Search This Blog

Thursday, June 9, 2011

18. கலிக்கம்ப நாயனார்


“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
நடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி திருப்பெண்ணாடகம் என்பது. அவ்வூரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்ப நாயனார். அவர் சிவனடிப்பற்றாகிய அன்புடனே வளர்ந்து அப்பதியில் தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத்தொண்டிலேயே பற்றாகப் பற்றிப் பணிசெய்து வந்தனர். அவர் வேறு ஒரு பற்றுமில்லாதவர். சிவன் அடியார்களிற்கு விதிப்படி இனிய திருவமுதினை ஊட்டி வேண்டுவனவற்றை இன்பம் பொருந்த அளித்து வந்தார்.
ஒருநாள் முன்போலத் திருவமுது உண்ணவந்த அடியார்களின் திருவடிகளை மனைவியார் நீர் வார்க்கத் தாம் விளக்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது முன்னர் தம் ஏவலாளராய் இருந்து ஏவலை வெறுத்து சென்ற ஒருவர், சிவனடியாரது திருவேடத்துடன் வந்தார். அவரது திருவடியினை விளக்குவதற்கு, நாயனார் அவரது அடியினைப் பிடித்தார். அப்போது மனைவியார், “இவர் முன்பு ஏவல் செய்யாது அகன்றவர் போலும்” என்று தயங்கியதால் நீர்வார்க்கத் முட்டுப்பாடு நிகழ்ந்தது. நாயனார் மனைவியாரைப் பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை (தண்ணிச் செம்பு) வாங்கிக்கொண்டு அம்மனைவியாரது கையை வாளினால் வெட்டினார்; அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார். இவ்வாறு பல நாள் சிவதொண்டாற்றித் திருவடிநீழலை அடைந்தார்.

No comments:

Post a Comment

Translate