மன்னன் திருதராட்டிரனின் அழைப்பை, விதுரன் வந்து சொல்ல, அதன்படி இந்திரப் பிரஸ்தத்திலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் அத்தினாபுரம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் செய்தியறிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அந்த நகரத்தின் சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் எந்த திசை நோக்கினாலும் மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு மக்கட்கூட்டமும் இதுநாள் வரை எங்கே இருந்தது என்று வியக்கும் வண்ணம் எள் விழவும் இடமின்றி நிரம்பியிருந்தனர்.
வேத விற்பன்னர்கள் வேதகோஷம் இசைத்தனர்; மன்னர்கள் தங்கள் தோள்தட்டி ஆர்ப்பரித்தனர்; யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிகள் தோறும் ஓசை எழுப்பிச் சென்றன. மங்கலம் பாடுவோர் இசைக்கும் ஒலியும், ஆடற்பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும், கோடி வகை வாத்தியங்களின் இன்னிசை முழக்கங்களும் அந்த நகர் முழுதும் நிறைந்திருந்தன.
யுதிஷ்டிரன் முதலாய பாண்டவர்கள் ஓர் தேரில் ஏறி அம்மாண் நகர் வீதிகளில் வந்தபோது, பெண்கள் பொன் விளக்கேந்தி வர, பார்ப்பனர் பூர்ணகும்பங்கள் வழங்க, மக்கள் மலர் மழை பெய்திட, காற்றில் தோரணங்கள் ஆடிட அந்த நகரத்தின் எழில் கூடி விளங்கியது. இப்படி ஊர்வலமாக வந்த பாண்டவர் மன்னவன் அரண்மனை வந்தடைந்தனர். அரசவையிலிருந்த மன்னன் திருதராட்டிரனை வணங்கி ஆசி பெற்ற பின், பீஷ்ம பிதாமகரின் காலடிகளை வணங்கி, கிருபாச்சாரியார், துரோணர், அவரது புதல்வன் அசுவத்தாமன் மற்றுமுள்ள பெரியோர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துப் பெற்றனர். பிரிந்திருந்தவர் கூடி அவரவர் குசலம் விசாரித்த பின் அந்தி வேளை வந்தது, சந்தி ஜபம் செய்ய அனைவரும் தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர்.
இரவுப் பொழுதை இனிதே கழித்தபின் மறுநாள் துயிலெழுந்து, தெய்வங்களைத் துதித்து, தூய பட்டாடைகளை அணிந்து, ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தரித்து மன்னனின் பொற்சபையினை அடைந்தனர். சபையில் கவுரவரும் கூட்டமாய் அமர்ந்திருந்தனர். பீஷ்மர் அமர்ந்திருந்தார், தர்ம நெறி தவறாத விதுரனும், பார்ப்பனக் குரவர்களும், நாட்டு மந்திரிமாரும் பிற நாட்டினர் பலப்பல மன்னர்களும், கெட்ட மதி படைத்த துரியோதனன் உறவினரும் நண்பர்களும் அந்த வான் பெரும் சபையிலே நிறைந்திருந்தார்.
புன் தொழில் சூதாட்டத்தில் இந்தப் புவியிலே யாரும் இணையில்லை என்று விளங்கிய சகுனி சபை நடுவினில் குதூகலத்துடன் வீற்றிருந்தான். சபையில் பெரிய பெரிய சூதர்கள் கூடியிருந்தனர். மாயம் வல்ல அவர்கள் கொக்கரித்து ஆர்ப்பரித்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் அவைக்கு வந்த பாண்டவர்கள் பெரியோர்களை வணங்கித் தங்கத்தாலான ஆசனத்தில் அமர்ந்த போது சூதில் வல்ல சகுனி சொல்கிறான். "தர்மத்தின் தோன்றலான உன் வரவினை எதிர்நோக்கி இவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள். போரில் வென்று பல வெற்றிகளைப் பெற்றிருப்பீர்கள், இப்போது வல்லுறு சூதெனும் போர்தனில் உனது வலிமையைப் பார்ப்போம் வா!" என்றான்.
சகுனியின் வார்த்தையினைக் கேட்ட தருமன் சொல்லுவான், "ஐய! சூது எனும் இந்தச் சதிச்செயலுக்கு என்னை அழைக்கிறாய். இதில் என்ன பெருமை இருக்கிறது. அறப் பெற்றிதான் இதற்குண்டோ? வீரத்தின் பெருமை உளதோ? உன் மனத்தில் வஞ்சனை கொண்டு, எங்கள் வாழ்வினை நீ விரும்பவில்லை என்பதனை அறிவோம். இம்மை மறுமை என இருமையுங் கெடுப்பது இந்தச் சூது. இதற்கு எம்மை அழைக்கிறாய்."
பாபத்தை ஓர் சாத்திரமாகப் பயின்ற சகுனி கல கலவெனச் சிரிக்கிறான். "எதற்கு என்னென்னவோ பேசுகிறாய். உன்னை நாடாளும் மாமன்னன் என்று எண்ணி அழைத்து விட்டேன்; உன்னை மன்னரிலே தலை சிறந்தவன் என்று பலர் சொல்லக் கேட்டதனால், சில பொருள் விளையாட்டில் செலுஞ் செலவினுக்கு அஞ்சமாட்டாய் என்று நினைத்தேன். பாரத நாட்டின் அரசன் ஒரு உலோபி என்று எனக்குத் தெரியுமா? இதில் என்ன வஞ்சனை இருக்கிறது? மன்னர்கள் சூதாடுவது வழக்கம்தானே! இத்தனை பேர் மத்தியில் நட்டநடு மண்டபத்தில், அட சூரசிகாமணியே! உன்றன் சொத்தினை நான் திருடிக்கொள்வேன் என நினைக்கிறாயா? இதில் பயப்பட ஒன்றுமில்லை. விரைந்து ஆட வா! சூதாட அனைத்தும் இங்கு தயாராக உள்ளன. நிச்சயம் நீ வெல்வாய், வெற்றி உனக்கு எப்போதும் இயல்பானது தானே, நிச்சயம் நீ வெல்வாய், ஏன் பலவற்றை நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்கிறாய். களியாட்டம் தொடங்கு" என்றான்.
தோலுக்காகப் பசுவைக் கொல்லும் துஷ்டன் இந்த மகாபாவி இப்படிக் கூறலும், அறநூல்கள் தீது என்று விலக்கிய அனைத்துக்கும் அஞ்சுகின்ற தருமன் மனம் நொந்து சொல்லுகிறான்:- "அரசர்களுக்கு விதித்த நூல்களில் சூதாடுதல் விஷம் போன்றது என்று கூறியிருக்கிறார்கள், ஆதலால் நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. செல்வத்தின் மீதுள்ள பற்றினால் நான் இதனைக் கூறவில்லை. மேலோர் சொன்ன தர்மத்தை நிலைநிறுத்தவே இப்படிக் கூறுகிறேன். என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கவருவோர் எனக்கு இடையூறு செய்யவில்லை. பழமையான வேதங்களைக் கொல்வதாக நினைக்கிறேன். என் உயிர்க்கிணையான பாரத நாட்டுக்குக் கேடு தரும் கலியை அழைப்பதாக நினைக்கிறேன். உன்னைப் பணிவோடு வேண்டுகிறேன், உன் நெஞ்சிற் கொண்ட தீய எண்ணத்தை விட்டுவிடு" என்றான்.
தீ கக்கும் விழிகளோடு சகுனி, "என்னப்பா சாத்திரம் பேசுகிறாய்" என்று கேட்டான். நற்குலத்தில் பிறந்த மன்னர்கள், பிறரைத் தாழ்த்தித் தன் சுயபெருமை பேசுவரோ? பேசத்தெரிந்தவன் என்பதற்காக நம்மவர் காத்துவரும் பழைய வழக்கத்தை மறந்தனையோ? மன்னர்களைப் போட்டிக்கு அழைத்தால் மறுப்பது உண்டோ? நன்கு தேர்ந்தவன் வெற்றி பெறுவான். இளைத்தவன் தோற்றிடுவான். இதில் ஏதும் சூது என்று இகழ்ந்திடுவாரோ? இப்படி வெட்கமில்லாமல் சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். இவ்வளவு மன்னர்கள் உள்ள சபையில் உன்னைச் சூதாட அழைத்து விட்டேன். வந்து ஆட சம்மதம் என்றால் சொல், மனத்தில் துணிவு இல்லை என்றால் அதனையும் சொல்லிவிடு" என்றான்.
வலிமையான விதியை எண்ணினான் தருமன். இந்தக் கேட்டைத் தவிர்க்க முடியாதோ? கேடுகெட்ட சகுனி சொன்னவை தருமன் நெஞ்சை வேதனைப் படுத்தியது. அந்த நாள் முதலாக இந்தச் சூதின் காரணமாக மக்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர். எப்போதோ நடந்தது என்பதற்காக மூடர்களே! பொய்யை மெய் எனச் சாதிக்கலாமா? முன்பு என்று சொல்லும்போது அதற்கு ஏதேனும் கால வரையறை உண்டா? முன்னர் வாழ்ந்தவர்களெல்லாம் முனிவர்களா? நீங்கள் பிறக்கும் முன்பாக பாரில் மூடர்களே வாழ்ந்ததில்லையா? இந்த பூமி தோன்றிய காலந்தொட்டு இன்று வரையிலும் பற்பல கோடி மழைத்துளிகள் போல வாழ்ந்த மக்களுக்குள்ளேயும் நீங்கள் பிறப்பதற்கு முன்பும் மடமையும், நீசத்தன்மையும் இருக்கத்தானே செய்தன?
பொய் ஒழுக்கத்தை அறம் என்று ஏற்றுக் கொண்டும், பொய்மையைச் சாத்திர மென்று ஏற்றுக் கொண்டும் ஐயகோ! இந்த பாரத நாட்டில் அறிவில்லாதவர்களால், வருத்தமுற்று அழிந்து போன அறிவுடை யோர் பல கோடி. பற்பல அறநூல்களைப் பயின்றவன் என்றபோதும், உண்மை உணர்ந்தவர்களில் உயர்ந்தவன் என்றபோதும், விதியின் வசத்தால் தருமனும் சகுனியின் சூழ்ச்சிக்குப் பலியானான்.
புத்தியைக் காட்டிலும் விதி வலியதன்றோ? இந்த வையத்தில் விதியைக் காட்டிலும் வலிமை பொருந்தியது ஏதேனும் உண்டோ? நதியிலுள்ள ஓர் பள்ளத்தில் நாலாபக்கத்திலிருந்தும் அழுக்குப் படிவது போல செய்யும் கர்மப் பயன் நம்மைச் சேர்வதும் உண்டல்லவா?
