Search This Blog

Wednesday, December 8, 2010

பாஞ்சாலி சபதம்-2

மன்னன் திருதராட்டிரனின் அழைப்பை, விதுரன் வந்து சொல்ல, அதன்படி இந்திரப் பிரஸ்தத்திலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் அத்தினாபுரம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் செய்தியறிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அந்த நகரத்தின் சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் எந்த திசை நோக்கினாலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு மக்கட்கூட்டமும் இதுநாள் வரை எங்கே இருந்தது என்று வியக்கும் வண்ணம் எள் விழவும் இடமின்றி நிரம்பியிருந்தனர்.

வேத விற்பன்னர்கள் வேதகோஷம் இசைத்தனர்; மன்னர்கள் தங்கள் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர்; யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிகள் தோறும் ஓசை எழுப்பிச் சென்றன. மங்கலம் பாடுவோர் இசைக்கும் ஒலியும், ஆடற்பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும், கோடி வகை வாத்தியங்களின் இன்னிசை முழக்கங்களும் அந்த நகர் முழுதும் நிறைந்திருந்தன.

யுதிஷ்டிரன் முதலாய பாண்டவர்கள் ஓர் தேரில் ஏறி அம்மாண் நகர் வீதிகளில் வந்தபோது, பெண்கள் பொன் விளக்கேந்தி வர, பார்ப்பனர் பூர்ணகும்பங்கள் வழங்க, மக்கள் மலர் மழை பெய்திட, காற்றில் தோரணங்கள் ஆடிட அந்த நகரத்தின் எழில் கூடி விளங்கியது. இப்படி ஊர்வலமாக வந்த பாண்டவர் மன்னவன் அரண்மனை வந்தடைந்தனர். அரசவையிலிருந்த மன்னன் திருதராட்டிரனை வணங்கி ஆசி பெற்ற பின், பீஷ்ம பிதாமகரின் காலடிகளை வணங்கி, கிருபாச்சாரியார், துரோணர், அவரது புதல்வன் அசுவத்தாமன் மற்றுமுள்ள பெரியோர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்றனர். பிரிந்திருந்தவர் கூடி அவரவர் குசலம் விசாரித்த பின் அந்தி வேளை வந்தது, சந்தி ஜபம் செய்ய அனைவரும் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர்.

பாஞ்சாலி சபதம்-1

இந்த பாரத புண்ணிய பூமியில் இராமாயணமும், மகாபாரதமும் காலங்காலமாக மக்கள் போற்றிப் புகழ்ந்து, கற்று வரும் அறநூலாகும். இவ்வரலாற்றினை பல காலங்களிலும் பல்வேறு புலவர்களும் பாடிவைத்திருந்தாலும், அவை அத்தனையும் தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கம்பனின் 'இராம காதையும்', வில்லிபுத்தூராரின் 'வில்லி பாரதமும்' தமிழ் மக்களுக்குப் புதியதல்ல. வியாச பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள இந்த 'பாஞ்சாலி சபதம்' பற்றி மகாகவி கூறும்போது, "இந்நூல் வியாச பாரதத்தைப் பெரும்பாலும் தழுவி வரையப்பட்டது என்றாலும் பல அற்புத மாற்றங்களையும் இதில் காணலாம்" என்கிறார். மகாகவியின் கூற்றுப்படியே, இதில் எளிய நடை, எளிய பதங்கள், இனிய சந்தங்கள் அடங்கியவையாகக் காணப்படுகிறது. சொல்வழக்கு எளிமையென்றாலும் கூட, அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் கனமானவை.

மகாகவி இயற்றியுள்ள "பாஞ்சாலி சபதத்தை" இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினை கவிதை வடிவிலிருந்து உரைநடையாக இந்த பாடத்தில் கொடுத்திருக்கிறோம். இதன் இரண்டாவது பகுதி 'சூதாட்டச் சருக்க'மாக அடுத்த பாடத்தில் வெளிவரும். புதிதாகப் படிப்பவர்க்கு எளிதில் விளங்க வேண்டுமென்பதற்காகப் 'பாஞ்சாலி சபதம்' உரைநடை வடிவில் கொடுக்கப்படுகிறது. எனினும் பாடத்தைப் படிக்கும்போது கவிதைப் பகுதியையும் உடன் வைத்துக் கொண்டு படித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை கவிதை, உரைநடை இரண்டையும் படித்தபின் மகாகவியின் எழுத்துக்களைத் தொடர்ந்து கவிதை வடிவிலேயே படியுங்கள். புதிய எண்ணங்கள், சிந்தனைகள் ஒவ்வொரு முறையும் தோன்றக்கூடும். இனி படியுங்கள், இப்பாடத்தின் இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகளை விரைவில் எழுதி அனுப்புங்கள்.

இக்காப்பியத்தின் தொடக்கத்தில் மகாகவி பிரம்மத்தை வணங்கித் தொடங்குகிறார்.

பாஞ்சாலி சபதம்

   

1. பிரம துதி

நொண்டிச் சிந்து

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
    ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
    தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
    தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
    நாமமும் உருவும் அற்றே-மனம்
    நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
    ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
    அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;     1

பழமொழி

பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி, பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததை அனுபவித்தவர் கூறினர்.

பழமொழிப் பட்டியல்
(1) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
(2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
(4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
(5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
(6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
(7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

Sunday, December 5, 2010

வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்


         தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.



         தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.

          பொருளடக்கம்

              1 வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்

                 a)அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்

                 b) எ என்னும் வினா எழுத்தின் பின்

                 c) அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்

                 d) அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்

                 e)அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்

              2 வல்லெழுத்து மிகா இடங்கள்

                 a) அது, இது, எது என்னும் சொற்களின் பின்

                 b) ஏது, யாது என்னும் சொற்களின் பின்

                 c) அவை, எவை, இவை, யாவை

                 d) அத்தனை, எத்தனை, இத்தனை

                 e) அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு

                 f) அன்று, என்று, இன்று


Translate