Search This Blog

Friday, October 19, 2012

கும்மிப் பாடல்


ன்னனனானினம் தன்னானம் 
தன தான தன்னினம் தன்னானம் (2)
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
உடல் வளைந்து  நெளிந்துக் கும்மியடி
நாம் பயிலும் பள்ளியை வாழ்த்திப் பாடி
தலை வணங்கி நிமிர்ந்து கும்மியடி ( தன்ன)
நம் பள்ளியின் மேலாண்மைக் குழுவை
வாழ்த்தி வணங்கிக் கும்மியடி
அழகுற அமைந்த ஆசிரியர் அணியை
ஆடிப் பாடி கும்மியடி
ஆசிரியர் பணியே உயர்ந்தது என்று
உறுமிக் கொட்டிக் கும்மியடி
மாணவன் என்போன் மாண்புடையோன்அவன்
மங்கா ஜோதியாய் ஒளிர்பவன்-இத்தகைய
மாணவ மணிகளை மணியாய் உருவாக்கும்
மதிப்பு மிக்கப் பள்ளியை………………….
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
மணல் தெரிக்கத் தெரிக்கக் கும்மியடி….
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற
கோட்பாட்டை உணர்த்தும் பள்ளியை
அசைந்து அசைந்து கும்மியடி---- நல்ல
அழகுத் தேராய் கும்மியடி

கல்வி சிறந்த தமிழ்நாடு
கல்வித் தரத்தில் சிறந்த நம் பள்ளியை
பயின்று பணிந்து கும்மியடி---பட்டு
பதம் வைத்து வைத்துக் கும்மியடி
ஒழுக்கம் என்னும் கோட்பாட்டை
உயர் குடியாய்க் கொண்ட நம் பள்ளியை
கோலெடுத்துக் கும்மியடி
நல்ல குலவை இட்டுக் கும்மியடி
வள்ளுவன் தந்த குறளினைப் போற்றி
வாழும் நம் தமிழ்நாடு --- இவ்
வள்ளுவன் பெயரில் மன்றம் வைத்தஇப்பள்ளியை
வளை குலுங்கக் குலுங்கக் கும்மியடி
விளையாட்டுத் துறையில் மேம்பட்டும்- பல
வீர்ர்களை உருவாக்கும் இப்பள்ளியை
மேனி குலுங்கக் கும்மியடி—மனம்
குளிரக் குளிரக் கும்மியடி
கலை வளர்க்கும் பள்ளிக்கூடம் – நல்ல
கருணை நிறைந்த பள்ளிக்கூடம்
கந்தனருள் பெற்ற பள்ளிக்கூடம் – நம்
கலைமகள் வாழும் பள்ளிக்கூடம்
மெய்யப்பன் பெயரில் அமைந்த பள்ளிக்கூடம் – பற்பல
மெஞ்ஞானம் வளர்க்கும் பள்ளிக்கூடம்
மேக வண்ணக் கூந்தலாட
கோல் சுழட்டிச் சுழட்டிக் கும்மியடி(தன்ன)
   

தித்திக்கும் தீபாவளியே


தித்திக்கும் தீபாவளியே

தீ + ஆவளியே…………….

தீங்கினை அழித்த தீபாவளியே

திகட்டாத திண்பண்டங்கள்

தீம் தீம் என்ற தீப ஒளியே………….

திருமேரு மலையின்  தீப ஒளியே

தில்லைப் பெருமானின் தீப ஒளியே………

மன இருளை அகற்றும் தீப ஒளியே

மங்காப் புகழே – என் தீப ஒளியே………

அகந்தையை ஒழிக்க வந்த தீப ஒளியே

ஆனந்தத்தை அள்ளித் தந்த தீப ஒளியே………
..
இன்னல்களைக் களைந்த தீப ஒளியே

இணையிலா………  தீப ஒளியே- நீ

ஈகையின் இலக்கணம் தீப ஒளியே

ஈடில்லா ஈசனின் தீப ஒளியே

ஈசனின் மைத்துனனாய் நின்ற தீப ஒளியே

சூரனை அழித்த தீப ஒளியே

உற்றோரும் மற்றோரும் மகிழ்ந்த தீப ஒளியே

உன்னத நிலை கொடுத்த தீப ஒளியே

எம்பெருமான் உருவில் வந்த தீப ஒளியே

ஏழ்கடல் தாண்டி வந்த தீப ஒளியே

யன் என் கண்ணனாய் வந்த தீப ஒளியே

ற்றுமையை வளர்க்க வந்த தீப ஒளியே

ஓம்காரனின் தீப ஒளியே………………………………

Thursday, October 18, 2012

பொங்கல்


பொங்கலும் வந்தது ;
புது வழியும் பிறந்தது
தைத்திங்களும் வந்தது;
தரணியெல்லாம் செழித்தது
பழையன கழிந்தது;
புதியன பிறந்தது
மஞ்சளும் வந்தது;
மனமகிழ்வைத் தந்தது
உழவனின் வியர்வைக்கு
உயர்வு வந்து சேர்ந்தது
கதிரவனின் கருணைக்கு
கன்னல்களும் கனிந்தது
முழுமதி நிலவோடு
முக்கனியும் முதிர்ந்தது
இனியப் பல கன்னல்களும்
இல்லத்தில் இணைந்தது
புத்தம் புது வரவுகளும்
புதுப்பானையில் பொழிந்தது
அழகுடைய பெண்களும்
ஆடிப் பாட வந்தது.
வாசலிலே கோலமிட ;
வண்ண விளக்காய் வந்தது
மாவிலைத்தோரணம் கட்ட
மகிழம் பூவாய் மலர்ந்தது
கதிரொளி  கண்ணனுக்கு
நன்றி சொல்லி நவின்றது
திருக்குறளைத் தந்த வள்ளுவனுக்கு
திருக்கோலம்  காண வந்தது
உற்றார் உறவினர் களிப்படைய
உருவொளியாப் பிறந்தது
சிறார்கள் சிறப்படைய ;
சிறப்புடனேப் பிறந்தது
சகோதர சகோதரிகளுக்கு ;
சீர் கொடுக்கப் பிறந்தது
உழைத்த கால் நடைகளுக்குப்
பூசை செய்யப் பூத்தது
புள்ளினங்கள் சப்தமிட
; புரட்சியுடன் பிறந்தது
புத்தாடை தரிக்க;
புதுப்பென்ணாய்ப் பிறந்தது
பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்ப
பொங்கி எழுந்து வந்தது
போகி, தை, மாட்டு, காணு பொங்கலெனப்
பல்வித பரிமாணத்தில் பிறந்தது
புத்துணர்வைத் தந்தது;
புதுவாழ்வும் தந்தது
எங்கள் வீட்டில் சேர்ந்தது;
என்றும் வாசம் சேர்த்தது.



Wednesday, October 17, 2012

சிற்பக்கலை

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்த்து சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.
கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.

வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.
தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.


