Search This Blog

Wednesday, February 6, 2013

இசையின் வடிவங்கள்
முன்னுரை:
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும் பரிணமித்தது.
ஸ்லோகன்:
இசை வடிவங்களில் முதலாவதாக ஸ்லோகன், அதாவது சுருதி ஸுக்தி மாலா என்பதைப் பற்றி நாம் இப்பொழுது காணலாம். இவை நான்மறை வேதங்களின் உண்மைப் பொருளை அறியாதவர்களுக்கும், அவரவர்களில் மதம் கொள்கை, கருத்துகளை சொல்பவர்களுக்கும், முழுமுதற்கடவுள் பரமனே என்ற உண்மைத் தத்துவத்தை உணர்த்த எழுந்ததே ஸ்லோகன்

பஜன் :
               இசையின் அடுத்த வடிவமாக எழுந்ததே  ‘பஜன்’ என்று சொல்லப்படும் பக்தி. யோக மகரிஷிகள் கடவுள் மேல் உள்ள பக்தியின் காரணமாக உச்சரித்த மந்திரத்தை மாந்தரும் உச்சரிக்கும் வகையில் இசையுடன் எழுந்த கூட்டு வழிபாட்டுப் பாடலே பஜன்.
இசையின் வடிவத்தில் ஏற்பட்ட ஒரு மாபெரும் புரட்சியே ‘கும்மி’ மற்றும் ‘கோலாட்டம்’ . பார்ப்பான் முதல் பாமரர் வரை கடவுளை வழிபட பயன்படும் இசைவடிவங்களே இவைகள்.  முதலாவதாக கும்மி
கும்மி:
               தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை, பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம், பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து.
கோலாட்டம் :
               கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. வட மாநிலங்களில் இது "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.


கிராமிய இசை :
               கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். பட்டிதொட்டி முழுவதும் அன்று முதல் இன்று வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் கவின்மிகு இசை வடிவமே கிராமிய இசை. இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.
இதுகாறும் கூறியவற்றுள் மேற்குறிப்பிட்ட அனைத்து இசை வடிவங்களுக்கும் இனி வரும் காலங்களில் இருக்கின்ற, இருக்கும் இசைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், தாயாகவும், தமிழ் இசையாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் ஒரே இசை வடிவம் கருநாடக இசை.
கருநாடக இசை :
               கருநாடக இசை  தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான சைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
முடிவுரை:
               உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன்னே இசை பிறந்து விட்டது. 50000 வ‌ருட‌ ப‌ழ‌மை வாய்ந்த "க‌ற்கால‌ புல்லாங்குழ‌ல்"  சான்றாக திகழ்கிறது. மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இசையே கருவியாயிற்று, இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. எனவே இசையை இசைந்து கேளுங்கள் வாழ்வை இனிமையாக்குங்கள்.No comments:

Post a Comment

Translate