பொய்மைச் சூதிற்கு தருமன் மனம் இணங்கி விட்டான். அங்கு தாயம் உருட்டலானார்கள். சகுனி ஆர்ப்பரித்துச் சிரித்தான். நல்ல பண்புகளுள்ள விதுரனைப் போன்ற சான்றோர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டனர். நடக்கும் சதியைக் கண்டு மதிமயங்கிப் போயினர். அந்த வேளையில் ஐவருக்கு அதிபன் தருமன் சொல்லுகின்றான்:- "சகுனி! பந்தயங்கள் சொல். பரபரக்காதே; அளவற்ற பல செல்வங்களுக்கு உரிமைபடைத்த அரசனாகிய என்னோடு சூதாடுவதற்கு நீ வந்துவிட்டாய். இங்கு பந்தயம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது" என்றான்.
இந்த வார்த்தையைக் கேட்ட துரியோதனன் எழுந்து சொல்கிறான்:- "அருமையான செல்வம் என்னிடம் அளவில்லாமல் இருக்கிறது. சூதில் நீ ஒரு மடங்கு வைத்தால் எதிரே நான் ஒன்பது மடங்காக வைப்பேன். வீண் பெருமை பேசாதே! மேலே நடக்கட்டும்" என்றான்.
"சூதில் ஒருவன் ஆட, வேறொருவன் பணயம் வைப்பதோ? இது என்ன தருமம், உன் பேச்சு அதர்மம் இல்லையா?"
"மாமன் சூதாடுவதற்கு மருமகன் பணயம் வைக்கக்கூடாதோ? இதிலே என்ன குற்றம் இருக்கிறது. பொழுது போவதற்காக இந்தச் சூதாட்டத்தை நடத்துகின்றோம். இதற்கு ஏன் இப்படி மூக்காலழுகின்றாய்?" என்று அங்க தேசத்தரசன் சொன்னான்.
சூதாட்டம் தொடங்கியது. தருமன் ஒரு மணிமாலையைப் பணயமாக வைத்தான், மகிழ்ச்சி யடைந்த பகைவன் கன தனங்களை வைத்தான், கண் இமைக்கும் நேரத்திற்குள் அதனை மாமன் வென்று தீர்த்து விட்டான். பழியில்லாத தருமன் பின்னர் ஆயிரம் குடம் பொன்னை வைத்தான், அதனையும் சகுனி வென்றான். பொன்னாலான தேர் ஒன்றை வைத்தான் தருமன், அங்கே தாயமுருட்டி சகுனி அதனை வென்றுவிட்டான். பாண்டவர்களிடம் சேவகம் செய்யும் ஆயிரக்கணக்கான அழகிய பெண்டிர், அவர்களைச் சூதில் வைத்திழந்தான் தருமன். வரிசையாக ஒவ்வொன்றாக இழந்து கொண்டே வந்தான் தருமன். நீருண்ட மேகம் போல ஆயிரக்கணக்கான கருத்த வாரணங்கள், அவை அனைத்தையும் இழந்தான். வெற்றிகளைக் குவித்து பெருமை சேர்த்த படைகளை வைத்து இழந்தான். தேர்களை வைத்தான், தேர்ப்பாகர்களை வைத்தான், எண்ணற்ற குதிரைகள் இவைகளையெல்லாம் வைத்து இழந்து விட்டான். பொற்கட்டிகள் நான்கு கோடி வைத்தான், கண் இழப்பவன் போல அவை அத்தனையும் இழந்தான். மாடுகளை மந்தை மந்தையாக வைத்து இழந்தான், ஆடுகளை இழந்தான், ஆட்களை வைத்து இழந்தான், இவற்றையெல்லாம் கண்டு பூரித்துப் போன சகுனி சொல்வான், "தருமா இவையெல்லாம் இழந்தமைக்காக வருந்தாதே, இன்னும் உன்னுடைய நாடு இருக்கிறது. அதை இழக்க வில்லையே. வைத்து ஆடு. நம்பிக்கைத் தளராதே" என்றான்.
ஐயகோ! இதை என்னவென்று சொல்லுவது! ஒரு அரசன் செய்யக்கூடிய காரியமா இது? சூதாட்டத்தில் ஒரு நாட்டை வென்று அரசு புரிவதோ? இதென்ன கொடுமை! உலகம் இதனைத் தாங்குமா? வானம்தான் பொறுத்துக் கொள்ளூமா? புத்தியுள்ள மக்களா நாம்? தூ! என்று எள்ளி விதுரன் பேசுகிறான். "பாண்டவர்கள் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொண்டாலும், துளசிமாலையணிந்த அந்தக் கண்ணனும் பாஞ்சாலத்து அரசன் துருபதனும் கடுங்கோபம் கொண்டு நம்முடைய வம்சத்தையே பூண்டோடு அழித்துவிடமாட்டார்களா? இங்கே அமர்ந்திருக்கக்கூடிய குரு குலத்து மன்னர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். மனதில் குறித்துக் கொள்ளுங்கள். இதனால் விளையப்போகும் போரில் மடிந்து போய் நரகத்தில் கிடந்து வருந்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குருகுலம் முழுவதும் அழித்திடவன்றோ வஞ்சகன் துரியோதனனை கெட்ட விதி நம்மிடையே வைத்திருக்கிறான். இந்த பூமியில் அவன் பிறந்தவுடனே கிழநரி போலவல்லவா அலறி ஊளையிட்டான். அதனைக் கேட்ட நிமித்திகர்கள் இந்தக் குழந்தை பிறந்ததனால் குலத்தில் பெரும் கலகமொன்று ஏற்படப்போகிறது பாருங்கள் என்று சொன்னதைக் கேட்டோமல்லவா?
விதுரன் திருதராஷ்டிரனை நோக்கி, "சூதாட்டத்தில் உன் மகன் வெற்றி பெறுவதை சொர்க்க போகத்தையே பெற்றவன் போல, பேதையாகிய நீ முகம் மலர்ந்து ஆசை மிகுதியோடு உட்கார்ந்திருக்கிறாய். மேலே சென்று மலையுச்சியில் இருக்கும் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டு வேடனொருவன் கால் நழுவிக் கீழே விழுந்து மாண்டுபோகக்கூடிய பெரிய சரிவு அங்கேயிருப்பதைக் கவனிக்காமலிருப்பதைப் போல உனக்கு ஏற்படப்போகும் அபாயத்தை எண்ணாமலிருக்கிறாய். இங்கு நடைபெறும் சூதில் உன் புத்தியும் கள்ளால் மயங்குவது போல மயக்கமடைந்து வருவதைப் பார். குலம் முழுதும் துரியோதனனுக்காக அழிந்து போகலாமா? அன்புகொண்ட இந்த பாண்டவர்களைப் பாதகச் செயலால் அழிக்க முற்பட்டிருக்கிறாய். நீ கற்ற கல்வியும் கேள்வியும் மண்ணாகிவிட்டது; அத்தனையும் கடலில் கரைத்தப் பெருங்காயம் போல ஆயிற்று. வீட்டிற்குள் நரியை, விஷப்பாம்பை பிள்ளையாக வளர்த்து விட்டோம். நாட்டில் உன் புகழ் ஓங்கிடுமாறு இந்த நரியை விரட்டிவிட்டுப் புலிகளைக் கொள்வாய். மோட்டுக் கோட்டானை, காக்கையை விரட்டிவிட்டு பலம்வாய்ந்த மயில்களைக் கொள்வாய். விளையப்போகும் கேட்டினைக் கண்டு மகிழ்ந்து போவாயோ? உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்துவிட்டனவோ?"
"சாகப்போகிற வயதில் ஏன் அண்ணே உன் தம்பியின் மக்களுக்குரித்தான சொத்துக்களுக்கு ஆசைப்படுகிறாய்? அவர்கள் உன்னை நம்பித்தானே வந்திருக்கிறார்கள். உன்னைத்தானே தலைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீ விரும்பினால் அத்தனைச் சொத்துக்களையும் அவர்கள் உனக்குத் தானமாகத் தந்திடுவார்களே. தீயினையொத்த நரகத்தில் ஆழ்த்தக்கூடிய கொடிய செய்கையை ஏன் தொடர்ந்து நடத்த அனுமதித்திருக்கிறாய்?"
"குருகுலத்து அரசன் சபையில் ஆற்றல்மிக்க துரோணர், கிருபர், பெரும்புகழ் வாய்ந்த அந்த கங்கையின் மைந்தன் பீஷ்மர், பேதை நானும் மதிப்பிழந்து போக, கோணல் புத்தி சகுனி மட்டும் சொல்லும் மந்திரம் செல்லுபடியாகிறதே. அருகில் வைத்துக்கொள்ள தகுதியுள்ளவனா அவன்? அவனை வெளியேற்று அண்ணே! தர்ம நெறி தவறியபின் வாழ்வது இன்பம் என்று மட்டும் நினையாதே. புத்தி இழந்த சகுனியின் சூதால் புண்ணியர்களான பாண்டவர்களை எதிரிகளாக்கி, நீ ஒரு கீழ்மையானவன், பாதகன் என்று உலகத்தார் ஏசுவதைக் கேட்டுக்கொண்டு அரசாளக்கூடிய வாழ்வை விரும்பிடலாமோ? சூதாட்டத்தை நிறுத்து; நீ வாழ்க!" என்றான் விதுரன்.
அறிவு சான்ற விதுரன் பேசியதை அரவக்கொடியுடைய துரியோதனன் எரியும் நெஞ்சுடன். கேட்டான். மேலோர் சொல்லும் அறவுரைகளெல்லாம் நீசர்கள் ஏற்றுக்கொள்வதுண்டோ? கண்கள் இரண்டிலும் தீப்பொரி பறக்க புருவங்கள் துடிக்க கோபம் தலைக்கேற, மதி மழுங்கிப் போய் அவன் சொல்லுகிறான், "நன்றி கெட்ட விதுரா! சிறிதும் நாணமற்ற விதுரா! தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா! அன்று தொடங்கி நீ எங்கள் அழிவையே நாடுகின்றாய். இந்த அரசவையில் உன்னை உட்காரவைத்த என் தந்தையின் மதியை என்னவென்று சொல்வேன்?"
