Search This Blog

Thursday, July 5, 2012

பாரதிதாசன்



முன்னுரை:
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிஞர்களுள் உயிரென்று சொன்ன முதற்கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இவரது தமிழுணர்வு அளப்பரியது.தமிழ் தழைக்கவும், தமிழர் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும் பாடியவருள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞர் இவரே. இவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும், பற்றும்:
 பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில்(புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால்புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
கல்வி:
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக்கினார்.
கவிதைத்திறன்:
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
பாரதியாரிடம் அறிமுகம்:

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
பெரியாரிடம் பற்று:
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
அரசியல் பிரவேசம்:
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
விருது:
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால்1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
மறைவு:
கவிஞர் 21.4.1964ல் இயற்கை மரணம் எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகள்:

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் நூல்கள்:
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
அழகின் சிரிப்பு
தமிழ் இயக்கம்
இசையமுது.



No comments:

Post a Comment

Translate