பிறந்த காலம் | 9ம் நூற்றாண்டு |
பிறந்த இடம் | திர்வஞ்சிக்கோலம் |
பிறந்த மாதம் | மாசி |
திருநட்சத்திரம் | புனர்பூசம் |
வேறு பெயர்கள் | கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே |
இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீடர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உளது. அதை குலசேகரர்தான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் கௌஸ்துப அம்சம் பொருந்தியவர்.
அரசமரபும் துறவும்
கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் சேவித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.
குலசேகரப்படி
திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேணுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.
பெருமாள்திருமொழி
திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம், முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன.
Super
ReplyDelete