"அந்தப் பாண்டவர்பால் நெஞ்சையும், எங்கள் அரண்மனைக்கு வயிற்றையும் வைத்துக் கொள்ளும்படி அன்றே தெய்வம் உனக்கு வகுத்துவிட்டது போலும்? உண்மையைச் சொல்லுபவன் போலும், பொதுவான விதிகளை உணர்ந்தவன் போலும் அந்தப் பாண்டவர் பக்கம் நின்றுகொண்டு எங்கள் அழிவுக்கு வழிவகுக்கிறாய். மன்னர்கள் சூழ்ந்த இந்த சபையில் எங்களுடைய எதிரிகளோடு சூதாட்டத்தில் முறையாகப் பணயம் வைத்து வெல்லுகின்றோம். இதில் என்ன குற்றத்தைக் கண்டாய்? யாரிடம் வந்து தர்மத்தைப் பற்றிப் பேசுகிறாய்? யார் வீட்டிலாவது கன்னம் வைத்துத் திருடுகிறோமா? அல்லது பற்களைக் காட்டி கெஞ்சி ஏய்க்கிறோமா? பொய்களைப் பேசியே வாழ்பவர்களும், உதட்டாற் புகழுரைகளைப் பேசி வாழ்பவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள். அவர் தம் வழியில் வந்ததுண்டோ? செய்யக்கூடாதவற்றைச் செய்பவர்களை நல்வழிப்படுத்த நீ முயன்றால், அறிஞர்களுக்கு அது இழுக்கு அல்லவா?
உண்மையான அன்பு இல்லாத பெண்ணொருவளுக்கு ஒருவன் ஆயிரம் நன்மைகள் செய்தாலும், அவள் தருணம் கிட்டியபோது முன்பின் எண்ணாமல் அவனை விட்டு விலகிவிடுவாள். வீணான உபதேசம் தேவையில்லை; எங்கள் பொறுமையைச் சோதிக்காதே. உனக்கு எங்கே விருப்பமோ அங்கேயே போய்விடு" என்றான் துரியோதனன்.
நாலாபுறத்திலுமிருந்தும் வந்துள்ள மன்னர்கள் நிறைந்த சபையில் தன்னைக் கொல்வதைப் போன்ற சுடுசொற்களால் சாடுவதை அணுவளவும் பொருட்படுத்தாமல் விதுரன் சொல்லுகின்றான், "சென்றாலும், இருந்தாலும் இனி என்னடா? செய்யும் காரியத்தின் நெறியறியாத சிறியன் நீ! உன்னை அழிந்துபோகாதபடி காக்க முயன்று பார்த்தேன். பொல்லாத விதியிடம் நான் தோற்றுவிட்டேன். விஷம் தோய்ந்த மனத்தை உடையவர்கள் உனக்கு நன்மை செய்ய மாட்டார்கள் என்று கருதியே நானும் உனக்கு நல்வழி காட்ட முயன்றேன். நெடுமரம் போல் வளர்ந்து விட்ட உனக்கு யாரும் நல்லவைகளைக் கூறியதில்லை போலும்."
"தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழி காட்டுவோர் மொழிகளைக் கேட்காத நரபதியே! உன் அரசவையில் கூடியிருக்கிற மன்னர்களும், அமைச்சர்களும், நெறிமுறை காட்டிடும் பார்ப்பார் இவர்கள் உன் அவையில் இருப்பது சிறிதும் தகாது கண்டாய். பொற்கச்சணிந்த வேசைகளும், கேடுகெட்ட வேலைகளைச் செய்யும் அடிமைகளும் மற்றும் குலம்கெட்ட நீசர்கள், பைத்தியக்காரர்கள், இவர்களே உனக்குரிய அமைச்சர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்கள். போனாலும், இருந்தாலும் இனி என்னடா? உனக்காகவா நான் இவ்வளவையும் இங்கு சொன்னேன்? இந்த மன்றத்தில் நிறைந்திருக்கும் மன்னர்கள், பார்ப்பார், மதியில்லாத மன்னனும் தெரிந்து கொள்வதற்காகச் சொன்னேன். இதெல்லாம் இன்றோடு முடியக்கூடியதா? இனி நடக்கப் போவதை நானும் அறிவேன். பீஷ்மாச்சாரியாரும் அறிவார் தெரிந்துகொள்! புலன்களை அடக்கி, ஆசைகளையெல்லாம் பொசுக்கி விட்ட யோகியான பீஷ்மரும் ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே! இதெல்லாம் விதியின் வழியில் நடைபெறுகிறது என்பதை நான் உணர்ந்திருந்தாலும், பேதையாகிய நான் வெள்ளை மனம் படைத்தவனாதலால், மகனே! துரியோதனா! உன் சதி வழிகளைத் தடுத்திட இவ்வளவும் பேசினேன். சரி! சரி! இங்கே பேசுவதனால் எந்தப் பயனும் இல்லை. உன் மனம் போல செய்துகொள்" என்று விதுரன் சொல்லிவிட்டு வாய்மூடித் தலை குனிந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கலியும் கவலையில்லை இனி பூமியில் நமது ஆதிக்கம்தான் என மகிழ்ந்தான். பாரதப் போர் வரப்போகிறது என்று தேவர்களும் மகிழ்ந்தார்கள்.
மீண்டும் சூது தொடங்கியது. சூதாட்டக்காய் உருட்டப்பட்டது. மனவக்கிரம் கொண்ட சகுனி இப்போது பேசுகிறான். "தருமா! சூதில் நீ அழித்ததெல்லாம் மறுபடி உன்னிடமே வந்து சேரும். மனச் சோர்வடைந்திடாதே, ஊக்கத்தோடு விளையாடு" என்றான். கோயிலில் பூசனைகளைச் செய்ய வேண்டிய பூசாரி அங்குள்ள சிலைகளைக் கொண்டுபோய் விற்பது போலவும், வாயில் காப்போனாக இருக்கும் காவலாளி வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், ஆயிரக்கணக்கான நீதிகளை உணர்ந்த தருமன் நாட்டைச் சூதில் வைத்து இழந்தான், சிச்சீ! கீழோர் செய்யும் கேவலமான செய்கையைச் செய்து விட்டான்.
நாட்டில் வாழும் மக்கள் எல்லாம் தம்மைப் போல மனிதர்கள் என்று எண்ணவில்லை. ஆட்டுமந்தை யென்று இவ்வுலகை மன்னர் எண்ணி விட்டார். எத்தனையோ நீதி நூல்கள் அவற்றையெல்லாம் உணர்ந்தவர்கள்தான் என்றாலும் நாட்டை ஆளும் சட்டதிட்டங்களை மனிதர் நன்கு செய்யவில்லை. பாரபட்சம் இல்லாமல், தர்மத்துக்கெதிராகச் செயல்படாமல், வஞ்சனை இல்லாமல், பிறரைத் துயரில் வீழ்த்தாமல் ஊரை ஆளுகின்ற முறைமை உலகில் ஓர் புறத்திலும் இல்லை. ஊம்..... இவைகெளெல்லாம் சாரமற்ற வார்த்தைகள், இவற்றை இனிப் பேசி என்ன பயன்? கதையைத் தொடர்ந்து சொல்வோம்.
சகுனி சொல்கிறான், "தருமா! உன் செல்வம் முழுவதும் இழந்துவிட்டாய். தேசத்தையும், குடிமக்களையும் சூதாடி இழந்துவிட்டாய். பற்பல வளம் பொருந்திய இந்த பூமிக்கு தருமன் அதிபன் என்ற பெரும்புகழ் இனி பழைய கதையாகி விட்டது. இப்போது நான் சொல்வதை நீ கேள்! இன்னுமொரு பணயம் வைத்து நீ ஆடுவாயானால் வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி நீ பெறும் வெற்றியினால் இதுவரை நீ இழந்த பொருள் அனைத்தையும் மீட்டு விடலாம்."
"செல்வம் எல்லாவற்றையும் இழந்த பின்னர் நீயும் உன் தம்பிமார்களும் எப்படி வாழ்வீர்கள்? பொல்லாத இந்த சூதாட்டத்தினால் உன்னை பிச்சையெடுக்கும்படியாக விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. உனது தம்பிமார்கள் இருக்கிறார்களே, அவர்கள் சூரர்கள், வல்லவர்கள். நான் சொல்வதற்காக வருத்தப்படாதே; அவர்களைப் பணயமாக வைத்து ஆடி, இழந்ததை மீட்டுக் கொள்" என்றான் சகுனி. இதனைக் கேட்ட தேரோட்டி மகன் கர்ணன் சிரித்தான். சபையிலிருந்தோர் கண்ணீர் சிந்தினர். இருள் நிறைந்த மனத்தினன், களவை இன்பமாக நினைப்பவன், அரவக்கொடி கொண்ட வேந்தன் துரியோதனன் உவகைமிக்கோனாய்ச் சொல்லுகிறான், "தருமன் தம்பிமார்களை வைத்து ஆடினால், பரந்து விரிந்த எங்கள் நாட்டினைப் பணயமாக வைக்கிறோம். இதில் அவன் வென்று விட்டால் முன்பு இழந்த அனைத்தையும் அவனிடமே மீண்டும் அளித்து விடுகிறோம். நம்பிக்கையோடு விளையாடு தருமா! நாட்டை இழந்த பிறகு அம்புபோல விழிபடைத்தவள், உங்கள் ஐவருக்கும் உரியவள் உன்னை இகழமாட்டாளா? அந்த மாடுமேய்க்கும் கண்ணன் தான் பேசுவானோ? உன் கவலைகளைத் தீர்த்து வைக்கிறோம் சூதாட்டம் தொடரட்டும்" என்றான்.
இவ்வளவான பிறகும் தம்பிமார்கள் வாய் திறக்கவில்லை. நெஞ்சம் துவண்டுபோய் தலை குனிந்து உட்கார்ந்திருந்தனர். பொந்திலிருக்கும் நாகம் போல பீமன் மூச்சு விட்டான். காமன் போல் அழகுள்ள பார்த்தன் முகத்தில் களை இழந்து விட்டான். ஒழுக்கமிக்க நகுலன் ஐயோ! நினைவிழந்து விட்டான். முக்காலமும் உணர்ந்த சகாதேவன் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தான். கங்கை மைந்தன் பீஷ்மன் கனல்போல துடிக்கும் நெஞ்சத்தோடு இருந்தான். பொங்கி வரும் சினத்தீயால் கூடியிருந்த மன்னர்கள் வெப்ப மூச்சு விட்டார். அங்கங்கள் நொந்து விதுரன் சோர்ந்து போனான். சிங்கங்கள் ஐந்தை நாய்கள் சேர்ந்து கொல்லும் காட்சி கண்டு அனைவரும் இவ்வாறாயினர்.
