Search This Blog

Wednesday, October 17, 2012

தமிழ் நாடக முன்னோடிகள்

 தற்கால நாடக முன்னோடிகள்
     19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடக உள்ளடக்கத்தில் ஒரு     மாற்றம் ஏற்பட்டது. புராணக்     கதைகளையும் பழங்கதைகளையும்     விட்டுத் தற்காலக் கதையொன்றை நாடகமாக்கும் முயற்சி தோன்றியது.
 காசி விசுவநாத முதலியார்
காசி விசுவநாத முதலியார் (1872) முதன்முதலில் தம் காலச் சமூக நிகழ்வை நாடகமாக்கினார். அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு உண்மையான டம்பாச்சாரியின் வாழ்க்கையைத் தழுவி ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகம் ஆக்கப்பட்டது. ஆயினும் இசை நாடகமாகவே அது படைக்கப்பட்டது. அங்கம், களம் என்ற பகுப்புகளின்றி ஒரே மூச்சாகக் கதை சொல்லப்பட்டது. அக்கால மரபுப்படி கட்டியங்காரன் கதை நிகழ்த்துவது போலவும் அமைக்கப்பட்டது. இந்த நாடகத்தின் கதை, கண்ணகி கதை போன்றது. விறலிவிடுதூதுவிலும் இத்தகைய கதை உண்டு. செல்வந்தன் ஒருவன் தாசியுடன் கொள்ளும் உறவால் தன் மதிப்பை இழந்து பின் மனம் திருந்தி நல்வழிப்படுவதாகக் கதை அமைந்துள்ளது.
 ராமசாமி ராஜு
     இதே கதையமைப்பில் ராமசாமி ராஜு என்பவர் ‘பிரதாப சந்திர விலாசம்’ என்ற நாடகத்தை எழுதினார். ஆனால் காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டது. முதல் காட்சியில் மட்டும் கட்டியங்காரன் வருவான். டம்பாச்சாரி விலாசம் போல இசை நாடகமாக இல்லாமல் இசையும் வசனமும் கலந்து     இந்நாடகம் படைக்கப்பட்டது. இதில் நாடகப் பாத்திரங்கள்,     தெலுங்கர்களானால்     தெலுங்கிலும் வடநாட்டவரானால் உருதுவிலும் மற்றவர் அவரவர் படிப்பு சாதி சமூகப்படிநிலை இவற்றிற்கேற்பப் பேசும் வேறுபட்ட பாணிகளில் வசனம் எழுதப்பட்டிருக்கிறது.
     இசை     நாடக மரபின் இறுதியாக டம்பாச்சாரி விலாசத்தையும் வசன நாடகங்களின் தொடக்கமாகப் பிரதாப சந்திர விலாசத்தையும் கொள்ள வேண்டும். காசி விசுவநாதன், அரசு அதிகாரியாக இருந்தவர். ராமசாமி ராஜு , பாரிஸ்டராக இருந்தவர். இவர்களுடைய முயற்சி, படித்துப் பல்வேறு வேலைகளில் இருந்தவர்களை நாடகம் எழுதத்தூண்டியது எனலாம்.
 பார்சி நாடகத்தாக்கம்
     1870 இல் தமிழகத்திற்கு வந்த பார்சி நாடகக்குழு ஏற்படுத்திய மாற்றமும் குறிப்பிடத்தக்கது. மேடை நாடக மரபில் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பார்சி இனத்தைச் சார்ந்த வணிகர்கள், ஆங்கில நாடக அரங்கிலிருந்து பெற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயருக்காகவும் மத்தியதர வர்க்கத்துப் படித்த இந்தியர்களுக்காகவும் நாடகங்களை நடத்தினர். பம்மலாரின் வழிகாட்டி என்று சொல்லப்படும் தஞ்சை கோவிந்தசாமி ராவ், அரசு வேலையை உதறிவிட்டுப் பார்சி நாடக, பாணியில் நாடகங்களை நடத்தத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து ‘சுகுன விலாச சபை’ போன்ற பயில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின.
 சங்கரதாஸ் சுவாமிகள்
    தமிழ் நாடக மரபைப் பின்பற்றியும் கால மாற்றங்களை ஏற்றும் நாடகம் படைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள்வாங்கி இவர் நாடகங்களைப் படைத்தார். பழங்கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து இவர் நாடகங்களை ஆக்கினார். சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல குழுக்கள் உருவாயின.
     ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் தன்மையிலிருந்து ஆட்டத்தின் ஆதிக்கத்தை நீக்கி மேடையில் நடத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள். கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை இவர் படைத்தார். நடிகர்கள் விருப்பம் போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார். பழைய இலக்கிய வரிகளையும் வசனத்தில் பயன்படுத்தினார்; நல்ல அறிவுரைகளை வழங்கினார். ஆனாலும் இவரது நாடகங்களிலும் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது. இவர் பல புராண நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 1914 இல் இவர் தோற்றுவித்த சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கினார். தமிழகத்தில் இருந்த பல நாடக நடிகர்கள் இவரது நாடக வசனங்களையே பேசி வந்ததால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நாடகத்தில் நடிக்க முடிந்தது. இவருடைய நாடகங்கள் இன்று அச்சில் கிடைக்கின்றன.
 பம்மல் சம்பந்த முதலியார்
     பம்மல் சம்பந்த முதலியார் அரங்க அமைப்பிலும் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். நம்ப முடியாத நிகழ்ச்சிகளை நீக்கி நாடகங்களைப் படைத்தார். இவரால், பேசும் மரபு சார்ந்து இயல்பான வழக்குமொழி நாடகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒழுங்கு, நேரக் கட்டுப்பாடு முதலானவற்றை இவர் வலியுறுத்தினார். 1891 இல் சுகுண விலாச சபை என்னும் பயில்முறை நாடகக் குழுவை இவர் உருவாக்கினார்.
பயில்முறை நாடகக் குழு என்பதால் பல பணிகளில் உள்ளவர்களைக் கொண்டு நாடகங்களை நடத்தினார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் அச்சாகி நூல்களாக வெளிவந்துள்ளன. புராணம் வரலாறு என்பதோடு சமூக நாடகங்களையும் இவர் படைத்து நிகழ்த்தினார்.
    எதிர்க்கதை நாடகம் என்ற வகையையும் இவர் உருவாக்கியிருக்கிறார். அரிச்சந்திரன் கதையை சந்திரஹரி என்று பொய்யே பேசுகிற ஒருவன் பற்றியதாக மாற்றினார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் இவர் படைத்திருக்கிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள்:
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் புத்துயிராக விளங்கியவர்சங்கரதாஸ் சுவாமிகள். அவர் தலைசிறந்த நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார். 1918இல் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா எனச் சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் மற்ற நாடக ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத் தம் நாடகங்களுள் புகுத்தினார். நாடகங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மேடையேற்றியது இவருடைய சிறப்பாகும். வள்ளி திருமணம், பவளக் கொடி, சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள் நாடகம், அபிமன்யு சுந்தரி போன்ற இவரது நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டுதான் உள்ளன.
சுவாமிகளினால் ஏற்பட்ட நாடகப் போக்குகள்
 பாரம்பரிய வட்ட அரங்கு என்பது ஒருபக்க அரங்காக வடிவம் பெற்றது.
 வெகு சனங்கள் எனப்பெறும் எளிய மக்கள் பங்கேற்கும் அரங்கமாக வளர்ந்தது.
 இசையை, கர்நாடக இசைக் கூறுகளை முதன்மைப்படுத்தி நாடகங்கள் நிகழ்ந்தன.
 படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.
சங்கரதாஸ் சுவாமிகள்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர். தமிழ் நாடக நடிகர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான ஒரு நிலையை அறவே மாற்றினார். 1897இல் இவரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபையேதமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடக சபையாகும். பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன இவர் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார்.
பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகப் போக்குகள்
 சுவாமிகள் புராண நாடகச் செல்வாக்கை மீறி, புதுமுறை நாடகங்களைக் கண்டவர்.
 உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார்.
 நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியினை அமைத்துப் பேசும் மொழி நடையைக் கையாண்டார்.
 இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பம்மல் சம்பந்த முதலியார்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
பாவலர் 1920இல் பால மனோகர நாடக சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கினார். தனபதி, விஜய விலோசனை, பதி பக்தி, கதர் பக்தி, பம்பாய் மெயில் போன்ற நாடகங்களைஎழுதி மேடையேற்றியுள்ளார். பத்திரிகையாளராகவும், புனைகதையாசிரியராகவும் விளங்கியவர் பாவலர். அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் செல்வாக்குடன் விளங்கியதைக் கண்டு அதற்கேற்ப நாடகங்களை அமைத்தார். பாவலரின் நாடகப் போக்குகளாக,
 காந்திய இயக்கம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியது.
 மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்தது.
 பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனை கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கியது.
 அவர் காலத்திய வடுவூர் துரைசாமி, ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றியது. (கதர் பக்தி ஒரு துப்பறியும் தேசிய நாடகம் என்றே அச்சிடப்பட்டது.)
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 சி.கன்னையா
தமிழ் நாடக உலகில் பல புதுமைகளைச் செய்த பெருமையுடையவர் சி.கன்னையா. ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி இரங்கூன், யாழ்ப்பாணம் ஆகிய கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று நாடகங்களை நடத்தினார். இவருடைய நாடகக் குழுவில் 200 பேர் இருந்துள்ளனர். 10 வண்டி லாரி பெறுமானமுள்ள காட்சி அமைப்புக்களுக்கான பொருட்கள் வைத்திருந்தார். 1915ஆம் ஆண்டிலேயே கும்பகோணத்தில் காலை 10மணிக் காட்சியாக நாடகம் நடத்திய பெருமை கன்னையா அவர்களுக்கு உண்டு. சி.கன்னையாவின் தமிழ் நாடகப் போக்குகளாக,
 நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட காட்சி அமைப்புகளுடன் நாடக மேடை அமைத்தது.
 நிஜ குதிரை, தேர், யானை போன்றவற்றை மேடைக்கே கொண்டு வந்தது.
 புதுப்புது உடைகள், ஒளி அமைப்பில் எண்ணெய் விளக்குடன் கேஸ் விளக்குகளையும் பயன்படுத்தியது.
 விரிவாக விளம்பரங்கள் செய்தல், ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் முன் மேடையில் வரிசையாகப் பானைகளைக் கட்டி எதிரொலி கேட்கும் வண்ணம் செய்யும் உத்தி எனப் பல புதிய வழிமுறைகளைச் சொல்லலாம்.

