Search This Blog

Thursday, July 14, 2011

ஆழ்வார்கள்

 திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம்.

        ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர்.

        கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
        பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:

·         பொய்கையாழ்வார்
·         பூதத்தாழ்வார்
·         பேயாழ்வார்
·         திருமழிசையாழ்வார்
·         நம்மாழ்வார்
·         மதுரகவி ஆழ்வார்
·         குலசேகர ஆழ்வார்
·         பெரியாழ்வார்
·         ஆண்டாள்
·         தொண்டரடிப்பொடியாழ்வார்
·         திருப்பாணாழ்வார்
·         திருமங்கையாழ்வார்

        இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு.

No comments:

Post a Comment

Translate