எப்போதும் பிரமத்தில் சிந்தை செலுத்தி உலகம் ஓர் விளையாட்டு என்று எண்ணி வாழ்கின்ற ஞானி சகாதேவனை சூதில் பணயம் என்று வைத்தான் தருமன். பகடை உருட்டப்பட்டது; அங்கு சகுனி வெற்றி பெற்றான். நகுலனையும் சூதில் வைத்து இழந்தான் அப்போதுதான் தருமனுடைய புத்தியில் சிறுபொறி போன்றதொரு எண்ணம் தோன்றியது. என்ன கேவலமான செய்கை செய்து விட்டோம் என்று. அவ்வெண்ணம் தோன்றிய அடுத்த நொடி சகுனி சொல்கிறான், "ஐய! இவர்கள் இருவரும் வேறொரு தாயின் வயிற்றில் பிறந்தவர் என்றுதானே இவர்களைச் சூதில் பணயம் வைத்திழந்தாய்? பலம்கொண்ட பீமனும், பார்த்தனும் குந்தியின் வயிற்றில் பிறந்தவர் உன்னைவிட கண்ணியமிக்கவர் என்றுதானே இவர்களைப் பணயம் வைக்கவில்லை" என்று புண்ணியமிக்கத் தருமனை அந்தப் புல்லன் கேட்டான். தருமனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. அவன் சொல்லுகிறான், "அட! சூதில் அரசை இழந்துவிட்டாலும், எங்களில் ஒற்றுமை நீங்கிவிடவில்லை. உயிராலும், உள்ளத்தாலும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். இவர்களுக்குள் மித்திர பேதம் செய்து பிரித்துவிடலாம் என்று பாதக எண்ணம் கொண்டிருக்கிறாய்."
"இதோ! வில்வித்தையில் நிகரற்றவன், ஏழுலகங்களுக்கும் ஈடானவன், கண்ணனுக்கு ஆருயிர்த் தோழன், எங்கள் கண்களைப் போன்ற இனியவன், வண்ணமும், திண்மையும், சோதியும் பெற்று வானத்து அமரரைப் போன்றவன், எண்ணரும் நற்குணங்கள் சான்றவன், புகழ் ஏறும் விஜயனைப் பணயமாக வைக்கிறேன். உன் பொய்மைக் காயை உருட்டுவாய்!" என்று விம்மலோடு கூறினான் தருமன்.
மாயமே உருவான சகுனி மகிழ்ச்சியோடு கெட்ட பகடையை உருட்டினான், அவன் கூறியபடியே தாயம் விழுந்தது, சகுனியும் வென்றான். வெறும் ஈயத்தைப் பொன்னென்று காட்டுகின்றவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே. சகுனி கொக்கரித்து ஆர்த்தெழுந்தாடினான். அவன் சொல்லுகின்றான், "எட்டுத் திக்குகளையும் வென்ற பார்த்தனை வென்று தீர்த்துவிட்டேன், இனி பீமனைப் பணயமாகக் கூறு" என்றான். நெஞ்சம் நிரம்பிய கோபத்தால் நீதியை மறந்த தருமன், "ஐவர் தமக்கோர் தலைவனை, எங்கள் ஆட்சிக்கு வேர் போன்ற வலியனை, ஒரு தெய்வமே எதிர் நின்று எதிர்த்தாலும் சீறியடிக்கும் திறம் படைத்தவனை, நெடிய தும்பிக்கைகளையுடைய யானை பலவற்றின் பலத்தைக் காட்டக்கூடிய பெரும் புகழ் பீமனை உங்கள் பொய்வளர் சூதினில் பணயமாக வைக்கிறேன்! வென்று போ" என்று கோபத்தோடு உரைத்தான்.
அந்தச் சூதில் பீமனைத் தோற்றான். அந்தத் தீயவர்கள் வெல்வதைக் கண்ட துரியோதனாதியர் போர்க்களத்தில் ஒரு யானை அடிபட்டு வீழ்வதைக் கண்டு பல பூதங்கள், நாய், நரி, காகங்கள், மாமிசம் விரும்பும் கழுகுகள் இவையெலாம் உள்ளம் களிகொண்டு மகிழ்தல்போல் நின்று தங்கள் மார்பிலும் தோளிலுங் கொட்டி மகிழ்ந்தார். மனம் களிகொண்டு குதித்தாடினார். கூடியிருந்த மன்னர்கள் தங்களை மன்னர்கள் என்பது மறந்து போய் திருடர்களைப் போல் மகிழ்ந்தனர். சின்ன மதிபடைத்த சகுனி சிரிப்போடு, "இன்னும் வேறு பந்தயம் வை" என்றான். தருமன் துக்கத்தால் தன்னை மறந்திருந்ததால், தன்னையே பணயமாக வைத்தான். பிறகு முந்தைய கதையைப் போலத்தான், அந்த மோசச் சகுனிக்கு வெற்றிதான்.
துரியோதனன் பொங்கி எழுந்து பூதலத்து மன்னர்களுக்குச் சொல்கிறான், "பாண்டவர் ஒளி மங்கி அழிந்தனர். இந்தப் புவி மண்டலம் இனி நம்முடையது. இவர்களுடைய அளவற்ற செல்வம் இனி நம்மைச் சார்ந்தது. வாழ்த்துங்கள் மன்னர்களே!" என்று சொல்லி தம்பியை அழைத்து "இந்த நல்ல செய்தியை பறையறைந்து மாநிலம் முழுதும் அறிவிப்பாயடா" என்றான். அதுகேட்டு சகுனி, "வெந்த புண்ணில் வேலை நுழைப்பது போல் உன்னைப் போன்றவர்கள் செய்யலாமா? கண்ணில்லாத உனது தந்தை இவர்களை மிகவும் நேசத்தோடு எண்ணியிருப்பதை நீ அறிவாயல்லவா? இவர்களெல்லாம் யார்? உனது சகோதரர்களல்லவா? மகிழ்ச்சிக்காகத் தொடங்கிய சூதாட்டமல்லவா இது, இதில் இவர்களை வெட்கமடைய வைப்பது நியாயமா? இன்னும் பணயம் வைத்து ஆடுவோம். இப்போதுகூட இவர்கள் வெற்றி பெறலாம் அல்லவா? பழையபடி பொன்னும் குடிமக்களும் தேசமும் திரும்பப்பெற்று பெருமையோடு வாழ்வதற்கு இடமிருக்கிறதே. ஒன்று செய்யலாம். ஒளிபொருந்தியவளும் அமுதம் போன்றவளுமான இவர்களது தேவியை வைத்திட்டால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா, அதனால் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாமே."
இப்படி அந்த மாமன் உரைக்கவும், மனம் மகிழ்ச்சியடைந்த துரியோதனன்,"சரி சரி, நல்லது நல்லது" என்றான். நாய் ஒன்று தேன் கலசம் என்றெண்ணிக்கொண்டு வளைந்த வெற்று சட்டிக்குள் நாக்கைவிட்டுத் துழாவி இன்புறுதல் போல் மகிழ்ச்சியடைந்து ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். உலகத்து தர்மங்களெல்லாம் அழிந்து போயின.
பாவிகள் நிறைந்த சபையில் புகழ்ப் பாஞ்சால நாட்டின் தவப்பயனும், ஆவியினியவளும், உயிர்பெற்று உலாவும் அமுதம் போன்றவளும், ஓவியம் போன்ற அழகுடையவளும், அருள் ஒளியைப் போன்றவளும், புவிக்கு லட்சுமியும், எங்கு தேடினும் கிடைத்தற்கரிய திரவியம் போன்றவளும், உலகில் நடைபயிலும் தெய்விக மலர்க்கொடி போன்றவளும், மின்னல்போன்ற வடிவுடையவளும், பேரழகியுமான இன்பவனம் போன்ற திரெளபதியைச் சூதில் பணயமென்று கொடியோர் நிறைந்த அவைக்களத்தில் தர்மத்தின் நாயகன் நிச்சயித்தான்.
புனிதமான வேள்விக்குரிய பொருட்களை புலை நாய்கள் தின்றிட வைத்திடல் போல், பொன்னாலான உத்தரங்களுள்ள மாளிகை கட்டி பேய்களை அதில் குடியமர்த்துவது போல், மனிதனை விற்றுப் பொன் வாங்கி அதிலோர் அழகிய ஆபரணம் செய்து அதனை ஆங்கோர் ஆந்தைக்குப் பூட்டி அழகு பார்ப்பது போல், கேட்பதற்கு ஆளில்லாமல் உயிர்த் தேவியைக் கீழ் மக்கட்கு அடிமையாக்கினான் தருமன்.
செருப்பு தைப்பதற்குத் தோல் வேண்டுமென்று ஒரு செல்லக் குழந்தையைக் கொல்வார்களோ? ஆசைப்பட்டு விளையாடும் இந்தக் கேவலமான சூதாட்டத்தில் பணயப்பொருளா பாஞ்சாலி? தருமன் பாஞ்சாலியைப் பணயம் என்றவுடன் கெட்ட மாமனும் இரு பகடையென்று உருட்டினான். பொய்மைக் காய்களும் இரு பகடைகள் விழுந்தன.
கூடியிருந்த தீயவர் கூட்டம் எழுந்தாடியது. திக்குக்கள் எல்லாம் குலுங்கின. தக்குத் தக்கென்றே அவர்கள் தோளினைத் தட்டிக் குதித்தாடுகின்றார். வேண்டும் இந்த தருமனுக்கு என்று சொல்லி ஓ ஓ என்று கூச்சலிட்டார். கக் கக் கென்றே நகைத்திடுவார். ஓடிவந்து துரியோதனா கட்டிக்கொள் எமை யென்பார். சகுனி மாமனைத் தூக்கிக்கொள் என்பார். அந்தத் தீய சகுனிமேல் மாலைகளை வீசுவார். செல்வங்களை மட்டுமல்ல, நாட்டையும் காமத் திரவியமாம் இந்தப் பெண்ணையும் நம் கைவசமாகச் செய்தான், மாமன் ஓர் தெய்வம் என்பார். துரியோதனன் வாழ்க என்று சொல்லிக் கூத்தாடுவார்.
