Search This Blog
Sunday, December 5, 2010
வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.
பொருளடக்கம்
1 வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
a)அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
b) எ என்னும் வினா எழுத்தின் பின்
c) அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
d) அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
e)அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
2 வல்லெழுத்து மிகா இடங்கள்
a) அது, இது, எது என்னும் சொற்களின் பின்
b) ஏது, யாது என்னும் சொற்களின் பின்
c) அவை, எவை, இவை, யாவை
d) அத்தனை, எத்தனை, இத்தனை
e) அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
f) அன்று, என்று, இன்று
வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
அ + காலம் = அக்காலம்
இ + சமயம் = இச்சமயம்
உ + பக்கம் = உப்பக்கம்
எ என்னும் வினா எழுத்தின் பின்
எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
அந்த + காலம் = அந்தக் காலம்
இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்
எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
அங்கு + செல் = அங்குச் செல்
எங்கு + கற்றாய் = எங்குக் கற்றாய்
இங்கு + பார் = இங்குப் பார்
வல்லெழுத்து மிகா இடங்கள்
அது, இது, எது என்னும் சொற்களின் பின்
அது காண்
எது செய்தாய்
இது பார்
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
ஏது கண்டாய்
யாது பொருள்
அவை, எவை, இவை, யாவை
அவை பெரியன
யாவை போயின
அத்தனை, எத்தனை, இத்தனை
அத்தனை செடி
எத்தனை பசு
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு
அன்று, என்று, இன்று
அன்று சொன்னான்
என்று தந்தான்
இன்று கண்டான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment