திருவெருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டிலுள்ள திருத்தலங்களை வணங்கி பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார். அங்கு திருவாலவாய்த் திருக்கோயிலின் வாயிலை அடைந்து முன்நின்று இறைவனது புகழ்சேர் புகழ்மாலைகளை யாழிலிட்டு இசைத்துப்போற்றினார். அவ்வின்னிசையைக் கேட்டு மகிழ்ந்த ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்க்கெல்லாம் கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி பணித்தருளினார். அவ்வாறே பாணனார்க்கும் உணர்த்தியருளினார். இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினிற் சீதம் தாக்கில் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும் என்று பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.
ஆலாவாயிறைவரைப் போற்றி அருள் பெற்ற பெரும்பாணர் பல தலங்களையும் வழிபட்டுத் திருவாரூரரை அடைந்தார். அங்கு தமது குல மரபின் படி கோயில் வாயிலின் முன் நின்று இறைவர் புகழ்த்திறங்களை யாழில் இட்டு இசைத்தார். பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, வடதிசையில் வேறொரு வாயிலை வகுத்தருளினார். பாணர் அவ்வழுயே புகுந்து ஆரூர்த்திருமூலட்டானத்து அமர்ந்த இறைவர் முன் சென்று ஆளுடைய பிள்ளையாரை வணங்கும் விருப்பினராய்க் காழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் ஈறில் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார்.

No comments:
Post a Comment