்ந்த நாள் முதல்கொண்டு நாட்கள் செல்ல செல்ல ‘கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல்’ பாரதியாரின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் கண்ணனின் பற்று அதிகரித்துக் கொண்டே சென்றது. எவ்வாளவு வேலை இருந்தாலும் வாய் முணுத்து சிறிதும் சலிப்பை வெளிப்படுத்தாமல் அனைத்து வேலைகளையும் சரிவரச் செய்கின்றான்
        வீட்டைச் சுத்தமாக்குவதோடு, வீதியையும் சுத்தம் செய்கிறான். வேலைக்காரிகள் தவறு செய்யும்பொழுது அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி சரிவர செய்ய வைப்பான், குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும், வளர்ப்புத் தாயாகவும், குழந்தைகளை காக்கும் வைத்தியனாகவும், வீட்டைக் காத்துப் பண்டங்களை ஒழுங்கு படுத்தி பால், மோர் வாங்கி வைத்து`பெண்களையும் குழந்தைகளையும் பிரியமுடன் ஆதரித்து,
        “நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
        பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”

இருந்து பாரதியாரின் வண்ணமுறக் காக்கின்றான்.
        “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்
        இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்”

என்று புகழ்ந்துரைக்கிறார்.
கண்ணனிடம் இருந்து நன்மைகள் கிடைக்கக் காரணம்:
        கண்ணன் என் உள்ளத்தில் தோன்றிய நாள் முதல், என்னுடைய எண்ணம், செயல் அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டுவிட்டேன். அதனால் எனக்கு
        “செல்வம் இளமாண்புசீர், சிறப்பு நற்கீர்த்தி
        கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,
        தெளிவே வடிவம், சிவஞானம், என்றும்          
        ஒளிசேர் நலம் அனைத்தும் ஓங்கிவருகின்றன”

செல்வம், இளமை, சீர்சிறப்பு, நட்புகள், கல்வி, அறிவு, கவிதை, எழுதும் ஆற்றல், சிறந்த பக்தி, சிவஞானம், போன்ற நலன்கள் அனைத்தும் பெருகி வருகின்றன.


        இவ்வாறு பாரதியார், உள்ளம் முழுவதும் நிறைந்துள்ள கண்ணன் தன் வீட்டில் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து சிறந்த சேவகனாக செயல்படுவதாக கற்பனை செய்து இக்கவிதையைப் படைத்துள்ளார். இதனால் அவருக்கு கண்ணன் மீதுள்ள பற்றுள்ளம் புலப்படுகிறது.

No comments:

Post a Comment

Translate