துரியோதனன் எழுந்தான், மாமன் சகுனியைத் தன் மார்புறக் கட்டித் தழுவினான். "மாமனே! என் துயர் தீர்த்தாயடா, எனக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கிவிட்டாய். அன்று என்னைப் பார்த்து நகைத்தாளடா மாமனே, அவளை எனக்குரிமையாக்கி விட்டாய். இதை என்றும் மறவேனடா மாமனே! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். ஆசை தணித்தாயடா, மாமனே, என் உயிரைக் காத்தாயடா! உனக்கு பூசைகள் செய்வோம், பொங்கலிட்டு வழிபடுவோம். நமது நெடுநாட்பகை நாசமடைந்ததடா, நாம் இனி வாழ்ந்தோமடா! எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை, உயிர் மாமனே, எனக்குப் பேரின்பம் கூட்டிவிட்டாய்" என்று பல சொல்லிவிட்டு துரியோதனன் எண்ணி யெண்ணிக் குதிப்பான். குன்று ஒன்று எழுந்து குதிப்பதுபோல் அவன் கைகொட்டிக் குதித்து ஆடுவான். அந்த சபை குழப்பமடைந்து அங்கிருந்தோர் யாவரும் வகை தொகை யொன்றுமின்றி அன்று நடந்துகொண்டதெல்லாம், என்றன் பாட்டினில் ஆக்குதல் எளிதாகுமோ என்கிறார் பாரதி.
திரெளபதியை மன்றுக்கு அழைத்து வர துரியோதனன் இட்ட கட்டளையினால் பூமியில் ஏற்பட்ட அதர்மக் குழப்பத்தை மகாகவி இவ்வாறு வர்ணிக்கிறார். தர்மம் அழிந்து போய், சத்தியமும் பொய்யாகி, தவங்களனைத்தும் பெயர் கெட்டு மண்ணாகி, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய்ந்ததுபோலாக, மோன முனிவர்கள் முறை தவறி என்ன செய்கிறோமென்று அறியாமல் மதி மயங்க, வேதங்கள் பொருளை இழந்து வெற்றுரையாகி விட, நாதங் குலைந்து நடுமை யின்றிப் பாழாக, கந்தர்வ ரெல்லாம் களை யிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவரும் பித்துற, பிரம்மன் நாவடைத்துப் போக, சரஸ்வதி தேவிக்கு புத்தி மயங்கிட, வான்முகில் போன்ற கருநிறத்துத் திருமால் யோகநித்திரை கலைந்து ஆழ்ந்த துயிலெய்திவிட, செல்வத்தின் அதிபதியாம் ஸ்ரீதேவி முகத்தின் செம்மை நீங்கிக் கருமையாக, மகாதேவன் யோகம் மதிமயக்கமாகி விட, சூரியனாந் தெய்வத்தின் முகத்தே யிருட் படர இப்படியெல்லாம் குழப்பம் ஏற்பட்டதாம்.
மூடன், உள்ளம் கருத்தவன், வீரமிலா கோழை துரியோதனனும் சுறுக்கெனத் திரும்பி விதுரனைப் பார்த்துப் பேசுகிறான். "போ விதுரா! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? வளைந்த நெற்றியும் மிகுந்த அழகும் உடைய, முன்னே பாஞ்சாலனின் மகளாகப் பிறந்தவளும், இன்று சூதில் நாம் வென்றெடுத்த விலைமகளிடம் சென்று நடந்த விவரங்களையெல்லாம் சொல்லி நன்கு உணர்த்தி, ராஜ சபையிலிருக்கும் உன் மைத்துனர்களின் தலைவன் தன் வீட்டில் ஏவல் செய்வதற்கு உன்னை அழைக்கிறான் என்று சொல்லி அவளை இங்கு கொணர்வாய்" என்றான்.
துரியோதனன் இங்ஙனம் சுடுசொற்கள் கூறியதைக் கேட்ட பெரியோன் விதுரன் பெரிதும் சினங்கொண்டு, "மூடனே, வரப்போகும் கேட்டை அறியாமல் சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கீழ்மையினால் சொல்லிவிட்டாய். புள்ளிச் சிறுமான் புலிமீது பாய்வது போல், சிறிய தவளை பெரிய பாம்பிடம் மோதுவதுபோல், பாண்டவர்களின் சினமெனும் நெருப்பைத் தூண்டுகிறாய். தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய், உன் நன்மைக்காக நீதியெலாம் சொல்லுகிறேன். என் அறிவுரைகள் வேறு யாருக்காகவும் இல்லையடா! பாண்டவர்கள் நாளை இதற்காகப் பழி தீர்த்திடுவார், மாண்டுபோய் தரைமீது, மகனே, நீ கிடப்பாய். தானே தனக்கு அழிவைத் தேடிக்கொள்ளும் கொடுமையை என்னவென்பேனடா? நெஞ்சம் பதறப் பேசுதல் நேர்மை என நினைக்கிறாயா? நீ சொல்லும் கொடிய சொற்கள் உயிர்நாடியில் பாய்வதன்றோ? கெட்டுப்போனவர் வாயில் கொடிய வார்த்தைகள் எளிதாக வந்துவிடும், ஆனால் அது பாதிக்கப்பட்டோர் நெஞ்சங்களைவிட்டு நெடுநாள் அகலாது. நொந்துபோனவர் மனம் சுடும்படியாகச் சொல்லும் சொல் கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்; கற்கும் வித்தைகளைத் தடுத்துவிடும். கவுரவர்களே! சொல்லிவிட்டேன், மறுமுறை சொல்லமாட்டேன். கீழ்மக்களுக்கு இன்பம் பூமியில் கிடைக்காது. பேராசையினால் தவறானவைகளைச் செய்கிறீர்கள். வரக்கூடாத கொடுமைகளும், பெரும் விபத்துக்களும் உங்களுக்கு வந்து சேரும். ஆகையினால், பாண்டவர்களின் பாதங்களைப் பணிந்து அவர்களிடமிருந்து பறித்துக் கொண்ட எல்லாவற்றையும் மீண்டும் அவர்களுக்கே கொடுத்துவிட்டு பணிவுடன், "ஆண்டவரே, நாங்கள் அறியாமையால் செய்த நீண்ட பழியிதனை நீர் பொறுப்பீர்" என்று சொல்லி அவர்களைத் தங்கள் வளநகருக்கே செல்ல விடுங்கள். குற்றத்தைத் தவிர்க்கக்கூடிய இந்தச் செயலை நீங்கள் செய்யாவிட்டால், மாபாரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்!" என்று அந்தப் புண்ணியன் விதுரன் கூறினான்.
விதுரன் சொன்னவற்றைக் கேட்ட மூடன் துரியோதனன் இடி இடிப்பதுபோல் பேசலானான்: "சீச்சீ! மடையா! நீ கெடுக. எப்போதும் எம்மைச் சபித்தல் உனக்கு இயல்பாகிவிட்டது. உன் சொற்களை இப்போது எவரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். யாரடா அங்கே, தேர்ப்பாகன்! நீ போய் இரண்டு கணத்தில் பாரதர்க்கு வேந்தன் பணித்தான் என்று சொல்லி பாண்டவர் தம் தேவியைப் பார்வேந்தர் அரசவைக்கு அழைத்து வா!" என்று இயம்பினான். உடனே அந்தத் தேர்ப்பாகன் விரைந்து சென்று பாஞ்சாலி இருக்கும் மனைக்குச் சென்று சோகம் ததும்பும் துடித்தக் குரலுடன், "அம்மனே போற்றி, அறங்காப்பாய் தாள் போற்றி! விதியின் சதியால் யுதிஷ்டிரர் மாமன் சகுனியோடு மாயச் சூதாட்டத்தில் நாட்டை இழந்து, பொருளெலாம் இழந்து, தம்பியர்களையும் பணயம் வைத்துத் தோற்றுப் பின் தன் சுதந்திரத்தையும் இழந்து விட்டார். சூதில் பணயமென்று, தாயே! உன்னையும் வைத்தார். சொல்ல நாவு துணியவில்லை, உன்னையும் தோற்றுவிட்டார். எல்லோரும் கூடியிருக்கும் சபையில் உன்னை அழைத்து வரும்படி அரசன் எனக்குக் கட்டளையிட்டான்" என்றான்.
"யார் சொன்ன வார்த்தையடா? சூதர் சபையிலே நற்குலத்து மாதர் வருவது மரபோடா? யார் சொல்லி நீ வந்து என்னை அழைக்கிறாய்?" என்றாள் திரெளபதி.
அதற்கு அவனும், "மன்னன் துரியோதனனுடைய ஆணையால் வந்தேன்" என்றான்.
"நல்லது; நீ சென்று நடந்த விவரங்களைக் கேட்டு வா. சூதில் வல்ல சகுனியிடம் தோற்ற நாயகரிடம் தாம் என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? தம்மையே முன்னால் இழந்த பின்னர் என்னை வைத்துத் தோற்றாரா? சென்று சபையில் இதற்கு பதிலைத் தெரிந்து வா" என்று பாஞ்சாலி கூறி, அந்த தேரோட்டி சென்ற பிறகு தன்னந்தனியளாய் தவிக்கும் மனத்தோடு, நிறம் வெளிர, மலர் விழிகள் கண்ணீர் சொரிய, மனத்தில் அச்சம் மேலோங்க, பேயைப் பார்த்த குழந்தையைப் போல வீற்றிருந்தாள். பிறகு அந்தத் தேர்ப்பாகன் மன்னனுடைய சபைக்குச் சென்று, "வேந்தே! ஆங்கு அந்தப் பொன்னரசி தாள் பணிந்து 'போதருவீர்' என்றிட்டேன், அதற்கு அவர் 'என்னை முதலில் வைத்திழந்த பின்பு தன்னை என் மன்னர் இழந்தாரா? மாறாகத் தம்மைத் தோற்ற பின்னர் என்னை இழந்தாரா? என்று இந்த அவையிடம் கேட்டுவருமாறு என்னை அந்த மின்னற் கொடியார் பணித்தார், வந்து விட்டேன்" என்று உரைத்தான். இதனைக் கேட்ட பாண்டவர்கள் நொந்து போய் ஒன்றும் பேசாதிருந்து விட்டார். மற்றும் அந்த சபையில் வீற்றிருந்த மன்னரெல்லாம் பேச்சிழந்து ஊமைகளாய் வீற்றிருந்தார்.