சி.கன்னையா
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
 பிற முன்னோடிகள்
நவாப் இராஜ மாணிக்கம் மதுரை தேவி பால விநோத சங்கீத சபைஎன்னும் நாடகக் குழுவை 1933இல் தொடங்கினார். இவருடைய ஐயப்பன்நாடகம்தான் தமிழகத்தில் ஐயப்ப பக்தி வளர ஒரு காரணமாக இருந்தது.
நவாப் இராஜ மாணிக்கம்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
எம்.கந்தசாமி முதலியார் நடிகராகத் தொடங்கி, பின் சிறந்த நாடக ஆசிரியராகவிளங்கினார். இவர் ஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்து புதினங்கள் உட்பட, பல புதினங்களை நாடகங்களாக்கினார். தமிழில் புதினங்களை நாடகமாக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவரே.
எம்.கந்தசாமி முதலியார் 
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
நாடக அரசி எனப்படும் கும்பகோணம் பாலாமணி அம்மாள், முதன் முதலாகப் பெண்களையே முழுக்க முழுக்க வைத்து பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி என்ற குழுவைத் தொடங்கினார். 70 பெண்கள் இதில் இருந்தனர். திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய நாடகப் பணி பாதிக்குமென்று இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதிருந்தார். சமுதாய சீர்திருத்த நாடகங்களை முதன் முதலில் நடத்தியவரும் இவரே. பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர் நாடகத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
பாலாமணி அம்மாள்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
மதுரகவி பாஸ்கரதாஸ் கவிஞர், இசை அமைப்பாளர், நாடகப் பாவலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவர் தலைமையில் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில் 1920இல் ஆரம்பிக்கப்பட்டது. தேச பக்தியையும், ஆங்கில அரசிற்கெதிரான கருத்துகளையும் தைரியமாக எடுத்துரைத்த போக்கே இவரின் சிறப்பாகும்.
விஸ்வநாததாஸ், தேசியம் கலந்த நாடகப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தான் நடித்து வந்த வள்ளி திருமணம், பவளக்கொடி, நல்லதங்காள் முதலான புராண நாடகங்களிலும் இந்திய நாட்டு விடுதலையை முழக்கும் பாடல்களைப் புகுத்திப் புரட்சிசெய்தவர் விஸ்வநாததாஸ்.
ஒளவை தி.க.சண்முகம் 1925இல் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபாஎன்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின் 1950இல்டி.கே.எஸ். நாடகக் குழு தொடங்கப்பட்டது. அவருடைய நாடகங்கள் ஏதாவதொரு நீதியைப் புகட்டியது. வட்டப்புள்ளி விளக்கு, குறைப்பான் விளக்கு முதலியன இவர் நாடகத்திலேயே முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகள் இலண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஒளவையார் நாடகம் மூலம் ஒப்பனைத் திறத்திலும் புகழ் பெற்று விளங்கினார். மனிதன் நாடகத்திற்கு திரைப்படம் போலவே எழுத்துகளைக் காண்பித்தனர்.
டி.கே.எஸ் சகோதரர்கள் 
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறு வயது முதலே பல நாடகக் குழுக்களில் நடித்தார். 1944இல் என்.எஸ்.கே நாடகக் குழுவைத் தொடங்கினார். பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுடன் நல்லதம்பி, கிந்தனார் போன்ற நாடகங்கள் உருவாக்கப்பட்டன.
‘தன்மானக்’ கொள்கைகளுடன் திராவிட இயக்கத்தினர் நாடகங்கள் எழுதினர். அறிஞர் அண்ணா 1934இல் சந்திரோதயம் என்ற நாடகத்தைப் படைத்தார். தொடர்ந்து நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி எனப் பல நாடகங்களை எழுதினார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் நாடகம் மூலம் அலசியது இவருடைய தனித்த போக்காகும். தூக்குமேடை நாடகம் மூலம் அறிமுகமான கருணாநிதி, நச்சுக் கோப்பை, மந்திரி குமாரி, வெள்ளிக்கிழமை, மணிமகுடம், போர் வாள் எனப் பல நாடகங்களைப் படைத்துள்ளார். அடுக்கு மொழியிலும், அனல் தெறிக்கப் பேசுவதிலும் இவருடைய நாடகப் பாத்திரங்கள் தனித்த போக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.வி.சகஸ்ரநாமம் 1952இல் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவை ஆரம்பித்தார். அதன் மூலம் மேடையேறிய நாடகம் தாகூரின் கதையைத் தழுவியகண்கள் என்பதாகும். இந்த நாடகம் தமிழ் நாடகமேடைக்கு ஒரு திருப்பு முனையாக, கதை - காட்சி - நடிப்பு யாவற்றிலுமே மாறுதலை ஏற்படுத்தியது. பல மேனாட்டுக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டன. வானவில்என்னும் நாடகம் சுழலும் மேடை அமைத்து நடிக்கப்பட்டது. சிறந்த கதாசிரியர்களான பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் போன்றோர் கதைகளும் நாடகங்களாக்கப்பட்டன. நாடகப் பட்டறை நடத்திப் பலருக்கு நாடகப் பயிற்சியும் தந்துள்ளார் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

No comments:

Post a Comment

Translate