Search This Blog

Sunday, October 31, 2010

எந்த வகை நீங்கள்???????

நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர் பொதுப்பாயிரத்தில் கூறும்
                                    மாணாக்கரின் வகை.

          தலை மாணாக்கர்           (எ.கா)அன்னம், பசு


          இடை மாணாக்கர்           (எ.கா)மண், கிளி
                    
                
          கடை மாணாக்கர்           (எ.கா)இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யரி

தலை மாணாக்கர்-
                        அன்னமானது, பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை நீக்கி பாலை மட்டும் பருகும் இயல்புடையது. அது போல் தலை மாணாக்கர் குணத்தையும், குற்றத்தையும் வேறுபிரித்துக் குணத்தை மட்டுமே கொள்வர்.
                        பசு, மிகுந்த புல் உள்ள இடத்தை கண்டால் வயிறு நிறைய மேய்ந்து பின் ஓரிடத்தில் தங்கிச் சிறிது சிறிதாக வாய்க்குள் கொண்டு வந்து மென்று தின்னும். அது போல் தலை மாணாக்கர் ஆசிரியரைக் கண்டால் தன் உள்ளம் நிறையக் கேட்டு பின் ஓரிடத்தில் தங்கிச் சிறிது சிறிதாக நினைவுக் கொண்டு வந்து சிந்திப்பர்.
                      

இடை மாணாக்கர்-
                       மண், உழவர் வருந்திப் பயிர்செய்யும் முயற்சியின் அளவிற்கு ஏற்ப விளைவைக் கொடுக்கும், அதுபோல் இடை மாணாக்கர் ஆசிரியர் வருந்திக் கற்பிக்கும் முயற்சியின் அளவிற்கு ஏற்ப கல்வியறிவு பெறுவர்.
                       கிளி, தனக்கு கற்பித்த சொல்லையே சொல்லும். அது போல் இடை மாணாக்கர் ஆசிரியர் கற்பித்த கருத்துக்களையே திருப்பிச் சொல்வர்.


கடை மாணாக்கர்-
                       இல்லிக்குடம், நீரை ஊற்றுந்தோறும் ஒழுகவிட்டுவிடும். அது போல் கடை மாணாக்கர் நூற்பொருளைக் கற்பிக்குந்தோறும் மறந்து விடுவர்.
                       ஆடு, ஒரு செடியில் தழை நிறைந்திருந்தாலும் அங்கு மேயாது பல செடிகளுக்கும் சென்று மேயும். அது போல் கடை மாணாக்கர், ஓராசிரியரிடம் மிகுந்த கல்வி இருந்தாலும் அங்கு நிறைய கற்காமல் பலரிடமும் சென்று கற்பர்.
                       எருமை, குளத்து நீரை கலக்கிக் குடிக்கும், அது போல் கடை மாணாக்கர் ஆசிரியரை வருத்திப் பாடம் கேட்பர்.
                      நெய்யரி, தன்னிடம் வார்க்கப்படும் தேன் முதலியவற்றைக் கீழே விட்டுவிட்டு அழுக்கு முதலியவற்றைத் தன்னிடம் தேக்கிக் கொள்ளும். அது போல் கடை மாணாக்கர் தமக்கு கற்பிக்கப்படும் நற் கருத்துக்களை மறந்துவிட்டுத் தீய கருத்துக்களையே சிந்தித்துப் பற்றிக் கொள்வர்.

[பொருள்- அன்னம்-அன்னப்பறவை , தலை மாணாக்கர்-முதல் மாணாக்கர்,  இல்லிக்குடம்-ஓட்டைக்குடம், தழை-இலை, நெய்யரி-வடிகட்டி]

மாணவர்களே நீங்கள் இதில் எந்த வகை மாணாக்கர் ???
எப்படிப் பட்ட மாணாக்கராக இருக்க ஆசைப்படுகிறீர்கள் ???
              சிந்தியுங்கள்                       செயல்படுங்கள்
          உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்............................

No comments:

Post a Comment

Translate