Search This Blog

Friday, June 17, 2011

51. புகழ்ச்சோழ நாயனார்

பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்” – திருத்தொண்டத் தொகை

சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்த அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கரும், குடபுலமன்னவர்களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறைபெறற் பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட்டு அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள் கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் அருளினர். அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.
இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் பட்டத்து யானையினையும், பாகரையும் எறிந்து கொன்ற எறிபத்தரிடம் யானையால் நேர்ந்த சிவ அபராதத்திற்குத் தீர்வாகத் தம்மையே கொல்லவேண்டும் என்று தம் உடைவாளினை நீட்டித்த் திருத்தொண்டில் தலை நின்றவர்.

இந்நாளில் அளந்து திறை கொணராது முரண்பட்ட அதிகன் என்பவன் அணித்தாகிய மலை அரணில் உள்ளான் என்று அமைச்சர் அரசர்க்கு அறிவித்தனர். படை எழுந்து அவ்வரணியை அழித்து வரும்படி அமைச்சர்க்கு அரசர் கட்டளை இட்டார். அமைச்சர்களும் அவ்வாறே சேனையுடன் சென்று அவ்வலிய அரணை முற்றுகை இட்டு அழித்து அதிகனது சேனையினை வென்றனர். அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் வெற்றியுடனே அங்கு நின்றும் யானை, குதிரை முதலியவற்றையும் போர்ச்சின்னமாகத் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல்களுள் அரசர், ஒரு தலையிற் புன்சடையைக் கண்டார். கண்டு நடுங்கி தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகா இது என்று தம்மை இகழ்ந்து கொண்டார். ஒன்று செய்யத் துணிந்து தம் குமரனுக்கு முடிசூட்டும் படி அமைச்சருக்குக் கட்டளை இட்டார். தமக்குச் சேர்ந்த சிவ அபராதகமாகிய பழிக்குத் தீர்வு தாமே வகுப்பராகிச் செந்தீமுன் வளர்ப்பித்தார். பொய்ம்மாற்றும் திருநீற்றுக் கோலம் புனைந்தனர். அச்சடையினைப் பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்த்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட் புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழற்கீழ் நீங்காது அமைந்திருந்தனர்.

No comments:

Post a Comment

Translate