மனம் துடித்துத் துரியோதனன் கோபம் கொப்பளிக்க வெறிகொண்டு சொல்லுகிறான், "அட! சிறுபிள்ளை போல கதை சொல்லுகிறாய். என்னுடைய தன்மை உணரவில்லை போலும் நீ. அந்தக் கள்ளக் கரிய விழியாள் சொன்ன கேலி மொழிகளைக் கேட்டுக் கொண்டு வந்து சொல்லுகிறாய். அவள் இங்கு வந்து கிளி போல பேசுவதைக் கேட்க என் மனம் விரும்புகிறது. இங்கு வந்து கேட்க விரும்புவனவற்றைக் கேட்கலாம், சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லலாம். இங்கு வரத் தயங்க அவள் என்ன கூண்டுப் பறவையா? ஐவருக்கும் மனைவியல்லவா, அப்படியிருக்க நாணமேன்? நான் கோபமுற்று கடுமையான செயல்களைச் செய்யுமுன் அந்த மொய் குழலாளை இங்கு அழைத்து வா. மன்னன் அழைக்கிறான் என்று சொன்ன பின்பு அதற்கு மாறாக அவள் ஒன்று சொல்வதோ? உன்னைச் சிதைத்து விடுவேனடா; ஒரு கணத்தில் அவளை இங்கே கொண்டு வா" என்றான். துரியோதனன் சொன்ன மொழிகளை அந்தப் பாகன் பாஞ்சாலி முன்பு போய் வணங்கிக் கூறினான். அதற்கு அவள், "தம்பி! என்னை வீணாக அழைப்பதேன்? நாயகர் தன்னைத் தோற்ற பின் என்னை பணயம் வைக்க உரிமை இல்லை. கேவலமான சூதில் விலைப்பட்டபின் என்ன சாத்திரத்தின் அடிப்படையில் என்னைத் தோற்றிட்டார்? அவர் சூதில் தோற்று அடிமைப்பட்டவர், நானோ இப்போது துருபதன் புதல்வி. நிலைமை மாறி அடிமையானவருக்கு மனைவி எனும் உரிமை அவர்க்குண்டோ?
"கெளரவர் சபையிலே தர்மம் தெரிந்தவர் யாருமில்லையோ? மன்னருடைய பலம் வீழும் முன்னரே அங்கு சாத்திரங்கள் செத்துக் கிடக்குமோ? புகழ் பெற்ற ஆச்சார்யார்களும், கல்வியிற் சிறந்த மன்னரும் செல்வங்களைச் சூதில் இழப்பதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், என் மானம் அழிவதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களோ? பூமியில் எல்லோருக்கும் இன்பம் துன்பம் இவை வரத்தான் செய்யும். எனில் பூமியை ஆளும் மன்னர்கள் தங்கள் பெருமையைக் கொன்று மகிழ்வரோ? அப்படி நடப்பதை அன்பும் தவமும் உடையவர்களும், அந்தணர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைவரோ? நான் முன்பு கேட்ட அதே கேள்வியை மீண்டுமொருமுறை அவர்களிடம் கேட்டு அதற்குத் தெளிவான பதிலை அறிந்து வா" என்றாள் அந்த மாதரசி.
இதனைக் கேட்ட அந்த ஏழைப் பாகன் என்ன செய்வான்? என்னைக் கொன்று போட்டாலும் கவலையில்லை, இவர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் விடை தராமல் மீண்டுமொரு முறை வந்து அழைத்துவரச் சொன்னால் நான் அதற்கு இணங்க மாட்டேன் என்று மனத்தில் உறுதி மேற்கொண்டு சபைக்குச் சென்று நடந்ததைக் கூறினான் அந்தப் பாகன்.
"அந்த மாதரசி மாதவிடாயிலிருக்கிறாள் என்றும் கூறினான். கெட்ட பாதகனான துரியோதனன் மனம் இளகவில்லை. நின்று கொண்டிருந்த பாண்டவர்களின் முகத்தைப் பார்த்தான். அவர்கள் உன்மத்தராய் நிற்பது கண்டான். மேலும் அந்த சபையில் இருந்தவர்களில் எவருக்கும் இவனது இந்த தீமையான எண்ணத்தைத் தடுக்க மனத்தில் வலிமையில்லாமல் இருந்தனர்.
தேர்ப்பாகனைக் கோபத்துடன் பார்த்து மீண்டும் துரியோதனன் சொல்லுகின்றான்: "மறுபடி போய் நமது கட்டளையைச் சொல்லடா! அவளை ஏழு கணத்தில் இங்கே வரும்படி செய். இல்லையேல் உன்னைச் சாகும்படி மிதித்துக் கொல்வேனடா" என்று மன்னன் சொல்லிடப் பாகனும் மன்னனின் கோபத்தை உணர்ந்து, அங்கு உட்கார்ந்திருந்தவர்களை நோக்கி, "என் மீது இப்படிச் சீறுகின்ற மன்னருக்கு நான் என்ன பிழை செய்தேன். அங்கு போய் தேவியை நூறு முறை அழைத்தாலும் அவர் இதே கேள்வியை கேட்டுத் திருப்பி அனுப்புவார். அவர் ஆறுதலடையும்படி ஒரு வார்த்தை சொல்லுங்கள், நான் போய் அழைக்கிறேன். மன்னன் சொல்லும் பணியைச் செய்யவேண்டியவன் நான், அந்தக் கோதை வராவிடில் நான் என் செய்வேன்" என்று புலம்பினான்.
தேர்ப்பாகன் சொன்னதைக் கேட்ட துரியோதனன், "பாகன் அழைத்தால் அவள் வரமாட்டாள், இந்தப் பயலும் பீமனுக்குப் பயந்து கொண்டு செய்வதறியாமல் திகைக்கிறான். இவன் பயத்தைப் பின்னர் போக்குகிறேன் என்று சொல்லி துச்சாதனனை அழைத்து, "தம்பீ! நீ இப்போதே அங்கு போ, அந்தப் பொற்கொடியோடு இங்கு வருவாய்" என்று கூறினான்.
இவ்வுரை கேட்ட துச்சாதனன் அண்ணனுடைய விருப்பத்தை மெச்சி எழுந்தான். இவனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். இவன் தீமை புரிவதில் அண்ணனை மிஞ்சியவன். கல்வி எள் அளவுகூட கிடையாது. கள்ளையும் பச்சையான மாமிசத்தை உண்பவன். எதிரிகள் இவனைக் கண்டு அஞ்சுவர். இவனைச் சார்ந்தவர்கள் இவனைப் பேய் என்று ஒதுங்குவார். புத்தி விவேகமில்லாதவன், புலி போல உடல்வலி கொண்டவன், அளவற்ற ஆணவத்தால் கள்ளினைக் குடிக்காமலே வெறிபிடித்தவன். தீமை வழி நிற்பவன், சிவசக்தி நெறி உணராதவன். இன்பம் வேண்டி முறையற்ற செயல் செய்பவன், என்றைக்கும் நல்லோர் இணக்கம் இல்லாதவன்.
தன் அண்ணனைத் தவிர தான் இந்த பூமிக்கே தலையாயவனாக நினைப்பவன். அண்ணன் எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய்பவன். இரக்கம் என்பதே இல்லாத பாதகன். அந்தக் காரிகை தன்னை அழைத்து வா என்று அந்த அண்ணன் உரைத்திடல் கேட்டதும், நல்லது என்று உறுமிக்கொண்டு எழுந்தான். பாண்டவர் தேவி பாஞ்சாலி இருந்ததோர் மணிப் பைங்கதிர் மாளிகைக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கு தாங்க முடியாத சோகத்தால் நிலைகுலைந்து போன நேரிழை மாதினைக் கண்டான். அவள் தீட்டு என்று ஒதுங்கினாள், இவனோ, "அடி! எங்கே போகிறாய்?" என்று கத்தினான். இவன் வீரம் செறிந்த ஆண்மகன் அல்ல என்று அவள் பயமில்லாமல் இவனை எதிர்கொண்டு சொல்லுகிறாள்.
"பாண்டவர்களின் தேவி நான்; துருபதனின் புதல்வி. இதனை இன்று வரை என்முன் யாரும் மறந்து நடந்துகொண்டதில்லை. தம்பி! இங்கு காவல் இல்லை என்ற தைரியத்தில் வரைமுறையின்றி பேசுகிறாய். நீ வந்த செய்தியை விரைவில் சொல்லிவிட்டு இவ்விடத்தை விட்டு நீங்கிவிடு!" என்றாள் அந்தப் பெண்கொடி.
"பாண்டவர் தேவியும் அல்லை நீ, புகழ் பாஞ்சாலன் மகளுமல்ல நீ. புவி ஆளும் என் அண்ணனுடைய அடிமை நீ. மன்னனுடைய சபையிலே நடந்த சூதாட்டத்தில் எங்கள் நேசன் சகுனியோடு சூதாடி உன்னைப் பணயமாக வைத்துத் தோற்றுவிட்டான் தருமபுத்திரன். ஆட்டத்தில் தோற்று விலைப்பட்ட தாதி நீ. உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் துரியோதனன். மன்னர்கள் கூடியிருக்கிற சபைக்கு உன்னைக் கூட்டி வருமாறு மன்னன் சொல்ல, ஓடிவந்தேன், இதுதான் நான்வந்த காரணம். இனி ஒன்றும் பேசாமல் என்னோடு கிளம்பி வா! அந்த பேடி மகன் தேர்ப்பாகனிடம் நீ பேசிய பேச்சுக்களை நானும் கேட்க விரும்பவில்லை" என்று துச்சாதனன் சொன்னான்.
இதனைக் கேட்ட பாஞ்சாலி, "அச்சா! கேள். மாதவிலக்கென்பதால் நான் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். மன்னர் சபைக்கு என்னை அழைப்பது நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி, சகோதரனுடைய மனைவியைச் சூதில் பணயமாகக் கொண்டு ஜெயித்து அவள் ஆதரவின்றி இருக்கும்போது துன்பம் தருதல்தான் மன்னர் குலத்து மரபோ? அண்ணனிடம் என் நிலைமையைப் போய்ச் சொல். நீ போகலாம்" என்றாள்.
இதுகேட்ட துச்சாதனன் 'கக்கக்க' வென்று கனைத்துக்கொண்டு பெருமூச்சுடன் பக்கத்தில் வந்து அந்தப் பாஞ்சாலியின் கூந்தலினைக் கையினால் பற்றிக் கரகரவென இழுத்தான். ஐயகோ என்று அலறிக்கொண்டு உணர்வு மயங்கிப் பாண்டவர் தேவி பாஞ்சாலி பாதி உயிர் போனவளாய் இருக்கும்போது, அவளது நீண்ட கருங் குழலை அந்த நீசன் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். வழி நெடுக கூட்டங்கூட்டமாய் மக்கள் சாலையெங்கும் மொய்த்தவராய், "என்ன கொடுமை இது" என்று சொல்லிப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஊராரின் கீழ்மை சொல்லும் தரமாமோ? வீரமிலா நாய்கள், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். விலங்காய் மாறிப்போன இளவரசன் துச்சாதனனை மிதித்துத் தரையில் வீழ்த்திவிட்டு அந்த மாதரசியை அவளது அந்தப்புரத்தில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா? மாறாக நெட்ட நெடு மரங்களைப் போல் நின்று கொண்டு, என்ன கொடுமையிது என்று புலம்பிக் கொண்டு நிற்கின்றனரே. இத்தகைய பெட்டைப் புலம்பல் பிறருக்கு எந்த வகையில் துணைபுரியும்? பேரழகு உடைய பெருந்தவம் கொண்ட நாயகியைச் சீரழிய, கூந்தல் சிதையக் கவர்ந்து கொண்டு போய்க் கேடுற்ற மன்னனின் தர்மம் கெட்ட சபையில் கொண்டு போய்ச் சேர்த்தான் துச்சாதனன். அவள் அங்கு 'கோ' வென்று அலறினாள்.
