இன்பத் தமிழ்
|
தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ! தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் ! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் ! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் ! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் ! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ |
எங்கள் தமிழ்
|
இனிமைத் தமிழ்மொழி எமது -- எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு -- எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை -- எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனி்யுண்டு நனியுண்டு காதல் -- தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில் (இனிமைத்) தமிழ் எங்கள் உயிர் என்பதாலே -- வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -- இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு! (இனிமைத்) |
தமிழ் வளர்ச்சி
|
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை. தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! |
சங்க நாதம்
|
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊதூது சங்கே! பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள். கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்) |
புதிய உலகு செய்வாம்
|
புதியதோர் உலகம் செய்வோம் -- கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய) பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம். (புதிய) இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் 'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய) உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் 'ஒருபொருள் தனி,எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய) இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய) |
ஒழுக்கம்
நல்லொழுக்கம் ஒன்றே -- பெண்ணே நல்ல நிலை சேர்க்கும் புல் ஒழுக்கம் தீமை -- பெண்ணே பொய் உரைத்தல் தீமை! இல் லறமே பெண்ணே -- இங்கு நல் லறமென் பார்கள் கல்யுவிடை யோரே -- பெண்ணே கண்ணுடைய ராவார். நன்றி மறவாதே -- பெண்ணே நற்பொறுமை வேண்டும் இன்சொல் இனிதாகும் -- பெண்ணே இன்னல் செய்ய வேண்டாம் உன்னருமை நாட்டின் -- பெண்ணே உண்மை நிலை காண்பாய். இந்நிலத்தின் தொண்டில் -- நீ ஈடுபட வேண்டும்; பத்துடனே மூன்று -- நீ் பகுத்தறிவைப் போற்று! நத்தியிரு பெண்ணே -- நீ நல்ல வரை என்றும்! சொத்து வரும் என்று -- நீ தோது தவறாதே. முத்து வரும் என்று -- நீ முறை தவற வேண்டாம். கனியத் தமிழ் பாடு -- பெண்ணே கச்சேரி செய்யாதே. சினிமாவிற் சேர்ந்து -- நீ தீமை யடையாதே! தனித்து வரும்போது -- கெட்ட தறுதலை கண் வைத்தால், இனிக்க நலம் கூறு --பெண்ணே இல்லாவிடில் தாக்கு. இருபதுடன் ஒன்றே -- பெண்ணே இத்திரா விடத்தில். அரிசிமட்டும் இல்லை -- பெண்ணே ஆட்சி மட்டும் உண்டு. இரிசன் மகன் முத்தை -- பெண்ணே ."இந்தி படி" என்றான். |
கல்வி
|
கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும் |
கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம் கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை! கற்பதுவேஉன் முதற் கடமை |
இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய் இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்? இப்பொழுதே உண் இனித்திடும் தேன் |
No comments:
Post a Comment