கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.
வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.
No comments:
Post a Comment