பாஞ்சாலி விம்மி அழுதாள். 'விதியோ கணவரே! அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, என்னை வேதச் சுடர்த்தீயின் முன் விரும்பி மணம் செய்து கொண்டபின், இந்தப் பாதகர் முன்னால் சீரழியப் பார்த்துக் கொண்டிருப்பீரோ?' என்றாள். வில் விஜயனும், புஜவலி கொண்ட பீமனும் பார்க்க, தருமன் தலை குனிந்து நின்றான். மனம் பொருமி அவள் மேலும் சொல்லுகிறாள், "அரசன் அவையில் புகழ்பெற்ற அறிஞர்களும், வேள்வி, தவங்கள் பல புரிந்த வேதியர்களும், மேலோரும் இருக்கின்றனரே. அவர்கள் இந்த அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளவில்லையா? என்னைக் காக்கும் உரிமை படைத்த பாண்டவர்களே அடிமைப் பட்டபின்னர், அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமில்லை. தர்மம் மங்கிப்போன இந்த அநியாயச் சபையிலே என்னைப் பிடித்து இழுத்து வந்து ஏச்சுக்கள் பேசுகின்றாய்? உன்னை எவரும் நிறுத்தடா என்று சொல்லவில்லையே. என் செய்வேன்?" என்று ஓவென்று ஓலமிட்டு அழுதாள். தீப்பொறி பறக்கும் விழிகளால் பாண்டவர்களை வெந்நோக்கு நோக்கினாள்.
எல்லோரும் வாய்மூடி பெருமை இழந்து சிலைபோல நிற்பதைப் பார்த்து, வெறிகொண்டு துச்சாதனன் அந்த மாதரசியைப் பார்த்துப் பல தீதுரைகள் பேசி, "தாதியடி, தாதி!" என்று இழித்துரைத்தான். கர்ணன் சிரித்தான். பலே என்று சகுனி புகழ்ந்தான். சபையிலிருந்தவர்கள் .... அவர்கள் சிலைகளைப் போல் உட்கார்ந்திருந்தனர். அப்போது தகுதி வாய்ந்த பீஷ்மாச்சாரியார் சொல்லுகிறார்:-
"பெண்ணே! யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் வைத்து உன்னைத் தோற்றுவிட்டான். இந்த மன்றத்தில் வாதாடி நீ அவன் செய்த முறை சரியல்ல என்கிறாய். சூதில் வல்லவன் சகுனி. அவனுடைய சூழ்ச்சியால் உன் மன்னவனை அவன் தோற்கடித்து விட்டான். இந்தச் சூதில் உன்னைப் பந்தயமாய் வைத்ததே தவறு என்று சொல்லுகிறாய். கோமகளே! பண்டைய காலத்து வேத முனிவர்கள் வகுத்த நீதிப்படி நீ சொல்வது சரியாக இருக்கலாம். இது ஆதிகாலத்து நிலைமை. ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலைமை அந்தக் காலத்தில் இருந்தது. பிந்நாளில் அந்த நிலை மாறிப் போய், இந்தக் கால நீதிநூல்களின்படி பெண்கள், ஆண்களுக்கு நிகரில்லை என்பதாயிற்று. ஒருவன் தனது மனைவியை விற்றுவிடலாம். தானமாக வேறொருவருக்குத் தந்துவிடலாம். முற்றிலும் மிருகங்களின் நிலைபோலத்தானேயன்றி வேறில்லை. தருமன் தன்னைப் பந்தயம் வைத்து இழந்த பிறகும் உன்னைத் தனக்கு அடிமையாக வைத்திருக்க நீதி உண்டு. தர்மங்களை உணராதவர்கள் இங்கு செய்தவற்றைப் பார்த்தால் கல்லும் நடுங்கும்; மிருகங்களும் வெட்கிக் கண்புதைக்கும். இங்கு நடந்தவை அநீதி என்று தெரிந்தாலும், சாத்திரம், வழக்கம், முறைமை பற்றி நீ கேட்பதனால் சொல்லுகின்றேன் உன் பக்கம் நின்று பேச முடியவில்லை. நடக்கும் தீமைகளைத் தடுக்கும் திறமும் எனக்கில்லை". இப்படி அந்த மேலோன் சொல்லிவிட்டுத் தலை கவிழ்ந்தான்.
பாஞ்சாலி சொல்லுகிறாள்:- "மிகவும் நன்றாகத்தான் சொன்னீர்கள் ஐயா! முன்பு இலங்காபுரி இராவணன் சீதையை பாதகத்தால் கவர்ந்து சென்று ஆங்கோர் வனத்திடையே வைத்துவிட்டுப் பின் அரசவைக்குச் சாத்திரிமார்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து தான் இவ்வாறு சீதையைக் கவர்ந்து வந்த செய்தியைச் சொன்னபோது, அவர்கள் 'தக்கது நீர் செய்தீர்! உங்கள் செய்கை தர்மத்துக்கு ஒத்த செய்கைதான்' என்று கூறி மகிழ்ந்தனராம் சாத்திரிமார். 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'. சூதுவாதறியாத மன்னவனைச் சூதாட வற்புறுத்தியது வஞ்சனையா, நேர்மையா? முன்கூடியே திட்டமிட்டுச் செய்துமுடித்த செய்கை அல்லவா இது? புதிய மண்டபத்தை நீங்கள் கட்டியது எமது நாட்டை அபகரித்திடும் நோக்கத்தில்தான் அல்லவா? மனைவியும், பெண்களும் உடையவர்கள் இவர்கள். பெண்களோடு உடன்பிறப்பாய்ப் பிறந்தவர்கள். செய்வது பெண்பாவமல்லவா? இதனால் பெரும்பழி உங்களுக்கு வந்து சேரும். கண்திறந்து பாருங்கள்" என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டாள். அம்பு பாய்ந்து துடிக்கும் மான்போல துடிதுடித்தாள். கூந்தல் தரையில் புரண்டு புழுதிபடிய அழுவது கண்டும் துச்சாதனன் இரங்கவில்லை.
அணிந்த ஆடை குலைவுற்று நின்றாள். அவள் ஆவென்று அழுது துடிக்கின்றாள். வெறும் மாடுபோன்ற துச்சாதனன் அவளுடைய மைக்கூந்தலைப் பிடித்து இழுக்கின்றான். இந்தக் காட்சியைப் பார்த்தான் பீமன். கரைபுரண்டெழும் கோபத்தோடு எழுந்தான். மனத்தில் கோபம் துயரம் மேலெழ தருமனைப் பார்த்துச் சொல்லுகின்றான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளுங்கள்:-
"சூதாடுவோர் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் உண்டு. ஆனால் சூதாட்டத்தில் பந்தயமாக எந்தப் பெண்ணும் அங்கு போவதில்லை. என்ன நினைத்து வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குலத்துக்கே மணிவிளக்கு போன்றவளை, அன்பே வாய்ந்த வடிவழகை, பூமி அரசரெல்லாம் கண்டு போற்றி வணங்குபவளை, போரில்வல்ல பாஞ்சால மன்னனின் சுடர் மகளை, அண்ணே! சூதாடி இழந்து விட்டாய். தவறு செய்துவிட்டாய், அண்ணே, தர்மம் கொன்று விட்டாய். நாம் பெற்ற வெற்றிகள் சோரத்தினால் பெற்றது அல்ல, சூதினால் பெற்றதும் அல்ல, வீரத்தினால் படைத்தோம், வெம்போரில் வெற்றி பெற்று படைத்தோம். சக்கரவர்த்தி என்று உலகம் போற்ற வாழ்ந்திருந்தோம்; பொக்கென ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். நாட்டையெல்லாம் சூதில் வைத்து இழந்துவிட்டாய் அண்ணே! அதனை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். மீண்டும் எங்களையெல்லாம் அடிமை செய்தாய், அதனையும் பொறுத்துக் கொண்டோம். துருபதன் மகளை, திருஷ்டதும்னன் சகோதரியை, இரு பகடையென்றாய், ஐயோ! இவர்களுக்கு அடிமை யென்றாய். இதனைப் பொறுப்பதில்லை, தம்பீ! சகாதேவா! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்த இந்த அண்ணனின் கையை எரித்திடுவோம்" என்றான் பீமன்.
இப்படி பீமன் சகாதேவனிடம் சொல்லியதைக் கேட்ட வில்விஜயன் பீமனுக்குப் பதில் சொல்கிறான். "பீமா! மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? பெருமைக்குரிய துருபத ராஜனின் மகளைச் சூதுக் களியிலே இழந்தது குற்றமென்றாய்; சினம் எனும் தீ அறிவை எரித்துவிட்டதால் திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 'தருமத்தின் வாழ்வைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' எனும் இயற்கை மருமத்தை நம்மாலே இந்த உலகம் கற்கும். வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன் மேலுங் காண்போம். இன்று கட்டப்பட்டு விட்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்; தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்: பீமா! இதோ பார் என்னுடைய வில் இருக்கிறது. அதன் பெயர் காண்டீபம்! இதை நினைவில் வைத்துக் கொள்" என்றான்.
பீமன் தர்மனை வணங்கினான். அப்போது துரியோதனனின் மற்றொரு தம்பியான விகர்ணன் எழுந்து பேசுகிறான். "பெண்ணரசி பாஞ்சாலி கேட்ட கேள்விக்குப் பாட்டன் பீஷ்மர் சொன்ன பேச்சை நான் ஏற்கவில்லை. பெண்களை மனத்தில் விலங்கு போல எண்ணி கணவன்மார் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்றான் பாட்டன். பெருமைக்குரிய வேத நெறிமுறைகள் மாறி பிந்நாளில் அப்படிப்பட்ட வழிமுறைகள் வந்து நிலைத்து விட்டதாகப் பாட்டன் சொன்னான். அப்படி அவன் தவறாகச் சொன்னான்.
