Search This Blog

Tuesday, August 25, 2015

எனது அருண்




வாழ்த்து மடல் – எனது அருண்
யார் யாருக்கோ எழுத முனைந்த எனது எழுதுகோல்
இன்று உனக்கு எழுத முரண்டு பிடிக்கிறது. …….
ஏனென்று எழுதுகோலிடமேக் கேட்டேன்…
என் எண்ணத்தைக் குவித்து
குறுகுறு விழியில் திருதிருவென..
திருமகள் தவமிருப்பதைப்போல்………..
அப்பொழுது எழுதுகோல், மகளே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
நினைக்கிறாயே…
..அதனால்தான் நான் நிற்கதியாய் நிற்கிறேன் என்று ….
அப்படிப்பட்டவள் யானோ? என வினவ,
ஆம் மகளே,
       அன்னமானது நீரை நீக்கிப் பாலைப் பருகுவதுபோல
       ஆகாய கங்கையோ தனக்கு மிஞ்சிய தானமளிப்பதுபோல
       இறைவனின் திருவடி நிழலில் உலவும் அடியார்கள்போல
       ஈன்றவளுக்கு தரம் பிரித்துப் பார்க்கத் தெரியாத தங்கம் போல
       உலக இரட்சகனின் உயர்வு நெறியைப்போல
       ஊமத்தம் பூவின் நிறத்தை ஒத்த மனம் போல
       எள்ளளவும் அன்பு குறையாத தாய்மையின்  தூளிபோல
       ஏழேழு பிறவிகளிலும் உடனிருக்கத் துடிக்கும் குகனைப்போல
      ஐராவதச் சிற்பம் போன்று உனது அகம் நிழலாட
      ஒன்றிற்கு ஒன்று விட்டுக்கொடுக்கும் கண்விழிபோல
      ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உனது அன்பை
      ஔவியம் பேசி மறைக்கின்றாயே –
     ஏன் இந்த புற விளையாட்டு….
அகத்தில் அலர்ந்தவனை ஏன் அகற்ற நினைக்கிறாய்….
மனம் ஏன் தவிக்கிறது… மன்றலாடுகிறது…
மண நாளை மன மகிழ்வுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கும் மகனை
மனதளவிலே வைத்து மக்கடிக்காதே, மலரச் செய்….
மணநாளுக்கு மங்களம் கூறு…
அவனது வாழ்வு இனியாவது மகிழ்வோடு மலர வாழ்த்துக் கூறு..
வயதொன்றும் தடையில்லையே, தயை கூற..தலைவனைப் போற்ற-ஆதலால்
தண்டமிழ் சொல்லெடுத்து தலை நிமிர்ந்து எனது அருண் என்று எழுதுகோலைப் பிடி
,பிம்பம் போல் உன் பின்னால் அவனது நினைவலைகள்
ஓடி வரும்……
ஆம்! இது எத்தகு உண்மை….அத்தனையும் தக்க வைத்திருக்கும் தாரக மங்கையல்லவோ யான்……
யான் என்ற விழித்தலுடன் எனது அருணின் நினைவலைகளை ஓடவிட்டேன்… இதோ,
இன்றளவுமின்றி என்றளவும் என் எம்பியென
உரைக்கக் கூறும் என் அருணுக்கு
வைரக்கல் கொண்டு வரிகள் தீட்டவா !
வண்ணப்பொடிகள் கொண்டு வார்த்தை ஓவியம் வரையவா!
வில்லெடுத்து சொல் தொடுக்கவா!
விசாலப் பார்வையினால் பிம்பம் பிரதிபலிக்கவா!
எதனைக் கொண்டு நான் கவிதை தீட்டினாலும்
என் கவிதை உன் அன்புக்கு முன் அடிமை……………
என்னைப் புரிந்தவன், புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றவன்
புவியினில் புத்தம் புது மலராய் தினம் மலர்பவன்
பொய்யுரை இல்லா புகழ்மான்
போலியான அகம் கொண்டு அலையான்
அடுத்தவரின் அகத்தை அலசுபவன் – ஆனால்
ஆராய்ச்சியின்றி அன்பைப் பொழிபவன்
அறிமுகமில்லா அழகன் நீ – எனக்கு
ஆனந்தத்தை மட்டுமே அருளியவன்
வாய்ஜாலத்தால் என்னை வருத்தியவர்கள் முன்
வணங்கா முடியாய் திளைக்க வைத்தவன் நீ
என்னை விட்டுச் சென்ற அன்பை இணைக்க
அயராது ஆழ்ந்து சிந்தித்தவன் நீ
அக்காதல் மன்னனுக்கு இன்று மணநாள்
மனதிற்கினிய மங்கையை மணக்கும் மணநாள்
மனமொன்றி வாழ்த்து கூற விழைகிறேன்
மத்தாப்புச் சிரிப்போடு மனையாட்டியோடு வாழ வழிபடுகிறேன்.
வாழ்த்து ஒன்றே வாழ்வின் நிரந்தரம், நிதர்சனம் என்பதால்
வழிமொழிகிறேன் வாழ்வாங்கு வாழ … வாழ்ந்தோர் வகைமொழிக்கிணங்க
வாழ்க பல்லாண்டு ! தமிழ் இருக்கும் வரை தமிழ் மகன் நீ வாழ்க!
இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பதற்கிணங்க
உடல் வேறு என்ற சிந்தனையை விடுத்து உயிர் ஒன்றென
உணர்வால் உணர்ந்து உருவாய் அருவாய்
வாழ்வில் ஆறுமுகனின் ஆயுட்காலத்தைப் பெற்று
ஆண்டாண்டு பேரும் புகழும் பெற்று
பெரு வாழ்வு வாழ வாழ்த்தும் உனது இரத்த பந்தம் இல்லா அக்கா…….
-     கலா கலைச்செல்வன்





     

No comments:

Post a Comment

Translate