தமிழ் நாடக முன்னோடிகள்

 தற்கால நாடக முன்னோடிகள்
     19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடக உள்ளடக்கத்தில் ஒரு     மாற்றம் ஏற்பட்டது. புராணக்     கதைகளையும் பழங்கதைகளையும்     விட்டுத் தற்காலக் கதையொன்றை நாடகமாக்கும் முயற்சி தோன்றியது.
 காசி விசுவநாத முதலியார்
காசி விசுவநாத முதலியார் (1872) முதன்முதலில் தம் காலச் சமூக நிகழ்வை நாடகமாக்கினார். அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு உண்மையான டம்பாச்சாரியின் வாழ்க்கையைத் தழுவி ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகம் ஆக்கப்பட்டது. ஆயினும் இசை நாடகமாகவே அது படைக்கப்பட்டது. அங்கம், களம் என்ற பகுப்புகளின்றி ஒரே மூச்சாகக் கதை சொல்லப்பட்டது. அக்கால மரபுப்படி கட்டியங்காரன் கதை நிகழ்த்துவது போலவும் அமைக்கப்பட்டது. இந்த நாடகத்தின் கதை, கண்ணகி கதை போன்றது. விறலிவிடுதூதுவிலும் இத்தகைய கதை உண்டு. செல்வந்தன் ஒருவன் தாசியுடன் கொள்ளும் உறவால் தன் மதிப்பை இழந்து பின் மனம் திருந்தி நல்வழிப்படுவதாகக் கதை அமைந்துள்ளது.
 ராமசாமி ராஜு
     இதே கதையமைப்பில் ராமசாமி ராஜு என்பவர் ‘பிரதாப சந்திர விலாசம்’ என்ற நாடகத்தை எழுதினார். ஆனால் காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டது. முதல் காட்சியில் மட்டும் கட்டியங்காரன் வருவான். டம்பாச்சாரி விலாசம் போல இசை நாடகமாக இல்லாமல் இசையும் வசனமும் கலந்து     இந்நாடகம் படைக்கப்பட்டது. இதில் நாடகப் பாத்திரங்கள்,     தெலுங்கர்களானால்     தெலுங்கிலும் வடநாட்டவரானால் உருதுவிலும் மற்றவர் அவரவர் படிப்பு சாதி சமூகப்படிநிலை இவற்றிற்கேற்பப் பேசும் வேறுபட்ட பாணிகளில் வசனம் எழுதப்பட்டிருக்கிறது.
     இசை     நாடக மரபின் இறுதியாக டம்பாச்சாரி விலாசத்தையும் வசன நாடகங்களின் தொடக்கமாகப் பிரதாப சந்திர விலாசத்தையும் கொள்ள வேண்டும். காசி விசுவநாதன், அரசு அதிகாரியாக இருந்தவர். ராமசாமி ராஜு , பாரிஸ்டராக இருந்தவர். இவர்களுடைய முயற்சி, படித்துப் பல்வேறு வேலைகளில் இருந்தவர்களை நாடகம் எழுதத்தூண்டியது எனலாம்.
 பார்சி நாடகத்தாக்கம்
     1870 இல் தமிழகத்திற்கு வந்த பார்சி நாடகக்குழு ஏற்படுத்திய மாற்றமும் குறிப்பிடத்தக்கது. மேடை நாடக மரபில் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பார்சி இனத்தைச் சார்ந்த வணிகர்கள், ஆங்கில நாடக அரங்கிலிருந்து பெற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயருக்காகவும் மத்தியதர வர்க்கத்துப் படித்த இந்தியர்களுக்காகவும் நாடகங்களை நடத்தினர். பம்மலாரின் வழிகாட்டி என்று சொல்லப்படும் தஞ்சை கோவிந்தசாமி ராவ், அரசு வேலையை உதறிவிட்டுப் பார்சி நாடக, பாணியில் நாடகங்களை நடத்தத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ‘சுகுன விலாச சபை’ போன்ற பயில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின.
 சங்கரதாஸ் சுவாமிகள்
    தமிழ் நாடக மரபைப் பின்பற்றியும் கால மாற்றங்களை ஏற்றும் நாடகம் படைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள்வாங்கி இவர் நாடகங்களைப் படைத்தார். பழங்கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து இவர் நாடகங்களை ஆக்கினார். சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின.
     ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் தன்மையிலிருந்து ஆட்டத்தின் ஆதிக்கத்தை நீக்கி மேடையில் நடத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள். கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை இவர் படைத்தார். நடிகர்கள் விருப்பம் போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார். பழைய இலக்கிய வரிகளையும் வசனத்தில் பயன்படுத்தினார்; நல்ல அறிவுரைகளை வழங்கினார். ஆனாலும் இவரது நாடகங்களிலும் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது. இவர் பல புராண நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 1914 இல் இவர் தோற்றுவித்த சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கினார். தமிழகத்தில் இருந்த பல நாடக நடிகர்கள் இவரது நாடக வசனங்களையே பேசி வந்ததால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நாடகத்தில் நடிக்க முடிந்தது. இவருடைய நாடகங்கள் இன்று அச்சில் கிடைக்கின்றன.
 பம்மல் சம்பந்த முதலியார்
     பம்மல் சம்பந்த முதலியார் அரங்க அமைப்பிலும் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். நம்ப முடியாத நிகழ்ச்சிகளை நீக்கி நாடகங்களைப் படைத்தார். இவரால், பேசும் மரபு சார்ந்து இயல்பான வழக்குமொழி நாடகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒழுங்கு, நேரக் கட்டுப்பாடு முதலானவற்றை இவர் வலியுறுத்தினார். 1891 இல் சுகுண விலாச சபை என்னும் பயில்முறை நாடகக் குழுவை இவர் உருவாக்கினார்.

Translate