நம் முந்தைய தலைமுறையினர் பாட்டன்மார் இவர்களெல்லாம் மனைவியரை விற்றதாகச் செய்தி உண்டோ? இதுவரை அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ? விலை மாதர்களுக்கு விதித்தவைகளை பிற்காலத்தில் எல்லாப் பெண்களுக்குமென்று சாத்திரத்தில் புகுத்தி விட்டார். அதுவும் சொல்லளவில்தானே தவிர வழக்கத்தில் அப்படிச் செய்வதில்லை. சூதர் இல்லங்களில் கூட பணிப்பெண்களைப் பணயம் வைப்பதில்லை என்பதை அறிந்தோம். தன்னை இவன் சூதில் இழந்து அடிமையானபின் தாரம் ஏது? வீடு ஏது? அடிமையான பிறகு அவனுக்கென்று உடைமை என்று ஏதும் உண்டோ? என்று இந்தப் பெண்ணரசி பெண்ணுரிமைக்குரலில் கேட்கின்றார். மன்னர்கள் மகிழ்வெய்துதற்குச் சூதாடுகிறீர்கள் என்றாலும் மனுநீதி தவறி இங்கு நடக்கும் வலிய பாவந்தன்னை பார்த்துக்கொண்டு வாய்பேசாமல் இருப்பீரோ? தாத்தனே! இந்த நீதி சரிதானா? என்றான் விகர்ணன்.
இப்படி விகர்ணன் பேசியதைக் கேட்ட சில மன்னர்கள் எழுந்து அவன் பேச்சுக்கு ஆதரவாகக் கூச்சலிட்டனர். "சகுனி செய்யும் கொடுமை ஏற்கமுடியாது" என்றனர். ஒரு நாளும் உலகம் இந்தக் கொடுமையை மறக்காது என்றனர் சிலர். இப்படி அநியாயம் செய்தால் அழிந்து போவீர், ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டாம் என்றனர் சிலர். செவ்வானம் போல இரத்தம் பாய்ந்து போர்க்களத்தில் இந்தப் பழி தீரும் என்றனர் சிலர்.
விகர்ணன் எழுந்து பேசியதைக் கேட்ட கர்ணன் சொல்கிறான்:- "போதுமடா உன் பேச்சு, சிறியவனே, நாடாளும் மன்னர்கள் எவரும் இதில் தலையிட்டுப் பேசாமல் இருக்கும்போது நீ மட்டும் அதிகப்பிரசங்கம் செய்கிறாயே, விவேகமோ அறிவோ இல்லாதவனே! இவள் பெண் என்பதால் இவள் தூண்ட நீ பிதற்றுகின்றாய். நீபாட்டிலும் பேசிக்கொண்டே போகிறாயே! இவளை நாம் வென்றதால் பாவம் வரும் என்கிறாயே. வெட்கமோ அடக்கமோ இல்லாதவனே! கண்ணியத்தைக் காக்கத் தெரியவில்லையே. உனக்கு என்ன நீதி தெரியும்?"
"மார்பில் துணிபோட்டு மறைக்கும் உரிமை அடிமைப்பட்டவர்களுக்குக் கிடையாது. இவள் சிறந்தவளுமல்ல. ஐவருக்கு மனைவியாக இருந்தவள். யாரடா அங்கே பணியாள்! இங்கே வா! பாண்டவர் மார்பில் கிடக்கும் சீலையையும் களைவாய், இந்தப் பெண்ணின் சேலையையும் களைவாய்" என்றான் கர்ணன்.
இவ்வுரை கேட்டனர் பாண்டவர். வேலையாட்கள் வந்து எடுப்பதற்கு முன்பாக, முன்பு பகைவர் கண்டு அஞ்சும் தங்கள் மார்பினை மறைத்த வஸ்திரங்களைக் களைந்தனர். பெண்மான் போன்ற கண்களையுடைய ஞானசுந்தரி, பாஞ்சாலி 'என்ன நடக்குமோ' என்றே தயங்கினாள், தன்னிரு கரங்களைக் கோத்துக் கொண்டாள்.
துச்சாதனன் எழுந்து சென்று அன்னையின் சேலையைக் கழற்றலுற்றான். 'அச்சோ தேவர்களே!' என்று அலறிக்கொண்டு விதுரன் மயங்கி தரைமேல் சாய்ந்தான். பைத்தியம்பிடித்தவன் போல் அந்தப் பேயன் துச்சாதனன் சேலையை உரிகையில், மன ஆழத்தின் ஜோதியினுள் லயித்தாள், அன்னை இவ்வுலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 'ஹரி, ஹரி, ஹரி' என்றாள். 'கண்ணா! அபயம் உனக்கபயம் என்றாள். யானைக்கு அருள்புரிந்து அன்று முதலையிடமிருந்து அதனைக் காத்தாய். நீல வண்ணச் சியாமளனே! அன்று காளிங்கன் தலைமீது நடனம் புரிந்தாய்! ஆதிப் பரம்பொருள் நீயே! கண்ணா! பழம்பெரும் வேதப் பொருளே! சக்கரம் கையில் ஏந்தி நின்றாய், கண்ணா! சாரங்க மெனும் வில்லினைக் கையில் உடையாய்! அக்ஷரப் பொருளாவாய்! கண்ணா! அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய்! துக்கங்கள் அழித்திடுவாய், கண்ணா! தொண்டர் கண்ணீரைத் துடைத்திடுவாய். தக்கவர் தமைக் காப்பாய், அந்தச் சதுர்முக பிரம்மனைப் படைத்தாய். வானத்திற்குள் வானமாய், தீ, மண், நீர், காற்று என பஞ்ச பூதங்களாய் விளங்கிடுவாய். தவ முனிவர்தம் உள்ளங்களில் ஒளிர்பவனே, கானத்துப் பொய்கையிலே, தனிக் கமலமென் பூமிசை வீற்றிருக்கும் அந்தத் திருமகள் அவள் தாளிணைக் கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய். ஆதியில் ஆதியப்பா! கண்ணா, அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே, சோதிக்குச் சோதியப்பா, என்றன் சொல்லினைக் கேட்டு அருள் புரிவாய்.
வானவெளியினின் நடுவினிலே பறந்திடும் கருடனின் மேல் சோதிக்குள் ஊர்ந்திடும் கண்ணா, சுடர்ப்பொருளே, பேரருட் பொருளே, அன்று இரணியன் மகன் பிரகலாதனிடம் "கம்பத்தில் உள்ளானோ, அடா! காட்டு உன் கடவுளைத் தூணிடத்தே, வம்புசெயும் மூடா" என்று மகனிடம் உறுமிக்கொண்டு தூணை உதைத்தவனை அந்தத் தீயவல் இரணியனின் உடல் பிளந்தாய்! நம்பி, நின் அடி தொழுதேன், என்னை மானமழியாமல் காத்தருள்வாய் என்று பலவாறாக இறைவனைத் துதித்து அந்தப் பாஞ்சாலி மேலும் பேசுகிறாள்.
வையகம் காத்திடும் கண்ணா, மணி வண்ணா, என்றன் மனச்சுடரே, ஐய, நின் பதமலரே சரணம். ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்று அவனிடம் முறையிடுகிறாள். அப்போது .... பொய்யர்கள் அடையும் துயரத்தைப் போல், நல்ல புண்ணியர் தம் புகழினைப்போல், தையலர் தம் கருணையைப் போல், கடலில் விளையும் அலைகளைப் போல், பெண்மையைப் போற்றுவோர் செல்வம் பெருகுதல் போல், கண்ண பிரானின் அருளால், பாவி துச்சாதனன் கழற்றிடக் கழற்றிடத் துணி புதிது புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாய், அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே! எண்ணத்தில் அடங்காவே, அவை எத்தனை எத்தனை நிறத்தனவோ!
புதிதுபுதிதாகச் சேலைகள் கழற்றக் கழற்ற வந்துகொண்டே யிருக்க அந்த மாதரசி தலைக்கு மேலே கைகுவித்து ஹரி நாமத்தைச் சொல்லச் சொல்லத் துகிற்கூட்டம் பெருகப் பெருக, அந்தப் பாவி துச்சாதனன் சோர்ந்து வீழ்ந்து விட்டான். தேவர்கள் வானிலிருந்து பூச்சொரிந்தார். 'ஓம் ஜய ஜய பாரத சக்தி' என்றே ஆவலோடெழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமனும் கைதொழுதான். சாவடி மறவரெல்லாம் 'ஓம் சக்தி சக்தி சக்தி'யென்று கரங் குவித்தார். அரச நீதி பிழைத்த அரவக்கொடியுடையோன் தலை கவிழ்ந்தான்.
இவ்வளவையும் கண்டு கொண்டிருந்த பாண்டவரில், பீமன் எழுந்து சபதம் செய்கிறான். "இங்கு விண்ணவர் ஆணை, பராசக்தி ஆணை, தாமரைப் பூவினில் வந்தான், மறை வழங்கிய தேவனின் திருக்கழல் ஆணை, மாமகளைக் கொண்ட தேவன், எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் தாமரைப் பதத் தாணை, காமனைக் கண்ணழகாலே சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி மீதில் ஆணை, இங்கு இந்த சபதம் செய்வேன். இந்த ஆண்மையில்லா துரியோதனன் தன்னை, பெரும் தீயினையொத்த எங்கள் பெண்டு திரெளபதியைத் தன் தொடை மீது வெட்கமின்றி வந்து இரு என்றானை, இந்த நாய் மகனாம் துரியோதனன் தன்னை, பெருமையிழந்த மன்னர் கண் முன்னே என்றன் வலிமையினால் யுத்த அரங்கத்தின் கண், இவனது தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன்.
தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட அவனது தோள்களைப் பிய்ப்பேன். அங்கு கள்ளென ஊறும் இரத்தத்தைக் குடிப்பேன். இது நடைபெறும் காண்பீர் உலகீர்! இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, இது சாதனை செய்க பராசக்தி!" என்றான்.
பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். "இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மாய்ப்பேன். தீர்த்தன், பெரும்புகழ் விஷ்ணு, எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை! கார்த்தடங்கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும் காண்டிப வில்லினும் ஆணை! போர்த் தொழில் விந்தைகள் அனைத்தும் அந்தப் போதில் காண்பாய் - ஹே! பூதலமே!" என்று சபதமேற்றான்.
பாஞ்சாலன் மகள் தேவி திரெளபதி விரிந்த குழலோடு எழுந்தாள், வீர சபதம் ஏற்றாள்: "ஓம்! தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் செந்நீரும் அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் இவை மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் -- இது செய்யுமுன்னே முடியேன்" என்று உரை செய்தாள்.
ஓம், ஓம் என்று உரைத்தனர் தேவர். ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற் காற்று. சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பஞ்ச பூதங்களும். நாமும் கதையை முடித்தோம், இந்த நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க என்று மகாகவி பாஞ்சாலி சபதத்தை முடிக்கிறார்.
No comments:
Post a Comment