Search This Blog

Tuesday, May 1, 2018

மே தினம் -2018


மே தினம் பூத்தது!!!!!!


பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

மேதினில் மேன்மை பெற்ற

மேன் மக்களின் மேனி தழுவ

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது.

உழைப்பவர் உறுதி கொள்ள

உரைக்கச் சொல்லி உவகை கொள்ள

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

ஏழை எளியோன் முதலாளி தொழிலாளி

ஒன்றென முழங்க உழைப்பை உணர்த்த

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது.

ஏர் பிடிப்பவனின் எழுச்சியையும்

ஏவுகனையின் வளர்ச்சியையும்

வறுமை,வலியை,பசியை மறந்து

வாஞ்சையோடு போற்றித் தொழ

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

ஓயாமல் உழைக்கும் வர்க்கம்

உரு அறியா உயிர்களுக்கும்

வசிக்கும் வீடு புசிக்கும் உணவு

வகையறியா உழைப்பைத் தந்து

வலியிழந்த யானைக் கூட்டம்போல்

துன்பத்திலும் இன்பம் தரும்

தருமரங்களின் மகத்துவத்தைப் போற்ற

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது.

கல்வி செல்வம் வீரத்தை

கருணை கடமை கண்ணியத்துடன்

கரை சேர்த்த சான்றோருக்கும்

கன்னித் தமிழைத் தரணியில்

நிலைக்கச் செய்த  நிலவொளிகள்

நிலமகளின் உரிமையுற்றோரை

உரிமையோடு உலகு கொள்ள

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

மேனி துலங்க மேதினி விளங்க

வியத்தகு விந்தைகள் செய்த

விஞ்ஞானிகளின் வியத்தகு சாதனையை

விண்ணிலிருந்து மண்ணில் விளைக்க

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

பெரியோன் சிறியோன் உயர்ந்தோன் தாழ்ந்தோன்

படைப்பாளி பாட்டாளி பரதன் பார்ப்பன்

வேறுபாட்டைக் களைய வித்தியாசம் போக்க

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

முத்தான வியர்வைகள் முழு நிலவாய் ஒளிர

முழுமுதற் கடவுள் முகஸ்துதி பாட

முடிவிலா முடியரசனை

முத்தமிட்டு வரவேற்க

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது.

மனித குலத்தை வாழ்விக்க

மண்ணின் நேயத்தை நேசிக்க

மண்ணின் தன்மை கெடாமல் உழைக்கும்

உயிர்வாசிகளை உலகில் உணர்த்த

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது.

எத்துறையாயினும் ஏழ்கடல் தாண்டி உழைப்பினும்

புலம் பெயர்ந்த பெருமக்கள்

புண்ணிய பூமியை மறக்காது

மலரும் மாலையாய் மணியாய் முத்தாய்

மரகதமாய் மாறாக் காதலாய்

முப்பாலாய் வளம் வரும்

முத்தாய்ப்புத் தமிழை வளர்க்கும்

வாழ்வரசர்களை வாழ்த்த

பூத்தது பூத்தது மே தினம் பூத்தது

பூக்கும் பூக்களைப் புனிதமாக்குவோம்

பொன்னாள் நன்னாள் இன்றென

என் மனம் பாடுது பாடுது

மே தினம் பூத்ததென்று.....பூத்ததென்று.....

சித்ரகலா கலைச்செல்வன்

No comments:

Post a Comment

Translate