Search This Blog

Tuesday, July 5, 2011

சித்தர்கள் யார் ? ? ? ?

           இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.

          சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.

சித்தர்களின் அடையாளம்
          நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!

          சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.


                   இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

          சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை, உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை, அறநிலை உணர்வை, மெய்யடைதலை சித்தி எய்தல் எனலாம்.

         
கொள்கை

          பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தவர் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

சித்த வைத்தியம்

          சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர்.

          மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."

சித்தர்களின் இரசவாதம்

          "சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் மறைவாக ஈடுபட்டிருந்திருக்கின்றனர். இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

          மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.

சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி

          சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

          காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சித்தர்களின் ஞானம்

          மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. 

3 comments:

  1. ஜீவகாருண்ய ஒழுக்கம் சாப்பாடு போடுவதல்ல!

    http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_27.html

    ReplyDelete
  2. BUT SIDDHARGAL KNOWS THE ANATOMY AND THEY INVENT SO MANY MEDICINE TO LIVE A BETTER LIFE AND THEY TEACH US HOW TO WIN THE DEATH TOO. THEY NEVER DIE. THEY MAY BE GO TO A jeeva samadhi.

    ReplyDelete
  3. Yes i like this study. fine one for the coming up new generation. I request you to publish more details about the siddhargal and siddha medicine. Becasuse they are hidden treasures should be hideout and reach the ordinary common man. To live a better life and long life without harming the eco system.

    ReplyDelete

Translate